நாளை நான் ஐஏஎஸ்! விழாமல் எழுந்த அலை இல்லை!
இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி அதில் வெற்றி பெறுவதை இலட்சியமாக நீங்கள் கொண்டுள்ளீர்கள். இலட்சியம் என்பது வெறும்


இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி அதில் வெற்றி பெறுவதை இலட்சியமாக நீங்கள் கொண்டுள்ளீர்கள். இலட்சியம் என்பது வெறும் எண்ணத்தையும், சிந்தனையையும் மட்டுமே உள்ளடக்கியதல்ல என்பதை நினைவிற் கொள்ளுதல் முக்கியம். அது செயல் வடிவத்தினை உயிரோட்டமாகக் கொண்டது,
இத்தேர்வினைப் பொறுத்த மட்டில் ஒரு தேர்வர் எடுக்கும் முயற்சியின் அளவுக்கு எல்லை என்பதே கிடையாது. இந்த நூல்களை மட்டும் படித்தால் போதும்; இத்தனை மணிநேரம் படித்தால்போதும்; இவ்வாறெல்லாம் அளவீடுகள் வைத்துக் கொள்ள முடியாது. இத்தகைய அளவீடுகளை வைத்துக் கொண்டால் இலக்கையும் எய்த இயலாது.
அடைவதற்கு அரிதான இலக்காக உள்ளதாலேயே இவ்விலக்கினை அடைவதை இலட்சியம் என்கிறோம். எண்ணமும், சிந்தனையும் செயல் வடிவம் பெறும்போதே கொண்ட இலட்சியம் ஈடேறுகிறது.
அதனால் தேர்வுக்குத் தயாராகும்போது முழுமையான அர்ப்பணிப்புடன், தயாராக வேண்டும். வெற்றியும், பின்னடைவும் இயல்பானதே. ஒவ்வொரு மனிதனையும் வாழ்வில் இந்த இரண்டும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னும், விண்ணப்பித்த பின்னும், முழு மனதுடன் படிக்க வேண்டும். தேர்வு நாள் நெருங்க, நெருங்க பதட்டம் உருவாவது இயல்பே. இந்நேரத்தில் தான் நாம் மேலும் தீவிர முயற்சியுடன் படிக்க வேண்டும்.
தேர்வு மையத்திற்குத் தேர்வு எழுதச் செல்லும்போது, உள்ளத்தில் நம்பிக்கையொளி பொங்கிட நிச்சயம் வெல்வோம் என்ற உறுதியோடு செல்ல வேண்டும். வினாத்தாளின் இறுதி வினாவுக்கு விடையளிக்கும் வரை ஒவ்வொரு வினாவையும் தளராத உத்வேகத்துடன் அணுக வேண்டும்.
ஒரு வேளை வினாக்கள் கடினமாக இருப்பதாக நீங்கள் கருதினால், அதற்காகக் கலங்கிட வேண்டாம். கடினம் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, தேர்வினை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்வரும் இதனை உணர்வர் என்பதனை மறந்திட வேண்டாம்.
எனவே, தேர்வின் கடைசி நிமிடம் வரை கவனம் சிதறாத அணுகுமுறை அவசியம். ஆகவே, தேர்வுக்கான நேரத்தினை இறுதி நொடிவரை பயன்படுத்துங்கள். இது ஓர் அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தினேன் என்ற நிறைவை உங்கள் நெஞ்சம் உணர வேண்டும். அத்தகைய வகையில் உங்களின் உழைப்பும், செயலும் இருந்திடல் வேண்டும்.
முதல்நிலைத் தேர்வினை முடித்தவுடன் காலதாமதமின்றி உடனடியாக முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்புகளில் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.
தேர்வுக்கான பாடத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அல்லது சில ஆண்டுகளுக்கொரு முறை மாறிக் கொண்டேதானிருக்கும். அடுத்தாண்டு பாடத்திட்டம் மாறும் என்று நிகழ்கால வாய்ப்பை, காலத்தை வீணடிக்கும் தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
""அடுத்தமுறை விருப்பப்பாடம் இருக்காது. நான் அப்போது பார்த்துக் கொள்கிறேன்'' என்றெல்லாம் கூறுகின்ற தேர்வர்களை நாம் பார்க்கிறோம். உங்களுக்குத் தெரியும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் வரலாறு படைக்கிறார்கள் என்று.
உங்களால் முடிந்த அதிகபட்ச கடின உழைப்பை, மிகச்சிறந்த முயற்சியை வழங்கிடத் தவறிவிடாதீர்கள். நடைபெற இருக்கின்ற இத்தேர்வு உங்களுக்கானது என்று நம்புங்கள். உங்களின் வெற்றிக்கானது என்று மீண்டும் மீண்டும் மனதிற்குச் சொல்லுங்கள். விழாமல் எழுந்த அலையும் இல்லை. உளி தொடாமல் பிறந்த சிலையும் இல்லை. முடிவுகள் எத்தன்மையானதெனினும் ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். ஆனால் முயற்சியை மட்டும் தொடருங்கள்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட குடிமைப்பணித்தேர்வில் வென்ற ஒரு வெற்றியாளரின் மன உறுதிமிக்க போராட்டத்தினை இந்த இடத்தில் எடுத்துக்காட்டாகக் கூறுவது பொருத்தமாக இருக்குமெனக் கருதுகிறேன்.
அவர் பெயர் து.கெüரிசங்கர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வடுகப்பட்டி எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வினை எழுதுகிறார். தமிழை விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டவர். முதல் முயற்சியிலேயே முதல்நிலைத்தேர்வில் வெல்கிறார். முதன்மைத்தேர்விலும் வெல்கிறார். நேர்முகத்தேர்வு செல்கிறார். சிறப்பாக எதிர்கொள்கிறார். வெற்றிப்பட்டியல் வெளியிடப்படுகிறது. அவரது பெயர் இல்லை. ஆனால் காத்திருப்போர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுவிட்டது.
காத்திருப்போர் பட்டியலில் இருந்து தனக்கு பணி கிடைக்குமென அதற்காக காத்திருக்காமல் 2014 ஆம் ஆண்டு தேர்வுக்குத் தயாராகத் தொடங்கிவிடுகிறார். மீண்டும் முதல்நிலைத்தேர்வில் வென்று முதன்மைத் தேர்வுக்குத் தயாராகிறார். தீவிரமாகப் படிக்கிறார். பாடங்களைப் படிப்பதற்கான நேரத்தினைத் திட்டமிடுகிறார். அட்டவணை தயார் செய்கிறார். முழுவீச்சில் படிக்கத் தொடங்குகிறார். முதல் பட்டியலிலேயே இடம்பெற்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உழைக்கிறார்.
வகுப்புகள் செல்வதற்கும் நேரம் ஒதுக்கி வகுப்புகளுக்கு வருகிறார். குறிப்புகள் எடுக்கிறார். வினாக்களுக்கான விடைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அவ்வப்போது கூறப்படும் சிறிய சிறிய திருத்தங்களை ஏற்றுக் கொண்டு தனது விடையளிக்கும் கட்டமைப்பினை செழுமைப்படுத்திக் கொள்கிறார்.
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் கொண்ட அந்த இளைஞரை காலம் கடுமையாக சோதித்தது. முதன்மைத் தேர்வுக்கு ஒருமாத கால அவகாசம் இருக்கும்போது ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார். மருத்துவர் 1 மாத காலம் முழுமையான ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார்.
இதயத்தின் துடிப்பிலும், உள்ளத்தின் நினைப்பிலும் இலட்சியத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத அந்த இளைஞரை, காலம் சொல்லொணாத் துயருக்குள் தள்ளியது. அவர் பேசக் கூடிய அளவுக்கு உடல்நிலை தேறியவுடன் என்னை அலைபேசியில் தொடர்பு கொள்கிறார்.
போட்டித் தேர்வர்களே அவர் கூறியதை அப்படியே தருகிறேன். அவரது பேச்சைக் கேட்டவுடன் மன உறுதியென்னும் மந்திரத்தின் வார்த்தைகள் இப்படித்தான் இருக்குமோ? என எண்ணத் தோன்றியது.
""ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது நான் உங்களுடன் அலைபேசியில் பேச முடியும். அந்நேரத்தில் முக்கியமான பாடப்பகுதிகளை எனக்கு விளக்கிக் கூறுங்கள். வினாக்களையும் கொடுத்துவிடுங்கள். நான் விடையினை எழுதி இ-மெயிலில் அனுப்பிவிடுகின்றேன். அதை நீங்கள் திருத்தித் தரவேண்டும். நான் நிச்சயம் வெல்வேன் என்று நம்புகிறேன். மேலும், எனக்கு தேர்வு எழுதும் அறையை கீழ்த்தளத்தில் தர வேண்டுமாய் நான் தேர்வாணையத்திற்கு கடிதமும் எழுதியுள்ளேன்''
இவைதான் அவர் பேசியவை.
அவர் கூறியபடி அத்தனை முயற்சிகளும் நடந்தன. முதன்மைத் தேர்வையும் சிறப்பாக எழுதினார். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டார். தேர்ச்சிப்பட்டியல் வெளியிடப்படுகின்றது. ஆனால் அவர் பெயர் இடம்பெறவில்லை.
ஏனென்றால், தேர்வு முடிவுகள் வெளி வந்த அச்சமயத்தில் அவர் என்னுடன்தான் இருக்கிறார். கெüரிசங்கரின் கலங்காத உள்ளம் கொண்ட கண்களைப் பார்க்கிறேன். அதில் வெளிப்பட்ட உறுதியை எடுத்துக் கூறிட வார்த்தைகளால் இயலாது.
இத்தருணத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவருக்கு டெல்லி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கான காவல்பணி (ஈஅசஐடந) வாய்ப்பினை குடிமைப்பணிகள் தேர்வாணையம் வழங்குகிறது. அதற்குச் செல்லாமல் மறுபடியும் 2015 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத்தேர்வினை எழுதுகிறார். அத்தேர்வில் வெல்கிறார்.
முதன்மைத்தேர்வுக்கான வகுப்புகளில் மீண்டும் வந்து அமர்கிறார். முன்னிலும் நேர்த்தியுடன் பதில்களை எழுதுகிறார். ஒவ்வொரு நிமிடமும் உழைப்பைத் தவிர, தேர்வுக்கான சிந்தனையைத் தவிர, வேறு எதையும் நான் அவரிடம் பார்த்ததில்லை.
நேர்முகத்தேர்வு செல்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட வெற்றியாளர்களின் பட்டியலில் முன்னிலை பெற்ற அவரது பெயர் விடாமுயற்சியின் முத்திரையாக ஒளிர்கிறது. தற்போது இந்தியக்காவல் பணி வாய்ப்பு (ஐ.பி.எஸ்) அவருக்காக காத்திருக்கிறது. இத்தேர்வில் மற்றுமொரு சாதனையை அவர் படைப்பார் என்று நான் நம்புகிறேன்.
ஆதலினால் தேர்வர்களே... உங்களால் நிச்சயம் வெல்ல முடியும். காலம் கடத்தாமல் இலட்சிய வெற்றிக்கு அளவீடுகளின்றி உழைப்பை வழங்குங்கள்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...