நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்! இலக்கை அடையும் வரை... வழிகாட்டுதல்கள் தேவை!

குடிமைப்பணித் தேர்வுகளில் வினாக்கள் அமைகின்ற பகுதிகள் தொடர்பாக கடந்த பகுதியில் பார்த்தோம். இப்பகுதியில் UPDATE செய்யப்பட்ட பாடக்குறிப்பேடுகளின் முக்கியத்துவம் பற்றிக் காண்போம்.

News image
Updated On :25 ஏப்ரல் 2016, 4:26 pm

மு.சிபிகுமரன்

குடிமைப்பணித் தேர்வுகளில் வினாக்கள் அமைகின்ற பகுதிகள் தொடர்பாக கடந்த பகுதியில் பார்த்தோம். இப்பகுதியில் UPDATE செய்யப்பட்ட பாடக்குறிப்பேடுகளின் முக்கியத்துவம் பற்றிக் காண்போம்.

மிகச் சரியான பாடக்குறிப்பேடுகளை தேர்ந்தெடுத்தலும், தொகுத்தலும், பயன்படுத்துதலும் வெற்றிக்கான முதல்படியாகும்.

தனது இலக்கை அடையும்வரை கவனம் விலகாத பிடிப்பும், பற்றும் ஒரு தேர்வருக்கு அவசியமானவை. 23 வகையான பணிகளைக் கொண்டவை குடிமைப்பணிகள். அதில் ஏதேனும் ஒரு பணியினைப் பெற்ற பிறகு சில தேர்வர்கள் நிறைவு பெற்றுவிடுவதுண்டு. சில தேர்வர்கள் அதில் மாறுபட்டு ஐ.ஏ.எஸ் பணிவாய்ப்பு பெறும் வரையும் போராடுவதுண்டு.

கிராமப்புறங்களில் இருந்து வந்து கடும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் நான்கு, ஐந்து ஆண்டுகள் போராடி முதல்நிலைத்தேர்வில் வென்று, பின் முதன்மைத்தேர்வில் வென்று நேர்முகத்தேர்வு செல்லும்போது ஏதேனும் ஒரு பணிவாய்ப்புக் கிடைத்தால்போதும் என்ற அளவில் தேர்வர் மனதால் சோர்ந்துவிடுவர்.

இதில் சமூக நெருக்கடியும் உண்டு. ஏனெனில் தேர்வர் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பிறகோஅல்லது மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்தோ தேர்வுக்குத் தயாராகத் தொடங்கியிருக்கலாம்.

ஆகவே, முழுமையாகத் தேர்வு பற்றிய புரிதல் அவருக்கு 25 அல்லது 26 வயதில் வந்திருக்கலாம். இதிலிருந்து நான்கு ஐந்து ஆண்டுகள் என்பது ஏறத்தாழ முப்பது வயதினை நெருங்கியோ தாண்டியோ சென்றுவிடும். அதனால் 20 முதல் 30 வயது என்பது தேர்வரின் வாழ்வில் மிக மிக முக்கியமான காலகட்டம் ஆகும்.

இதுபோன்ற சூழல்களில் பெண் தேர்வர்களின் நிலை பற்றிக் கூறவே வேண்டியதில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் மன உளைச்சலும் எண்ணிலடங்கா.

தேர்வு பற்றிய எதார்த்தங்களையே புரிந்து கொள்ள முடியாத வெளிச்சமூகத்தின் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இத்தேர்வர்களின் மனதை மிக எளிதாய் உடைத்துப் போட்டுவிடும். அவ்வளவு உணர்வுப்பூர்வமானவர்களாக தேர்வர்கள் இருப்பர். அதிலும் மிகவும் ஈடுபாட்டோடும், தியாக உணர்வோடும் படித்த தேர்வர்கள் அடையும் துயரத்தை எடுத்துக் கூறுவது கடினம்.

இலட்சிய இலக்கினை அடையவேண்டும் என்ற உந்துதலில், நம்பிக்கையோடு தொடர்ந்து செல்லும் அவர்களது விடாமுயற்சியை நாம் வெற்றிக்கான மவுனப்போராட்டம் என்றே கூறலாம்.

நிச்சயம் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையில் தளராத உழைப்பும், முயற்சியும் ஒருபுறம். அதற்கான UPDATE செய்யப்பட்ட பாடநூல்கள் சேகரிப்பு மறுபுறம்.

அதே நேரத்தில் தன்னுடன் கல்லூரியில் படித்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிவாய்ப்புப் பெற்று நிறையச் சம்பளம் பெறுகின்ற செய்திகள் வந்து சேரும். தன்னுடன் ஒன்றாகத் தேர்வுக்கு படித்த சக தோழர் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த செய்தியும் வரும்.

இச்சூழலில் தான் எழுதிய தேர்வின் முடிவுகள் வரும்போது தேர்வருக்கு பின்னடைவு என்றால், அந்த வேதனையான வெறுமைக்கு எல்லை இல்லை. இத்தனையும் தாங்கிக் கொண்டு இவற்றைத் தகர்த்தெறிந்து படைக்கப்படுவதால்தான் குடிமைப்பணித் தேர்வுகளின் வெற்றி சாதனையாகிவிடுகின்றது.

மண்ணின் மவுனம் கலைக்கும் விதைகள் போல, மரத்தின் மவுனம் கலைக்கும் காற்றைப் போல, கடலின் மவுனம் கலைக்கும் அலைகள் போல, உயிரின் மவுனம் கலைக்கும் உயிர்ப்பு போல, உடலின் மவுனம் கலைக்கும் உழைப்பு போல, தோல்வியின் நெடிய மவுனத்தை தொடர் முயற்சியால் ஒரு தேர்வர் கலைத்து விடுகின்றார்.

குறிப்பாக சமீபகாலங்களில் விஜயா மற்றும் கனகவள்ளி என்ற இரு பெண் தேர்வர்கள் பல்வேறு சோதனைகளைத் தாண்டி வெற்றிச் சிகரம் தொட்டவர்கள்.

இருவரும் தற்போது ஐ.ஏ.எஸ் பணிவாய்ப்பு பெற்று வெவ்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டிக் கொண்டிருப்பவர்கள்.

தோல்விகளைத் தாங்கிக் கொண்டு மேலும் உழைக்கின்ற மனோதிடம் இருந்தால், இலக்கு மாறாத பயணத்திட்டம் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு விஜயா நல்ல உதாரணம்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வேளாண்மையில் பட்டம் பெற்றவர். குடிமைப்பணித் தேர்வுகளை எழுத வேண்டும். அத்துடன் அதில் ஐ.ஏ.எஸ் பணிவாய்ப்புப் பெற வேண்டும் என்ற இலட்சியக் கனவினை நெஞ்சில் நிறுத்திக் கொண்டவர். அதற்காக தொடர்ந்து தளராத முயற்சியினை மேற்கொண்டவர்.

விஜயாவின் முயற்சிக்குத் தடை போடாதவர் அவரது தந்தையார். கட்டாயம் நான் ஐ.ஏ.எஸ் ஆவேன் என்று உறுதி கூறி அவரிடம் படிப்பதற்கு அனுமதி பெறுகிறார். தோல்விகள் பல வந்தபோதும், விஜயா மன உறுதியோடு உழைக்கிறார். வெற்றியினை நெருங்க முடியவில்லை என்ற அச்சம் மன உறுதிமிக்க விஜயாவையும் விட்டு வைக்கவில்லை.

அப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் தோன்றுகிறது. நமது முயற்சிக்கெல்லாம் தடையே கூறாமல் தன்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தந்தையை இப்படி ஒரு துறையை தேர்ந்தெடுத்துவிட்டு நாம் ஏமாற்றுகின்றோமோ என்று எண்ணுகிறார்.

இருப்பினும் அதனைத் தனக்குள்ளே புதைத்துக் கொண்டு தனது 3 - வது முயற்சியினைத் தொடர்கிறார். முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளில் வெல்கிறார். நேர்முகத் தேர்வு செல்கிறார். அதிலும் வென்றார். கலால் மற்றும் சுங்க வரி அடங்கிய இந்திய வருவாய்ப்பணி வாய்ப்பினைப் பெற்றார்.

இப்பொழுது அவருக்குள் மற்றொரு வைராக்கியம் பிறந்துவிடுகின்றது. தேர்வில் வெற்றி பெற்றாகிவிட்டது. ஆனால் தந்தையிடம் உறுதி கொடுத்தது போல் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று அடுத்த முயற்சியைத் தொடர்கிறார்.

அவர் பணிக்குச் செல்வதற்கு முன்னும், சென்றதற்குப் பின்னும் அவர் பின்பற்றிய ஒன்றே ஒன்று UPDATE செய்யப்பட்ட பாடக் குறிப்புகளைப் பெறுவது. அவற்றை தொடர்ந்து படிப்பது மட்டுமே.

சில வினாக்களை எழுதிப் பாருங்கள். சில வகுப்புகளில் அமர்ந்து கேளுங்கள் என்றெல்லாம் அவரிடம் நாம் கூறியதுண்டு. அப்போதெல்லாம் நேரமின்மை காரணமாக அவர், ""எனக்கு தொடர்ந்து UPDATE பாடக் குறிப்புகளையும், மாதிரிக் கேள்வித் தாள்களையும் மட்டும் கொடுங்கள். அவ்வப்போது ஓய்வு கிடைக்கும்போது நான் பதில் எழுதிவிடுவேன். தேர்வுக்கும் தயாராகிவிடுவேன்'' என்று நம்பிக்கையோடு கூறுவார்.

விஜயா 2012 ஆம் ஆண்டு தனது 7ஆவது முயற்சியாகத் தேர்வினை எழுதுகிறார். முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத்தேர்விலும் வெற்றி பெறுகிறார். 2013 ஆம் ஆண்டு நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் தேர்வர்களுக்காக மாதிரி நேர்காணல் ஒன்று நடத்தினோம்.

ஏற்கெனவே விஜயா ஐ.ஆர்.எஸ்.பணியில் இருந்ததால் அவரையும் தேர்வுக்குழுவின் EXPERT -ஆக அழைத்திருந்தோம். அவரோ நேர்முகத்தேர்வு செல்லும் தனக்குத்தான் வழிகாட்ட அழைத்துள்ளார்கள் என நினைத்து வந்துள்ளார்.

அவர் அப்போது, ""மாதிரி நேர்காணலில் யார் யார் வழிகாட்டுகிறார்கள்?'' என்று கேட்டார். நான் சில குடிமைப்பணி அதிகாரிகளின் பெயரைக் கூறியதோடு விஜயாவின் பெயரையும் சேர்த்துக் கூறினேன். உடனே அவர் கூறிய பதில், தேர்வர்களுக்குப் பயன்படும் என்பதால் இங்கே பதிவிடுகின்றேன்.

""நான் என்னை ஐ.ஏ.எஸ் பணிக்கு உயர்த்திக் கொள்வதற்காகவே வந்துள்ளேன். நான் நிர்ணயித்த இலக்கை இன்னும் அடையவில்லை. எனக்கு இன்னும் தகுந்த வழிகாட்டுதல்கள் தேவை'' என்றார். மாதிரி நேர்காணலுக்கு வழிகாட்டுவதற்காக அழைக்கப்பட்டவர். ஒரு தேர்வராக நேர்காணலில் கலந்து கொள்கிறார்.

அவர் ஐ.ஆர்.எஸ் பணிவாய்ப்பு பெற்ற பிறகும், தன்னுடைய ஆளுமைத் திறன் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனையில் சிறிதும் மாறாதவராக, மேலும் மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வர் உள்ளவராகவே இருந்தார்.

நேர்முகத்தேர்வு செல்கிறார். மீண்டும் வெல்கிறார் விஜயா. தேசிய அளவில் 34 ஆவது நிலையிலும், மாநில அளவில் 30ஆவது நிலையிலும் தேர்ச்சி பெறுகிறார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.