குறைந்த முதலீடு... அதிக வேலை வாய்ப்பு!
வீட்டைக் கட்டிப் பார்... என்றது அந்தக் காலம். கட்டிய வீட்டைப் பராமரித்துப் பார்... என்பது இன்றைய காலம். வீட்டைப் பராமரிப்பது அந்த அளவுக்குச் சிரமமாக இருக்கிறது.


வீட்டைக் கட்டிப் பார்... என்றது அந்தக் காலம். கட்டிய வீட்டைப் பராமரித்துப் பார்... என்பது இன்றைய காலம். வீட்டைப் பராமரிப்பது அந்த அளவுக்குச் சிரமமாக இருக்கிறது.
புதிய வீடுகளில் எல்லாம் முடித்துக் குடியேறிய பிறகு ஏதேனும் மாற்ற வேண்டும் என்றாலோ, பழைய வீடுகளில் வாடகைக்குக் குடிபுகுபவர்களுக்கும், சொந்த வீடாக இருந்தாலும் தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டிற்குள் ஏதேனும் மாற்ற வேண்டும், பழுது நீக்க வேண்டும் என்றாலோ, அதற்கான ஆட்கள் கிடைப்பது மிகப் பெரிய போராட்டமாகவே அமைகிறது.
குறிப்பாக மின் தொடர்பு, தண்ணீர் குழாய் அமைப்பு, கழிவு நீர் அகற்றும் அமைப்பு, கழிவறை நீர் அமைப்பு போன்றவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க தகுதி வாய்ந்த, வேலை தெரிந்த நபர்கள் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது.
இவையெல்லாம் மோசமான வேலைகள், பெருமையற்ற வேலைகள் என்ற காலம் போய்விட்டது. அவசியமான பணிகளில் இவையெல்லாம் சேர்ந்துவிட்டன. அரிதாகவே இந்த பழுதுகள் ஏற்பட்டாலும், பழுதாகிவிட்டால் உடனடியாகச் சரி செய்தேயாக வேண்டிய நிலை.
முன்பு வீட்டிலிருந்த ஆண்களே ஓரளவுக்கு எல்லா வேலைகளையும் கற்று வைத்திருந்தனர். ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை, கல்விமுறை மாறிவிட்டதால், ஒவ்வொன்றுக்கும் பிறரையே நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே வீட்டு ஒயரிங் வேலைகள், ப்ளெம்பிங் வேலைகள், கழிவு நீர் அகற்றும் பணி போன்றவற்றை கற்றுக் கொண்டால் நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது. வேலையில்லாமல் சும்மா இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த வேலைகளைக் கற்றுக் கொடுக்க நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகள் பல தொழிற் பயிற்சி நிலையங்களை நடத்தி வருகின்றன. 8 ஆவது முடித்தவர்கள் இந்தப் பயிற்சிகளில் சேர்ந்து பயிலலாம். அல்லது அவ்வப்போது இவர்களால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் எவர் வேண்டுமானாலும் சேர்ந்து பயிற்சி பெறலாம். சான்றிதழ், பட்டயப் படிப்புகளாக நடத்தப்படும் இவற்றின் இறுதியில் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்று சுய தொழிலாக இவற்றைச் செய்யலாம். படித்த வேலை வாய்ப்பில்லாத ஆண்கள், பெண்களை பணியில் அமர்த்தி அல்லது கூட்டாக சேர்த்து நல்ல முறையில் செயல்படலாம். சிந்தித்துச் செயல்படும் திறமையே இந்தப் பணிகளுக்கு அடிப்படையாகும். தரம், நேரம் தவறாமை போன்றவை அடிப்படையானவை.
நடுவண் அரசின் கீழ் செயல்படும் எம்எஸ்எம்ஈ என்று குறிப்பிடப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனம் நடத்துகின்ற வீட்டு மின்சார பழுது நீக்கப் பயிற்சி பற்றிய விவரங்களை http://www.idtr.gov.in/idtr/training/mtc/wireman.php என்ற வலைதளத்தில் பார்த்தறியலாம்.
தமிழ்நாடு அரசின் தொழில் பயிற்சி நிறுவனமான ஐடிஐயின் பல பயிலகங்களில் ஹவுஸ் ஒயரிங், பிளெமிங் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றிய விவரங்களை http://www.tnrd.gov.in/externallyaidedprojects/Vazhndhukattuvom/ skilltraininginstitutes/Cuddalore.pdf என்ற வலைதளத்தில் பார்த்து அறியலாம்.
ஏதோ படிப்பு குறைவானவர்கள் படிப்பதற்கானவை இவை என்று கருத வேண்டாம். கீழ் நிலை பணிகளில் தான் தற்போது வேலை வாய்ப்பும், அதிக வருமானம் தரக்கூடிய சுயதொழில் வாய்ப்பும் நிறைந்துள்ளது என்பது உங்களது அனுபவத்திலேயே நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
அரசுகள் நடத்தும் பயிலகங்கள் தவிர, டிவிஎஸ் நிறுவனம் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் நிறுவி நடத்தி வரும் தங்களது பயிற்சி நிலையங்கள் மூலம் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றோருக்கும் இதே போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். இந்தியாவின் பல நகரங்களில் நடத்தப்படும் சிறப்பு ஒயரிங் பயிற்சி வகுப்புகளை http://dir.indiamart.com/impcat/wiring-training.html என்ற வலைதளத்தில் பார்த்து அறியலாம்.
இந்தப் பயிற்சிகளை முடித்த பிறகு சுயமாக தொழில் துவங்க பெரிய முதலீடுகள் தேவையில்லை. சில நூறு ரூபாய் இருந்தால் கூட உடனடியாகப் பணியைத் துவக்கலாம். கூட்டமைப்பாக செயல்படத் துவங்கும்போது கூட சில ஆயிரம் ரூபாய்கள் போதும்.
தனியார் நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், தனியார் குடியிருப்புப் பகுதிகள் போன்றவற்றிற்கு நம்மைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துவிட்டு காத்திருந்தால் போதும். ஒரு சில வாரங்களிலேயே, சிறப்பான சேவையளிப்பதன் மூலம் நமது பெயர் பரவத் துவங்கிவிடும். முயற்சியும், சிறந்த செயல்பாடுகளும் நல்ல பலனை கொடுக்கும் பகுதிகளில் இந்த வீடுகளுக்கான அடிப்படை சேவைப் பணிகள் சிறந்த இடத்தில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...