கண்டதும் கேட்டதும் - 42
சர்துல் சிங் சேத்தியும் எனது தந்தை டைரக்டர் ஏ.பீம்சிங்கும் நண்பர்கள் போல் பழகுவார்கள். படத்தின் ரீல் வந்ததும் அதனை எவ்வளவு சீக்கிரமாக பிரிண்ட் எடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக சர்துல் சிங் சேத்தி பிரிண்ட் எடுத்து


சர்துல் சிங் சேத்தியும் எனது தந்தை டைரக்டர் ஏ.பீம்சிங்கும் நண்பர்கள் போல் பழகுவார்கள். படத்தின் ரீல் வந்ததும் அதனை எவ்வளவு சீக்கிரமாக பிரிண்ட் எடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக சர்துல் சிங் சேத்தி பிரிண்ட் எடுத்து RUSHக்கு அனுப்பி வைப்பார்.
படத்தின் வேலை நடந்து கொண்டிருக்கும்போது, எனது தந்தை, சர்துல் சிங் சேத்தியிடம் அவரின் குடும்பத்தாரைப் பற்றியும், அவர்களின் நலனைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொள்வார். அதனைப் போன்றே LAB இன் உதவியாளர்கள் பற்றியும் அவர்களது நலனைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொள்வார். அதனைப் போன்றே சர்துல்சிங் சேத்தியும் சூட்டிங் எப்படி நடந்தது என்ற விவரங்களுடன் எனது தந்தையாரின் குடும்ப நலன்களை விசாரித்து அறிந்து கொள்வார். "பதி பக்தி' பட டைட்டிலில் சர்துல் சிங் சேத்தியின் பெயரை ஏவிஎம் LAB இன் தலைமை என்று போட்டு அவருக்கு டைரக்டர் பீம்சிங் சிறப்புச் செய்தார்.
முதல் பிரதியை LAB இன் தலைவரும் அதன் தொழிலாளர்களும் தான் முதலில் பார்த்து விடுவார்கள். அவர்கள்தான் படத்தின் முதல் பார்வையாளர்கள் ஆவார்கள். படத்தினைப்பற்றிய அவர்களின் கணிப்பு சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் கதை அம்சம் என்னவாக இருக்கிறது என்று கவனிப்பார்கள்.
ஆனால் மியூசிக் டைரக்டர்களும், அவருடன் இணைந்து பின்னணி இசைப்பவர்களும் பாடல் மற்றும் அதன் கருத்திலேயே கவனம் செலுத்துவார்கள். அதனால் பல நேரங்களில் இசை அமைப்பாளர்களின் கணிப்பு தவறாக அமைந்து இருக்கிறது.
பொதுவாக டைரக்டர் பீம்சிங் படத்தில் நாட்டுப்பற்று, சமூகப் பிரச்னை, இயற்கைச் சூழல், காதல் என்று படங்களிலும், வசனத்திலும் கதை அமைப்பிலும் கவனம் மிக அதிகமாக செலுத்தப்பட்டிருக்கும். கேமரா கோணங்களில் பெரிய டெக்னிக்கல் விஷயங்கள் இருக்காது. பிரமாண்டங்கள் பெரிதாக இருக்காது. ஆனால், கதையைத் தெளிவாக கூறுவதிலேயே கேமரா சுழன்று கொண்டிருக்கும்.
தனது படக் கம்பெனியின் பெயர்களாக புத்தா பிக்சர்ஸ், பாரத மாதா பிக்சர்ஸ், சன்பீம் புரடக்ஷன் என்று பெயர் சூட்டினார்.
அவர் தன்னுடைய படத்தில் உழைக்கும் உதவி டைரக்டர்களுக்கும், கேமரா மேன்களுக்கும், லைட் பாய் முதல் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்காகவும் படத்தினை எடுத்தார். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் "பழனி'. அது உழவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்ட கதையாகும். நிலத்தில் பயிர் செய்வதால் இவ்வுலகில் எந்த அளவுக்கு பசி நோய் தீரும் என்று அறிந்த விவசாயியின் கதை.
பல சங்கடங்கள், தொல்லைகள், உறவுகளின் பிரிவு என்று எது வந்தாலும் அதற்காகக் கலங்கி நின்றுவிடாது, மேழியைத் தூக்கி (கலப்பையை) வயலில் இறங்கி உழுவது மட்டுமே தனது லட்சியம் என்று தலைநிமிர்த்தி நின்ற விவசாயியின் கதை.
"பொன்விளையும் பூமி' படத்தின் ஆங்கில மூலம் GOOD EARTH என்ற நாவல் (நல்ல நிலம்) இது ஒரு அமெரிக்கன் டிராமா பிலிம். இதனை 1931 - இல் PEARL S.BUCK என்ற நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளர் எழுதினார்.
இந்த நாவலினை முதலில் WEN DAVIS மற்றும் DONALD DAVIS என்ற இருவர் நாடகமாக்கினார்கள்.
அதனை 1937- இல் Sidney Franklin
என்ற ஆங்கில இயக்குநர் படமாக்கினார். அவருடன் Victor Fleming, Gustav Machaty, Sam Wood என்ற சிறந்த மூன்று இயக்குநர்களும் இணைந்து செயல்பட்டனர்.
இந்த படத்தில் பால்முனி என்ற ஆங்கில நடிகர் நடித்தார். இவர் இந்த படத்திற்காக தன் புருவங்களை மழித்து சைனாக்காரனைப் போல் வாழ்ந்து காட்டினார். இவர்தான் இந்த படத்தின் கதாநாயகனான வாங் லங்.
இந்தக் கதையைத் திரைக்கதையாக்கியவர்கள் Talbot Jennings, Tess Slesinger, Claudine West ஆகும்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக Karl Freund பணியாற்றினார். படத் தொகுப்பாளராக Basil Wrangell பணியாற்றினார். இந்தப் படத்தை ங.எ.ங. பிக்ஸர்ஸ் தயாரித்தது. இந்தப் படம் கறுப்பு, வெள்ளையில் வெளிவந்தது.
இந்தக் கதை முதல் உலகப் போருக்கு முன்னால் வட சீனாவில் உள்ள மாகாணத்தில் நடந்ததாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
வாங்லாங் என்ற விவசாயி மிகுந்த செல்வந்தராக வாழ்ந்து வருகிறார். அவரின் வீடு அரண்மனையைப் போன்ற இருந்ததனால் கிரேட் ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது. அவர் தன் வீட்டில் பணி புரிந்து கொண்டிருந்த அழகிய பெண்ணான ஓ -லான் என்பவளை மணந்து கொள்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். ஓ - லான் தன்னுடைய கடினமான உழைப்பால் நிறைய நிலங்களை வாங்குகிறாள்.
சில வருடங்கள் கழித்து அந்த ஊரின் நிலங்கள் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்டு மிகப் பெரிய பஞ்சம் ஏற்படுகிறது. அதனால் வாங்லாங் குடும்பமும் அதில் சிக்கித் தவிக்கிறது. அப்போது ஓ - லான்னுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஓ-லான் அக்குழந்தையைக் கொன்று விடுகிறாள்.
அப்போது வாங்லாங்கின் மாமா நிலங்களை விற்றுவிட கூற வாங் லாங் அதற்கு ஒப்புக் கொண்டு நிலங்களை விற்க தயாராகிறார். ஆனால் லீ -லான் நிலங்களை விற்கக் கூடாது என்று கூற தென் சீனாவுக்கு இடம் பெயர்கின்றனர்.
அங்கு அவர்கள் திருடியும், பிச்சை எடுத்தும் வாழ்ந்து வருகின்றனர். அப்போது ஒரு போர்வீரன் வடக்குப் புறத்தில் நல்ல மழை பொழிந்து செழிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூற இவர்கள் மீண்டும் தங்கள் இடத்துக்கு வருகின்றனர்.
ஆனால் அவர்களிடம் பயிரிட வேண்டிய விதைகளை வாங்கவும், மாடுகளை வாங்கவும் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களின் வீடும், நிலமும் பறி போய் இருந்தது. அந்த நேரத்தில் ஓ -லான் அங்கு இருக்கும் திருடர்களுடன் சேர்ந்து அங்கிருந்த மேன்சனில் கொள்ளை அடிக்கச் செல்கிறாள். அப்போது காவலர்கள் வந்து விட அனைவரும் தப்பி ஓடுகின்றனர். அதில் ஓ - லான் கீழே விழுந்துவிடுகிறாள். அனைவரும் அவளை மிதித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவளது கண்களுக்கு ஒரு பை தென்படுகிறது. அதனை எடுத்துக் கொண்டு ஓ - லான் வீட்டுக்கு வந்து தனது கணவனிடம், "" இந்த முத்து மணியை எனக்காக வைத்துக் கொண்டு மீதமுள்ள நகைகளை விற்று நம்முடைய வாழ்வைச் செழிப்பாக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறாள்.
வாங்லாங் அந்த நகைகளை விற்று தனது நிலத்தையும், கிரேட் ஹவுஸ் என்ற தனது வீட்டையும் மீட்டு விடுகிறார். இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்போது வாங்லாங் ஒரு டீக்கடையில் நடனமாடும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவள் பெயர் லோட்டஸ்.
புதிய மனைவி வந்ததும் தனது முதல் மனைவியான ஓ - லான் மீது அடிக்கடி கோபப்பட்டு அவளிடம் குற்றம் கண்டுபிடித்து அவளைக் கொடுமைப்படுத்துகிறான். அதோடு இல்லாமல் தனது முதல் மனைவிக்காக வைத்திருந்த இரண்டு முத்து மணிகளையும் தனது இரண்டாவது மனைவியான லோட்டஸýக்கு கொடுத்துவிடுகிறான். இது ஓ- லான்க்கு மிகவும் மனவருத்தத்தை அளித்து அவளை நோய் வாய்ப்பட வைக்கிறது.
இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியான லோட்டஸ் தனது இரண்டாவது மகனுடன் காதல் கொண்டிருப்பதை அறிந்த வாங் லாங் அவளை தனது வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறு கூறி அவளை வெளியில் அனுப்பி விடுகிறார்.
அப்போது பயிர்கள் செழித்திருக்கும் நிலையில் வெட்டுகிளி பூச்சிகள் அந்தப் பயிரைத் தாக்கும் நிலை ஏற்படுகிறது. அப்போது வாங் லாங்கின் மூத்த மகன் அவற்றை ஓட்டிவிடலாம் என்று அங்கிருந்த மக்களுக்கு தைரியம் கூற ஊர் மக்கள் அவன் பின் திரள்கின்றனர். ஆனால் காற்று திசை மாறி அடித்ததால் வெட்டுகிளிகள் வேறுபக்கம் சென்று விடுகின்றன. அதனால் பயிர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.
வாங் லாங் தனது பழைய நிலைக்குத் திரும்புகிறார். தனது இரண்டாவது மகனையும் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.
அப்போது வாங் லாங்கின் முதல் மகனின் திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் வாங் லாங் தனது சொந்த வீட்டுக்கு வருகிறார்.
அங்கு தனது மனைவி ஓ - லான் மரணப்படுக்கையில் இருப்பதைப் பார்த்து கண்ணீர் விடுகிறார். அதோடு கூட தான் கொண்டு வந்திருந்த அவளுக்கானதான இரண்டு முத்துமணிகளை அவளிடம் கொடுத்துவிட்டு மெல்ல வீட்டின் வெளியில் வருகிறார்.
அங்கே இவர்கள் இருவரின் திருமணத்தின்போது வைத்த TEACH TREE (டீச் மரம்) யின் அருகில் வந்து அதன் மேல் மலர்களைத் தூவி O - LAN YOU ARE THE EARTH (ஓ - லான் நீயே நல்ல நிலம்) என்று கூறுகிறார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...