முந்தி இருப்பச் செயல் - 26: பேரப்பேச்சுத் திறன் - 3
மார்ஷல் ரோசன்பர்க் எனும் அமெரிக்க அறிஞர் பெத்லகேமில் உள்ள ஒரு மசூதியில் பாலஸ்தீன ஆண்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினார்.


மார்ஷல் ரோசன்பர்க் எனும் அமெரிக்க அறிஞர் பெத்லகேமில் உள்ள ஒரு மசூதியில் பாலஸ்தீன ஆண்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினார். அமெரிக்கர்கள் மீது கடும் கோபம் கொண்ட ஒருவர், ரோசன்பர்க்கைப் பார்த்து "கொலைகாரர்' என்று கத்தினார். வேறு சிலர் "குழந்தையைக் கொன்றவர், சதிகாரர்' என்றெல்லாம் திட்டினார்கள். எந்தவிதத்திலும் எதிர்வினையாற்றாது அமைதி காத்த ரோசன்பர்க், கூச்சலிட்டவர்களின் உணர்வுகள் பற்றியும், அவர்களின் தேவைகள் குறித்தும் சிந்தித்தவண்ணம் நின்றிருந்தார்.
ஓர் உணர்ச்சிகரமான, ஆபத்தான சூழலை எப்படி ஒரு பேரப்பேச்சுத் தருணமாக அவர் மாற்றுகிறார் என்பதைக் கவனியுங்கள். கூச்சல் குழப்பத்துக்கிடையே ரோசன்பர்க் ஒரு சில கேள்விகளை எழுப்பினார்:
கேள்வி: எங்கள் நாடு (அமெரிக்கா) எங்களுடைய தேசிய வளங்களை, அதிகாரங்களை உரிய வழியில் உபயோகிக்கவில்லை என்று கோபப்படுகிறீர்களா?
பதில்: ஆமாம், நாங்கள் கோபத்தில் இருக்கிறோம். அமெரிக்காவில் தயாரித்த கண்ணீர் புகைக்குண்டு எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு வீடு வேண்டும்! எங்களுக்கு தனிநாடு வேண்டும்!
கேள்வி: உங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்; நீங்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதனால்தானே கோபம் வருகிறது?
பதில்: எனது குடும்பத்துடன், குழந்தைகளுடன் நான் கடந்த 27 வருடங்களாக வாழும் துன்பகரமான வாழ்வைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
கேள்வி: நீங்கள் நம்பிக்கை இழந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையைப் பற்றி யாராவது புரிந்து கொள்ள மாட்டார்களா என்று வேதனைப்படுகிறீர்கள், அப்படித்தானே?
ரோசன்பர்க் தனிப்பட்ட நிலைப்பாடு ஒன்றினை ஏற்றெடுக்காமல், வன்முறை தோய்ந்த மொழியினை, மென்முறை உணர்வுகளின் மொழியாக மாற்றுகிறார். அவர் சொல்கிறார்: ""கோபமாகக் கத்தியவர் அவரது நிலையினை நான் புரிந்துகொள்கிறேன் என்று அறிந்ததும், நான் விளக்கியவற்றை மிகவும் பொறுமையாகக் கேட்டார். என்னை "கொலைகாரர்' என்று திட்டியவர் ஒரு மணிநேரம் கழித்து ரமலான் விருந்து சாப்பிடுவதற்காக தன் வீட்டிற்கு அழைத்தார்.
இப்படி ஒருவரையொருவர் வெற்றி கொள்வதற்காக அன்றி, புதிய கருத்துகளை உருவாக்குவதற்காக, நல்லுணர்வும், நல்லுறவும் ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுவதை "மென்முறைப் பேச்சுவார்த்தை' எனலாம். இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை "வட்டமேசை மாநாடு' என்றழைக்கிறோம். மென்முறைப் பேச்சுவார்த்தைகள் மேசையைச் சுற்றி நடப்பதால், மேசைதான் இதன் குறியீடு.
எதிராளியை நச்சரித்து, எச்சரித்து, உருட்டி, மிரட்டி, எப்படியாவது வெற்றி பெறுவது என்ற ஒரே இலக்குடன் நடத்தப்படுவதை "கடினப் பேச்சுவார்த்தை' என்று கொள்ளலாம். "அகநக நட்பது' நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, "முகநக நட்பது' கூட இங்கே நடப்பதில்லை. முக தாட்சண்யம் ஏதுமின்றி, முக முறிவு ஏற்படும் வகையில் நடத்தப்படுவதுதான் கடினப் பேச்சுவார்த்தை. முகம்தான் இங்கே முக்கியக் குறியீடு.
பிரச்னையைப் பேசித் தீர்க்காமல், எதிராளியோடு முட்டி, மோதி, அடித்துத் தீர்த்துக் கொள்வது வன்முறை. வன்முறையால் பிரச்னை தீராது; மாறாக, கோபமும், வெறுப்பும், வன்மமும், பகைமையும் கொண்ட இன்னோர் ஆபத்தான வடிவத்தை அது பெறும். கத்தியும், இரத்தமுமே வன்முறையின் முக்கிய குறியீடுகள்.
இரத்தம் தோய்ந்த கத்தியா, கத்திப் பேசும் முகமா, முகங்கொடுத்துப் பேசும் மேசையா? எது உங்கள் தெரிவு?
"தீயினாற் சுட்ட புண்'ணைவிட, "நாவினாற் சுட்ட வடு' மோசமானது என்று குறள் சுட்டிக்காட்டினாலும், கடினமான, புண்படுத்தும் வார்த்தைகள் ரத்தம் சிந்துவதில்லை, உயிருக்குச் சேதம் விளைவிப்பதில்லை. எனவே வன்முறையை விட கடினப் பேச்சுவார்த்தை பரவாயில்லைதான்.
ஆனாலும் முகத்தில் அடிப்பதும், முகத்தில் அடித்தாற் போன்று பேசுவதும் ஒன்றேதான். பேச்சுவார்த்தைகளில் முகம் முக்கியமான பங்காற்றுவதற்குக் காரணம், முகம் மனத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. எதிர்த்தரப்பு தன்னுடைய முகத்தை இழக்கச் செய்யாமல் கண்டடையும் தீர்வே நீடித்த நிலைத்ததன்மை கொண்டதாக இருக்கும்.
இந்த மென்முறையை நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் தனது ஆற்றல்மிக்க வார்த்தைகளில் அழகாகச் சுட்டிக்காட்டுகிறார்:
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய்
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே!
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
கவிஞர் "இல்லை, இல்லை' என்று குறிப்பிடுபவை எவையும் இடம்பெறாமல் நடத்தப்படுவதுதான் மென்முறைப் பேச்சுவார்த்தை.
சண்டையை விட சமாதானம் மேன்மையானது என்றால், அந்த மேன்மையைப் பெறும் இடம் மேசையாக மட்டுமே இருக்க முடியும். சர்வதேச அளவில் இருநாட்டு அல்லது பன்னாட்டுப் பேரப்பேச்சுக்களை "தடம் ஒன்று' (ட்ரேக் ஒன்) பேரப்பேச்சு என்றழைக்கிறோம். அரசு
களுக்கு இடையேயான அறிவிக்கப்படாத இரகசியப் பேச்சுவார்த்தைகளை "தடம் ஒன்றரை' (ட்ரேக் ஒன் அண்ட் ஆஃப்) பேரப்பேச்சு என்று குறிப்பிடுகிறோம்.
அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு ஒத்தாசையாக, உறுதுணையாக நடக்கும் பிற பேச்சுவார்த்தைகளை "தடம் இரண்டு' (ட்ரேக் டூ) பேரப்பேச்சு என்றும், மக்கள் தரப்பு பேச்சுவார்த்தைகளை "தடம் மூன்று' (ட்ரேக் த்ரீ) பேரப்பேச்சு என்றும் பெயர்களிட்டு அழைக்கிறோம்.
பிறரைக் கட்டுப்படுத்தும், தான் நினைத்ததை நடைமுறைப்படுத்தும் ஆற்றல்கொண்ட நாற்காலிகளுக்காகச் சண்டையிடும் இவ்வுலகில், மேசைகள் நோக்கி முன்னேறுவதே மேன்மையானது. நாற்காலி ஒருவருக்கானது; ஆனால் மேசை பலருக்கானது. நாற்காலி ஒரு குரலை மட்டுமே அங்கீகரிக்கும் நிலையில், மேசை பல குரல்களை ஆமோதிக்கிறது.
(போலீஸ்) ஸ்டேஷனுக்குப் போவோம், கோர்ட்டுக்குப் போவோம், ஐ.நா.வுக்குப் போவோம் என்றெல்லாம் சொல்வதைவிட, மேசைக்குப் போவோம் என்றே சொல்லிப் பழகுவோம். மேசைக்குப் போவது மென்முறைப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு! யாரால், எங்கே, எப்போது, யார் யார், எப்படி, என்னென்ன பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைக் கொண்டிருப்போம்.
மேசைப் பேச்சு வெறும் மேடைப் பேச்சல்ல என்பதால், அதற்கு கவனமான முன்தயாரிப்புகளும், சிரத்தையான முன்னெடுப்புகளும் தேவைப்படுகின்றன. மேசைக்குப் போகும் வழியைக் கவனமாகத் தேர்வு செய்தாக வேண்டும். தொடர்புடையோரின் நேரடிப் பேச்சு,
ஒருவர் ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தை, தூதர் அல்லது தரகர் வழியாக நடத்தப்படும் பேச்சுவார்த்தை, அறிவார்ந்தோரின் மாநாடு என பற்பல வழிகளில் மேசையை நோக்கிச் செல்லலாம்.
இன்றைய அரசியல் மற்றும் இராஜதந்திர தளங்களில், பலமான நிலையிலிருந்தவாறு பேரப்பேச்சில் ஈடுபடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். அதாவது நாம் பல்வேறு ஆயுதங்களைத் தயாரித்து அல்லது வாங்கிக் குவித்து, எதிராளியைப் பலவீனமான நிலையில் வைத்துப் பேசும்போது, நாம் உறுதியாக வெற்றி பெறலாம் எனும் சிந்தனை மேலோங்கி நிற்கிறது. அப்படிச் செய்யும்போது, நேர்மையான கருத்துப் பரிமாற்றமோ, உண்மையான தேடலோ நடக்க வாய்ப்பேயில்லை.
ஊர்ப் பஞ்சாயத்து முதல், உயரே நடக்கும் அரசுப் பேச்சுவார்த்தைகள் வரை, பெண்களுக்கு உரிய இடமோ, அங்கீகாரமோ அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்குப் போதிய அறிவோ, திறமையோ, தொடர்புகளோ இல்லை என்று சாக்குப்போக்கு சொல்லி, கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரையான அனைத்துப் பேரப்பேச்சுக்களிலும் பெண்கள் பெரிதும் ஒதுக்கப்படுகின்றனர் அல்லது மட்டம் தட்டப்படுகின்றனர். பெண் தலைவர்கள், சமூக ஆளுமைகள், வழக்கறிஞர்கள் போன்றோர் பெருமளவில் உருவாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பல்வேறு பேரப்பேச்சுக்களில் பெண்களும் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், வாய்ப்புக்களும் வழங்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை கலாசாரத்தை நமது வீடுகளில், குடும்பங்களில், வீதிகளில் அன்றாடம் செயல்படுத்தி வாழ்ந்து காட்ட வேண்டும். பேரப்பேச்சுத் திறனை பெற்றோர் குழந்தைகளுக்கு சிரத்தையுடன் கற்பிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், வழிபாட்டுத்தலங்களில் எல்லாம் இதனை முறையாகப் பயிற்றுவிக்க வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
spuk2020@hotmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...