பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முந்தி இருப்பச் செயல் பார்வைத் திறன் - 11

உங்களால் வெறும் நான்கே வார்த்தைகளில் ஓர் ஆழகான, ஆழமான, அற்புதமான காதல் கதை எழுத முடியுமா?

News image
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:30 am

சுப. உதயகுமாரன்


உங்களால் வெறும் நான்கே வார்த்தைகளில் ஓர் ஆழகான, ஆழமான, அற்புதமான காதல் கதை எழுத முடியுமா?
கம்பர் எழுதினார்: "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்'. ஒருவரையொருவர் நோக்குவதன் சக்தியைப் பாருங்கள்.
மேற்குறிப்பிட்ட நான்கு வார்த்தைகளுடன் கூடுதலாக சில வார்த்தைகளைச் சேர்த்து, கண்கள் இப்படி நோக்கிக்கொள்ளும்போது, வாய்ச்சொற்கள் பயனற்றுப்போகின்றன என்றார் வள்ளுவர்:

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. (குறள் 1100)

இதையே கவிஞர் கண்ணதாசன் "பார்வை ஒன்றே போதுமே? பல்லாயிரம் சொல் வேண்டுமா?' என்று 1966}ஆம் ஆண்டு திரைப்படப் பாடல் ஒன்றில் பதிவுசெய்தார்.
கண்களும், கண்பார்வையும் இன்னும் பல அற்புதப் பரிமாணங்களைக் கொண்டவை. கண்களால் நோக்க மட்டுமல்ல, கேட்கவும் முடியும். காது கேட்காதவர்கள் பெரும்பாலும் கண்களால் பிறர் உதட்டசைவுகளைப் பார்த்தே கேட்கின்றனர். பார்வைக் குறைபாடுகளுக்காக கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அவற்றைக் கழற்றிவிட்டால் துல்லியமாகக் கேட்க இயலாமல் துன்புறுகிறார்கள்.
நோக்கவும், கேட்கவும் மட்டுமல்லாமல், ஆக்கவும், அழிக்கவும் கூட கண்களால் முடியும். ஒப்பற்ற ஆன்மிக பலம், உயரிய ஆளுமைத்திறன் கொண்டோரின் கண்களுக்கு ஒருவித காந்தசக்தி இருப்பதாகப் பலரும் நம்புகிறார்கள். அவர்களின் கண்கள் வழியாகத் தன்னையுணர்ந்து உயர்ந்ததாகவும்; அதேபோல, தீயோரின் கண்களால் கட்டுண்டு வசியம், மயக்கம், முகமாற்றம் எனும் மாயவலைகளுக்குள் சிக்கிக்கொண்டதாகவும் ஏராளமானோர் எண்ணுகிறார்கள்.
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று கொள்ளும்போது, முகஅழகில் கண்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. முகத்திற்கும், கண்களுக்குமான நெருங்கிய தொடர்பை "முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' எனும் வள்ளு
வரின் சொற்றொடரால் அறியலாம். வாய், காதுகளை விட, கண்கள்தான் முகத்தின் முத்தாய்ப்பாக அமைகின்றன.
பொய் பேசுகிறவர்கள் பிறர் முகத்தைப் பார்த்துப் பேசாமல் தவிர்ப்பது, முகத்தை, கண்களைப் பார்த்துப் பேசாதவர்களை பலரும் சந்தேகத்தோடு பார்ப்பது என பல சூட்சுமங்கள் கண்களின் பின்னால் மறைந்து கிடக்கின்றன.
இமைகள், புருவங்கள், கண்ணீர் என ஒரு தொகுப்பாக இயங்குகின்றன கண்கள். இமைகளால் இளைஞர்களும், புருவங்களால் ராஜதந்திரிகளும், கண்ணீரால் அன்பு உறவுகளும் அன்றாடம் பேசிக் கொள்கிறோம்.
மேம்போக்கான பார்வை என்பது கண்ணுடையோர் அனைவருமே பெற்றிருக்கும் பொதுத் திறன். ஆனால் உற்றுநோக்குவதும், உறுபொருள் அறிவதுமாகிய "பார்த்தறிதல்' என்பது முற்றிலும் வேறானது. இந்தக் "கண்ணோட்டம்' குறித்து ஓர் அதிகாரத்தையே எழுதியிருக்கிறார் திருவள்ளுவர்.
இருட்டறையில் நின்ற யானை ஒன்றை ஏழு பேர் தடவிப் பார்த்தார்களாம். அவரவர் தடவிப் பார்த்த பகுதியின் அடிப்படையில், யானையை, ஒரு மரத்தடி, மரக்கிளை, முறம், குன்று என்று பலவாறாக அவர்கள் விவரித்தார்கள். வெளியேயிருந்து வந்த ஒருவர் அந்த அறையில் விளக்கை ஏற்றியபோதுதான், யானையின் முழுமை எல்லோருக்கும் புரிந்தது. கண்கள் வெறுமனே பார்க்கின்றன; ஆனால் கண்ணோட்டம் பெறுவதற்கு அறிவு எனும் வெளிச்சம் தேவைப்படுகிறது.
ஒரு விடயத்தை மேலோட்டமாகப் பார்க்காமல், உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம் என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. நற்றிணை இன்னும் ஒருபடி மேலே போய், "நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவறிந்தளவல் வேண்டும்' என்று பரிந்துரைக்கிறது. இவ்வறிவுரைகளைப் போன்றதே பின்நவீனத்துவம் முன்மொழியும் "கட்டுடைத்தல்' எனும் நுட்பம்.
இந்தக் கட்டுடைத்தலுடன் கூடிய "பார்த்தறிதல்' என்பது மிக முக்கியமானதொரு திறனாக அமைகிறது. நீங்கள் எதிர்கொள்ளும் நிழல்களுக்குள் மறைந்து கிடக்கும் வாழ்வுலகங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், பணியிடங்களிலும் எப்போதும் நிறைந்திருக்கிறது.
உங்களின் மேலாளர் என்ன பேசுகிறார், ஏன் இப்படிப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து, நீங்கள் வாசிக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள், புத்தகங்கள், இலக்கியப் படைப்புகள், நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், நாடகங்கள், ஓவியங்கள், விளம்பரங்கள் என அனைத்திற்குள்ளும் மறைந்துகிடக்கும் வாழ்வுலகங்களை நீங்கள் பார்த்தறிவது மிகவும் அவசியம்.
இந்த நுட்பமான "பார்த்தறிதல்' பலவேறு வழிகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் உங்களுடைய சொந்த வாழ்வுலகத்தை விடுவிக்கவும், மாற்று வாழ்வியல் வரைபடங்களைத் தயாரிக்கவும் பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவும்.
"கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்' எனும் வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் பின்னால் இருக்கும் வாழ்வுலகத்தைப் பாருங்கள். ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் "கண்டுபிடிக்கப்படாத' ஒரு வனாந்திரமாகப் பார்த்தார்கள். பல்வேறு செவ்விந்தியர் குமுகங்கள் பல நூற்றாண்டுகளாகப் போற்றிப் பாதுகாத்த நிலப்பரப்பை, அங்கேயிருந்த ஆறுகள், குளங்கள், ஏரிகள், மலைகள், காடுகள், பள்ளத்தாக்குகள் அனைத்தையும் தங்கள் மூதாதையர்களின் ஆவிகள் வாழும் இடங்களாகக் கருதி கண்ணும்கருத்துமாகக் கட்டிகாத்து வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்விடத்தைத்தான் "கொலம்பஸ் கண்டுபிடித்தார்' என்று கொண்டாடியது ஐரோப்பா.
ஐரோப்பியர்கள் சாரை சாரையாக வட அமெரிக்காவில் குடியேறியபோது, அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தனியார் வீடுகள் வரை அனைத்து இடங்களிலும் ஓர் ஓவியம் விரும்பிக் காட்சிப்படுத்தப்பட்டது. "பேரரசு மேற்கு நோக்கி முன்னேறுகிறது' என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியம் பற்பல குறியீடுகளைக் கொண்டிருந்தது. ஓவியத்தில் நவீனத்துவத்தின் குறியீடான ஒரு தொடர்வண்டி மேற்கு நோக்கிச் செல்கிறது. அந்நகரில் வசிக்கும் வெள்ளையின மக்கள் தண்டவாளத்தின் ஒருபுறம் நின்று ரயிலை குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். அந்த ரயிலின் புகைப்போக்கியிலிருந்து வெளிவரும் புகையின் பின்னால் குதிரைகளின் மீதமர்ந்திருக்கும் இரண்டு செவ்விந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கின்றனர்.
பூர்வகுடிச் செவ்விந்தியர்களை ஒரு பெரும் ஐரோப்பியர் கூட்டம் பின்னுக்குத் தள்ளுவதும், அவர்களின் பாரம்பரியக் குதிரைகளை நவீன தொடர்வண்டிப் புரட்டிப்போடுவதும், அடர்த்தியான காடுகள் "திருத்தப்பட்டு', "வளர்ச்சி' வந்தேறுவதும் வடிக்கப்பட்டுள்ள அந்த ஓவியத்தின் உட்பொருளைக் கண்ணுறுவதுதான்
கண்ணோட்டம்.
அன்றாட வாழ்விலும், அலுவலகத்திலும்
நீங்கள் எதிர்கொள்ளும் எழுத்துகள், பேச்சுகள், கூற்றுகள், அறிக்கைகள், ஆவணங்கள், வரை
படங்கள், புகைப்படங்கள், விளம்பரங்கள், நூல்கள் என எல்லாவற்றையும் ஒரு விமர்சனப் பகுப்பாய்வோடு பார்த்தறியப் பழகிக் கொள்ளுங்கள். இத்தகையக் கண்டுணர்தலைத்தான் கண்ணோட்டம் என்கிறோம்.
அன்றாட உரையாடல்களின்போது, அமெரிக்கர்கள் "ஐ சீ' அல்லது "ஐ சீ யுவர் பாயின்ட்' என்று அடிக்கடிச் சொல்வார்கள். பேசுகிறவரின் எண்ணத்தை, கருத்தை, உணர்வை, உண்மையை, வாழ்வுலகை தமது அகக்கண்ணால் பார்ப்பதையே அவர்கள் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். வெறுமனே கேட்பதைவிட, இப்படிப் பார்த்தறிவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நமது சமூகத்திலும், ஒருவர் ஒரு விடயத்தை மாறுபட்ட பார்வையோடு விவரித்தால், "இந்தக் கோணத்திலிருந்து நான் இதைப் பார்த்ததேயில்லை' என்று நாமும் சொல்கிறோம்; அப்படியே
பார்க்கவும் முனைகிறோம். சுரங்கப் பார்வையைவிட, பக்கப் பார்வையோடு கூடிய ஒரு பரந்துபட்ட
பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. மேலோட்டமான கண்பார்வையை விட, மனக்கண்களின் கழுகுப் பார்வையும், கூர்மையான "பார்த்தறிதலும்' மிக மிக அவசியமாகின்றன.
இந்தக் கண்ணொளி, அறிவொளி நமக்குத் தேவை என்பதால்தான் "ஒளிபடைத்த கண்ணினாய் வா' என்றார் பாரதியார். கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடல் அருமையாக விவரிக்கிறது:
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!
பார்க்கத் தெரிந்து, பார்த்து நடந்து, பயணம் தொடர்ந்து, பிறவிப்பயனெனும் காட்சி கிடைத்து, வாழ்வின் நோக்கம் அறியும்போது, கவலைகளற்ற வாழ்வை வாழலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.