சுடர்மிகும் அறிவுடன் பிறந்தோமே!
“"வாழ்க்கையில் நீங்கள் பயப்படும் எல்லாவற்றையும் எழுதி, அதை எரித்து விடுங்கள்'


“"வாழ்க்கையில் நீங்கள் பயப்படும் எல்லாவற்றையும் எழுதி, அதை எரித்து விடுங்கள்'
- யோகோ ஓனோ
காய்ச்சல் பலவகை.
உழைப்பால், களைப்பால், ஓய்வற்ற உறக்கமற்ற பணிச்சுமையால், மன உளைச்சலால், வெயில், மழை உக்கிரத்தால், காலநிலை மாற்றத்தால் - இப்படி வகைவகையாக காய்ச்சலுக்கான காரணங்கள் இருந்தாலும் மாணவர்களுக்கு வரும் தேர்வு நேர காய்ச்சல் விசித்திர ரகம்.
மாணவர்களுக்கு பள்ளிப் பருவ பரீட்சையின்போது வயிற்றுவலியாக இருக்கின்ற காரணம், அவர்கள் வளர வளர காய்ச்சலாகப் பரிணாம வளர்ச்சி அடைகிறது. கல்லூரிப் படிப்பையும் முடித்து. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்ற மாணவர்களும் இதுபோன்ற காய்ச்சல் காரணங்களைச் சொல்வார்கள்; சொல்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
தேர்வுக்கு முதல் நாளே, ""காய்ச்சல் வருது சார். "எக்ஸூம் ஹால்'ல பதட்டத்தில கை, கால் நடுங்குது சார்''”- – இப்படிச் சொன்னவர், ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். அதாவது ஐந்தாண்டு மென்பொருள் அறிவியலில் முதுகலைப் பட்டம். இந்த மாணவருக்கு இந்தப் பட்டத்தை கொடுக்க அந்தக் கல்லூரியும் நடைமுறையில் இருந்த பாடத்திட்டமும், கல்விச் சட்டமும் எடுத்துக் கொண்ட காலம் ஐந்தாண்டுகள். கல்விக் கட்டணமாக அவர்கள் வசூலித்ததோ கிட்டத்தட்ட நான்கு இலட்சங்கள்.
இத்தனை சோதனைகளை பயிற்சிகளைக் கடந்து வந்த அந்த மாணவர்தான் சொல்கிறார்: "போட்டித்தேர்வுகளுக்கு முந்தைய நாள் காய்ச்சல் வருகிறது' என்று. இத்தனைக்கும் எல்லா போட்டித்தேர்வுகளுக்கும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக இருப்பதில்லை. ஒரு மாணவரின் பட்டப் படிப்பிற்கும் அவர் எழுதி வெற்றிபெறும் போட்டித் தேர்வுக்கும் பெரும்பாலும் எந்தவொரு பெரிய சம்பந்தமும் இல்லை. இந்த தேசத்தின் உச்சப் பதவிகளுக்கான குடிமைப்பணி தேர்வுக்கும் இதே நிலைதான். நமது விவாதத்திற்கு உட்பட்ட அந்த மாணவர், தற்போது எழுதத் தயாராகி இருக்கும் தேர்வுக்கு தேவையான அடிப்படை கல்வித் தகுதி வெறும் பத்தாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., மட்டுமே. அப்படியென்றால் பத்தாம் வகுப்புத் தேர்ச்சியை கல்வித்தகுதியாக கொண்ட ஒரு போட்டித்தேர்வை எதிர்கொள்கின்ற மனதைரியத்தைக் கூட கொடுக்காத முதுகலைப் பட்டத்தை அந்த மாணவர் பெற்றிருக்கிறார் அல்லது அந்தக் கல்லூரி கொடுத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?
தேர்வு பயம்கொண்ட அந்த மாணவனிடம் ஒரு சிறிய கதையைக் கூற வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அது இதுதான்:
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தானாம்.
""நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா'' என்று கேட்டுக் கொண்டானாம்.
அதற்கு ஞானி, அடுத்த நாள் மாலை அவரை வந்து பார்க்குமாறு அவனிடம் சொன்னாராம்.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு'' என்று கத்திக் கொண்டிருந்த ஞானியைப் பார்த்து குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?அதை விட்டுவிடுங்கள்'' என்றானாம்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போலதான் நீ குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். அதை நீயே விட்டுவிடு'' என்றாராம். இந்த குடிகாரனைப் போலத்தான் அந்த மாணவனும் பயத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றானே தவிர பயம் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை அவனுக்கு விளக்க நமக்கு பெரும் சிரத்தை அவசியப்பட்டது.
முறையான பயிற்சி, திட்டமிட்ட உழைப்பு, படிப்பு ஒரு மாணவனை தன்னம்பிக்கையுள்ளவராக மாற்றும். அப்படி ஒரு மாணவனை திடமானவனாக, தன்னம்பிக்கை உள்ளவராக, மாற்றாத கல்வியும், பட்டமும், பாடத் திட்டமும் எங்கோ தவறு செய்கிறது. தவறு பாடத் திட்டத்திலா, கல்விக்கூடத்திலா நிர்வாகத்திலா, அல்லது ஆசிரியர்களிடத்திலா என்கிற கேள்விக்கான விடை, இடம், பொருள் ஏவலுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
இன்றைய பணம் மையப்பட்ட உலகில்... கேவலம் ஒரு 2000 ரூபாய் தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழப்பதில்லை. ஆனால் மாணவர்களில் ஒரு சிலரோ தேர்வுகளைச் சந்திக்கும் போதுகூட மனமுடைந்து போய் தங்களைத் தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள்.
பட்டப் படிப்பை கடந்து பொதுவான உலகை, வாழ்க்கையை, நல்ல இலக்கியங்களை வெற்றி பெற்ற முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை எல்லாம் வாசித்த, வாசிக்கின்ற மாணவர்களின் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு மாணவரும் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கிறது. அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்க்கை என்ற பயிருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொல்லிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழும் ஒவ்வொரு மாணவனையும் பார்த்து தேர்வுகளுக்கு காய்ச்சல் வரவேண்டுமே தவிர, சுடர்மிகு அறிவுடன் படைக்கப்பட்ட மாணவர்களுக்குக் காய்ச்சல் வரக்கூடாது.
“"நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி; எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!' என்கிற பாரதியின் தீரமிக்க வரிகளை நெஞ்சில் நிறுத்தி அச்சமற்ற மாணவர்களாக தலைநிமிர்ந்து தேர்வுகளை எதிர்கொள்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...