ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வாழ்வில் ஏற்றம் பெற குதிரையேற்றம்!

தெலங்கானா மாநிலத்தில் சமூக நலப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான கேப்டன் மெஹ்பூப் அரஸ்டு-விடம் குதிரையேற்றம் பழகி வருகின்றனர்.

News image
Updated On :22 ஜனவரி 2019, 6:35 am

இரா. மகாதேவன்

தெலங்கானா மாநிலத்தில் சமூக நலப் பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான கேப்டன் மெஹ்பூப் அரஸ்டு-விடம் குதிரையேற்றம் பழகி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தெலங்கானா மாநில அரசு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் சமூகத்தில் பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை முன்னேற்றும் பொருட்டு, தெலங்கானா சமூகநல உண்டு உறைவிட கல்வி நிறுவனங்களின் சங்கம் (பநரதஉஐந) மற்றும் தெலங்கானா பழங்குடியினர் நல உண்டு உறைவிட கல்விச் சங்கம் (பபரதஉஐந) ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவரும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பிறகு ஐபிஎஸ் முடித்து 22 ஆண்டுகளாக காவல் துறையின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவருமான டாக்டர் ஆர்.எஸ். பிரவீன்குமார் இந்த சங்கத்தின் செயலராக விருப்பப் பொறுப்பில் உள்ளார்.

இவர் செயலராகப் பொறுப்பேற்றது முதல் இந்தத் துறையில் உள்ள 268 சமூகநலப் பள்ளிகளில் எண்ணற்ற பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஒன்று, கோடை "சாமுராய் முகாம்கள்' (நன்ம்ம்ங்ழ் நஹம்ன்ழ்ஹண் இஹம்ல்ள்). இந்த முகாம்கள் ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையில் ஜூன் மாதம் வரை 3 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. இதில் அளிக்கப்படும் பயிற்சிகளில் முக்கியமாகக் கருதப்படுவது குதிரையேற்றம். இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். இந்தப் பயிற்சி தங்களுக்கு புதுவிதமான அனுபவமாக உள்ளதாக அந்த மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பயிற்சி குறித்து பிரவீன்குமார் கூறுகையில், ""எங்கள் குழந்தைகளை குதிரை சவாரி செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். இந்த யோசனை, மாணவர்களின் தலைமைப் பண்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை உயர்த்தும் என்பதோடு, இளம் சிறுவர்களும், பெண்களும் இந்த நவீன உலகில் சுயாதீனமான மற்றும் நம்பகமான தனிநபர்களாக நுழையவும் உதவும். அதோடு, குதிரையை அடக்கி தங்கள் வழிக்குக் கொண்டுவரத் தெரிந்த ஒருவரால், தங்கள் வாழ்வின் மோசமான சூழலையும் அடக்கி ஆளமுடியும் என நாங்கள் நம்புகிறோம்'' என்கிறார்.

இவரின் வழிகாட்டுதலில்தான் கடந்த 2014 - இல் தெலங்கானா பழங்குடியின 13 வயது மாணவி மாலவத் பூர்ணா, பட்டியலின மாணவர் ஆனந்த்குமார் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்தனர்.

5-ஆவது ஆண்டாக கடந்த 2018 -இல் நடைபெற்ற கோடை முகாம்களில் குதிரையேற்றத்தோடு, கம்ப்யூட்டர் கோடிங், நீர் விளையாட்டு, மொபைல் ஆப் டெவலப்மெண்ட், பங்குசந்தை, மலையேற்றம், மல்டிமீடியா, பாரம்பரிய மற்றும் மேற்கத்திய இசை, மேடை கலை, நகை வடிவமைப்பு, ரொபாடிக்ஸ் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 71,493 பேர் பயிலும் சமூகநல, பழங்குடியினர் பள்ளிகளில் இருந்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த முகாம்களில் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் 85 மையங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. கடந்த 2017 -இல் 30 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே முகாம்களில் பங்கேற்ற நிலையில், கடந்த ஆண்டு அது 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது, இந்த முகாம்கள் மீது மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின் தாக்கமாக பார்க்கப்படுகிறது. 

2018-இல் முகாம் தொடக்க விழாவில் பேசிய பிரவீன்குமார், ""ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக, பள்ளியில் இருந்து பாதியில் விலகுவோராக, குழந்தை திருமணம் செய்துகொள்வோராக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. சமுதாயத்தில் உள்ள இந்த தீய சுழற்சியை உடைத்து, அவர்களை உயர்கல்வி மற்றும் பொருளாதாரச் செழிப்புக்கான தடத்தில் ஏற்றிவிட ஆக்கப்பூர்வமான இந்த கோடை சாமுராய் முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றார்.

இந்த முகாம் வழக்கமான முகாம்களில் இருந்து மாறுபட்டு, சினிமா திரையிடல், வினாடிவினா, விவாதங்கள், யோகா, கலை நிகழ்ச்சிகள் போன்ற வேடிக்கை நிகழ்ச்சிகளுடன், தகவல் தொடர்பு, கூட்டு முயற்சி, அறிவியல், முடிவெடுக்கும் திறன், தனிப்பட்ட திறன், பிரச்னைகளை தீர்த்தல், தலைமைப் பண்பு பயிற்சி போன்ற முக்கிய செயல்பாடுகளின் தொகுப்பாகவும் உள்ளது.

கோடை பயிற்சி மட்டுமல்லாது, இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக சேர விரும்பும் சமூகநலப் பள்ளி மாணவர்களுக்காக தேசிய ராணுவ அகாதெமி சிறப்புப் பயிற்சியும் சங்கம் சார்பில் வழங்கப்படுகிறது. அதேபோல, கடந்த ஆண்டு 500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தாண்டு தங்கள் சக பள்ளித் தோழர்களுக்கு அந்த கலையை பயிற்றுவிக்க உள்ளனர்.

அதோடு, ஹைதராபாத் அருகே கெüலிடோடி நகரில் உள்ள பயிற்சி மையம் (LTICC) மற்றும் கரீம்நகர் மாவட்டம், அலுகுனூரில் உள்ள மையம் மூலம் சமூகநலப் பள்ளிகளில் 9-12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மிகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வாய்ப்பு பெறும் வகையில், சங்கத்தின் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வாறு கடந்த 4 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். உதாரணமாக, கடந்த  2016-17 - இல் மட்டும் 37 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், 6 பேர் டாடா கல்வி நிறுவனத்திலும், 12 பேர் தில்லி பல்கலைக்கழகத்திலும், 28 பேர் அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்திலும், 16 பேர் ஐஐடி, என்ஐடி-யிலும் சேர்ந்துள்ளனர்.

""மாணவர்கள் தங்களிடம் உள்ள இயல்பான திறன்களை உணரும் வாய்ப்பை ஏற்படுத்துவதையே என்னுடைய முதல் கடமையாக நான் பார்க்கிறேன்'' என கூறும் பிரவீன்குமார், ""நீங்கள் எவருக்கும் கீழானவர்கள் அல்ல, நீங்கள் அடையமுடியாத உயரங்களும் இல்லை என்று கூறி, எங்கள் மாணவர்களின் எண்ணத்தில் மறுகட்டுமான அடையாளங்களை புகுத்தியிருக்கிறோம்.

அனைத்து தடுப்பு வகைகள், தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை பதிவு, அடிமைப்படுத்துதல் போன்றவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான அதிகாரமளிக்கும் திட்டங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்போருக்கும், ஏழை குழந்தைகளுக்கும் கனவு இருக்கவேண்டியது மிக முக்கியம். அவர்களது குடும்பம் மற்றும் பொருளாதார பின்னணி என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களின் கனவுகள் சிதைக்கப்படக்கூடாது'' என்கிறார் டாக்டர் பிரவீன்குமார் ஐபிஎஸ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.