/

இணைய தொழில்நுட்ப கருவிகளுக்கான போட்டி!

நம் நாட்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவை இணைந்து

News image
Updated On :25 டிசம்பர் 2018, 10:03 am IST

நம் நாட்டில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவை இணைந்து முதன்முறையாக The Grand India IoT Innovation Challenge என்னும் Internet of Things (IoT) தொழில்நுட்ப போட்டியை அண்மையில் நடத்தின. இந்தப் போட்டிக்கான நடைமுறைகள் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 17- ஆம் தேதி இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
இந்தப் போட்டியில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து 27 பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 757 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்கள் பல்வேறு பகுப்பாய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவில் திட்ட விளக்கம் அளித்திருந்த 10 குழுவினர் மட்டும் இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தாங்கள் தெரிவித்துள்ள IoT செயல்படுத்தப்பட்ட தீர்வுகளின் முன்மாதிரிகளை உருவாக்க டாடா நிறுவனத்துக்கு அழைக்கப்பட்டனர்.
அதனடிப்படையில், புவனேஸ்வரம் ஐஐடி மாணவர்களான பி. நிதீஷ் குமார், மோகினிஷ் சட்டர்ஜி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் அபிஷேக் குமார், விஸ்வேஸ்வரய்யா கல்வி குழுமத்தைச் சேர்ந்த விஷால் சந்த்ரகான் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட Prajjawala Systems And Solutions என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் Pay As you use என்ற அடிப்படையில் தொடங்கியுள்ள சமையல் எரிவாயு விநியோகச் சங்கிலி மற்றும் விநியோகத் திட்டம் The Grand India IoT Innovation Challenge போட்டியில் முதலிடத்தை வென்று ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றுள்ளது.
இந்த கருவி நாட்டில் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் அரசு ஆதரவு மற்றும் மானியத்தை நம்பியிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கும். மேலும், எரிவாயு சிக்கனம், கூடுதல் சிலிண்டர் உற்பத்திக்கான தேவை குறைவு போன்ற வகையில் அரசுக்கும் பலவித நன்மைகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த நிறுவனத்தின் சிலிண்டரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் IoT தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளரால் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் அளவு மற்றும் இயக்கம் பராமரிக்கப்படுகிறது.
அடுத்ததாக, இந்திய ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தின் Dominators குழு 2-வது இடத்தை வென்று ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசை பெற்றுள்ளது. இந்தக் குழு கண்டுபிடித்துள்ள தெருவிளக்குகளில் பொருத்தும்படியான IoT கருவி அப்பகுதியில் உள்ள கொசுக்களின் வெப்ப அடிப்படையிலான ஒரு வரைபடத்தை உருவாக்குகிறது. இந்த வரைபடத்தைக் கொண்டு நகராட்சி அதிகாரிகள் கொசுக்களின் இனப்பெருக்கத்தை மதிப்பீடு செய்து அவற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகிறது. 
3-வது பரிசை சென்னையைச் சேர்ந்த வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் Sanrakshak குழுவும், பிலானி பிர்லா அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தின் Short Circuits குழுவும் பகிர்ந்துகொண்டுள்ளன. இதில் Sanrakshak குழு தயாரித்துள்ள விலை குறைவான IoT தொழில்நுட்பம் கொண்ட உணர்கருவி, ரயில் விபத்துகளை தவிர்த்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, Short Circuits குழுவின் கருவி, மின்சக்தி வாகனங்களில், வாகனங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளபோது ஏற்படும் சக்தி குறைதல் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 தயாரிப்புகளும் தலா ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசைப் பெறுகின்றன. 
இந்தப் போட்டி குறித்து டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவரும், IoT துறைக்கான தலைவருமான வி.எஸ். ஸ்ரீதர் கூறுகையில், "இந்தியாவில் குறிப்பிட்ட சில சிக்கல்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு முழுமையான இணைய விஷயங்களால் ஆன (IoT) சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்கிறார். 
உலக பொருளாதார மன்றம் (WEF) மற்றும் பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) இணைந்து சர்வதேச அளவில் 774 நிறுவனங்களில் உள்ள 4 தொழில்களில் நடத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 84 சதவீத நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு IoT, Big Data, Cloud Computing, AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் திறன் இடைவெளியை நிரப்ப மறு பயிற்சி தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் செயல் இயக்குநர் அஞ்சன்தாஸ் கூறுகையில், "இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று தொழில் திறன் இடைவெளி. இது ஒரு பெரிய, திறமையான தொழிலாளர் சக்தி தேவைப்படும் இடம். ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் மிகச் சிலரே அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர். எனவே, இதுபோன்ற ஊக்கமூட்டுதல் தேவைப்படுகிறது'' என்றார்.
இரா.மகாதேவன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.