பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மத்திய அரசுப் பணிகளில் சேர...!

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால், எளிதில் அந்தப் பணிகளைக் கைப்பற்றலாம்'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவரிடம் பேசியதிலிருந்து...

News image
Updated On :18 ஏப்ரல் 2016, 2:05 pm

வி.குமாரமுருகன்

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால், எளிதில் அந்தப் பணிகளைக் கைப்பற்றலாம்'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவரிடம் பேசியதிலிருந்து...

""மத்திய அரசிலும் அதைச் சார்ந்துள்ள வங்கிகளிலும்,  ONGC, LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆண்டு தோறும் மிக அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளாக இந்தி படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மத்திய செயலகத்திலும் (Central Secretariat) அமைச்சகத்திற்கு கீழ் உள்ள அலுவலகங்களிலும் (Attached and Subordinate Offices) ஆண்டுதோறும் இந்தி படித்தவர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். மத்திய கீழ்நிலைத் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் இளநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர்கள் (Junior Hindi Translator) மற்றும் மத்திய இந்திப் பயிற்சி நிறுவனத்திலுள்ள (Central Hindi Training Institute) ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தேர்வு நடத்துகிறது. இதற்கு முக்கியமான தகுதி முதுநிலை அளவில் (M.A) ஆங்கிலமும் இளநிலை அளவில் (B.A) இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலை அளவில் (M.A. Hindi) இந்தியும் மற்றும் இளநிலை அளவில் ஆங்கிலமும் ஒருபாடத்துடன் தேறியிருக்க வேண்டும்.

இளநிலை இந்தி மொழி பெயர்ப்பாளர் தேர்வில் (JHT) ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்க்க வேண்டிய பகுதிகள் கொடுப்பார்கள். சில நேரங்களில் கட்டுரைகளும் இருக்கும். மத்திய இந்தி பயிற்சி நிறுவன வேலைகளுக்கு கல்வியியல் பட்டமும் தேவை. மொழி பெயர்ப்புப் பட்டயமும், மொழியியல் (Linguistic) பட்டயமும் விரும்பத் தகுந்த தகுதிகளாகும். இவ்வேலைகளுக்கு தாசில்தார் பணிக்கு இணையான சம்பளம் உண்டு.

தமிழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் (M.A., English) அநேக கல்லூரிகளில் உள்ளன. முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் தனியாக இந்தி இளங்கலை அளவில் தேறி இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். Group IV, VAO போன்ற தேர்வுகளில் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். வெற்றி கிடைப்பது மிக மிக அரிதாக இருக்கிறது. இந்தி மொழி பெயர்ப்பாளர் தேர்வுகளில் 50 ஆயிரத்துக்கும் குறைந்த தேர்வர்களே இருப்பார்கள். ஆதலால் வெற்றி கிடைப்பது சற்று எளிதாக இருக்கும்.

இந்தியில் முதுநிலைப்பட்டமும் - அதற்கு மேலும் படித்திருந்தால் எளிதாக வேலை கிடைக்கும். தென்னிந்திய இந்தி பிரசார சபை பல்வேறு நிலைகளுக்கான இந்தித் தேர்வுகளை ஆண்டிற்கு இருமுறை நடத்துகிறார்கள். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள், படிக்கும் காலத்திலேயே பிராத்மிக், மத்யமா, ராஸ்டிர பாஷா (பிளஸ்-2 நிலை), பிரவேசிகா, விஷாரத் (Degree level), மற்றும் பிரவீண் (M.A. level). போன்ற தேர்வுகளை படிப்படியாக எழுதி வெற்றி கொள்ளலாம். ஏதாவது ஒரு Degree வைத்திருப்பவர்கள் மட்டுமே பிரவீன் தேர்வு தேறிய பின் M.A.க்கு இணையாகக் கருதப்படுவார்கள். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள், படிக்கும் காலத்திலோ படித்து முடிந்த இரண்டு மூன்று ஆண்டுகளிலோ பிரவீண் தேறினால் மத்திய அரசில் அதிகாரிகளாக ஆவதற்கு அருமையான வாய்ப்புகள் உள்ளன. மத்திய இந்தி இயக்குநரகமும் (Central Hindi Directorate) அஞ்சல் வழியாக பல்வேறு நிலையில் உள்ள தேர்வுகள் நடத்துகிறார்கள். தமிழக இளைஞர்கள் இதன் மூலம் படித்துப் பயன் பெறலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.