பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முந்தி இருப்பச் செயல்: எழுத்துத் திறன் - 1

எழுத்துத் திறன் என்றால் சாவி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பொன்னீலன், மலர்வதி போல எழுதுவதல்ல. அப்படி எழுத முடிந்தால், அதைவிடப் பெரும்பேறு வேறெதுவும் கிடையாது.

News image
Updated On :28 ஜூலை 2020, 12:30 am

சுப. உதயகுமாரன்


எழுத்துத் திறன் என்றால் சாவி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பொன்னீலன், மலர்வதி போல எழுதுவதல்ல. அப்படி எழுத முடிந்தால், அதைவிடப் பெரும்பேறு வேறெதுவும் கிடையாது. நாம் விவாதிக்கும் எழுத்துத் திறன் என்பது உங்கள் எண்ணங்களை, கருத்துகளை, திட்டங்களை, தெளிவாக, நேர்த்தியாக எழுத்து வடிவில் பதிவு செய்வதையும், உங்கள் பணியிடத்தில் எழும் அதற்கான தேவையைப்பற்றியும்தான்.

சமூக ஊடகங்களின் பயனாக இன்று பலரும் எழுதுகிறோம். இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்தான் என்றாலும், பணிச்சூழலில் முறைப்படியான எழுத்துக்குரிய இலக்கணத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது.

எழுதுவதும், ஆவணப்படுத்துவதும் நவீன பணிச்சூழலின் முக்கியமான அம்சங்களாக மாறியிருக்கின்றன. நீங்கள் எந்த வேலை செய்தாலும், குறிப்புகள் எடுத்துப் பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கும். கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறிப்பாணைகள், புகார் மனுக்கள், நாட்குறிப்புகள், திட்ட அறிக்கைகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், விளம்பரங்கள், பத்திரிகைச் செய்திகள், நடுப்பக்கக் கட்டுரைகள் என பற்பல விடயங்களை எழுத வேண்டிய தேவை எழலாம்.

இவற்றை தன்னம்பிக்கையோடு தயாரிப்பதற்கு அடிப்படைத் தேவை எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, சொற்குறிகள் பிழை போன்றவை எழாமல், இல்லாமல் எழுதத் தெரிந்திருப்பதுதான்.

இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவதும் மிக முக்கியம். "நாயும், பூனையும் சண்டையிட்டது' என்பது தவறானது. "சண்டையிட்டன' என்பதுதான் சரி எனும் விதிமுறைகளை எல்லாம் அறிந்தே ஆக வேண்டும்.

உயிரெழுத்துக்களின் முன்னால் "ஓர்' எனும் பெயர்ச்சொல்குறியையும், மெய்யெழுத்துக்களின் முன்னால் "ஒரு' எனும் பெயர்ச்சொல்குறியையும் பயன்படுத்த வேண்டும் எனும் அடிப்படைவிதி தெரிந்தே ஆக வேண்டும். தெரியவில்லை என்றால் படித்தே ஆக வேண்டும்.

அதேபோல, உங்கள் எழுத்தில் ஒரு சிறு சொற்குறி கூட உங்கள் வாக்கியத்தின் அர்த்தத்தைத் தலைகீழாக மாற்றிவிடும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். "கபீர், மாமா வந்திருக்கிறார்' எனும் வாக்கியமும், "கபீர் மாமா வந்திருக்கிறார்' எனும் வாக்கியமும் முற்றிலும் வெவ்வேறு அர்த்தங்களைத் தருவன.

ஆங்கிலத்தில் எழுதும்போது, எழுத்துப் பிழை, இலக்கணப்பிழை போன்றவற்றை கணினியே ஓரளவு சரி செய்துவிடுகிறது. ஆனாலும் ஒரு படைப்பின் அச்சாணியாக இருப்பது எழுதுபவரின் கைவண்ணமும், கலைவண்ணமும்தானே?

பணியிடங்களில் எழுதப்படும் படைப்புகளுக்கு நான்கு முக்கியமான நோக்கங்கள் இருக்கின்றன: தகவல் தெரிவிப்பது, வேண்டுகோள் விடுப்பது, ஆவணப்படுத்துவது, கற்பிப்பது.

ஒரு குறிப்பிட்டப் படைப்பை எழுதத் தொடங்கும் முன்னர், அதன் முக்கிய நோக்கம் என்னவென்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அதேபோல, நீங்கள் எழுதத் தொடங்கும்போது, எதைப் பற்றி எழுதப் போகிறீர்கள் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எழுதுவதை வாசிக்கப் போகிறவர் யார் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இச்செயல்பாட்டில் உங்களின் பங்கு, கடமை என்னவென்பதையும் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். கீழ்க்காணும் படிநிலைகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள்:

 உங்கள் தகவல்கள் அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள்.
 உங்கள் வாசகர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டுங்கள்.
 உங்கள் படைப்பின் அடிப்படை நோக்கம் என்னவென்று அறியுங்கள்.
 ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள்.
 எழுதுங்கள்.
 ஓர் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்.
 திரும்பப் படித்துப்பார்த்து படைப்பை சக்திமிக்கதாக மாற்றுங்கள்.
படைப்பை முழுமையானதாக மாற்றத் தேவையான திருத்தங்களைச் செய்யுங்கள்.

ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதை எப்படிச் செய்வது?

என்ன எழுதப் போகிறோம் என்பதை மனக்கண்ணால் பாருங்கள். நீங்கள் பகிரவிருக்கும் விடயங்களை முக்கியத்துவத்துக்கேற்ப வரிசைப்படுத்துங்கள். அவற்றை காலவரிசைப்படி அடுக்கிக் கொள்ளுங்கள். பொதுவான விடயங்களை முதலில் சொல்லிவிட்டு, சிறப்பான விடயங்களுக்கு நகருங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் சாதக-பாதகங்களை, பண்புகள்-பயன்களை அட்ட வணைப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் வேறுபடுத்திக் காட்டும் தலைப்புக்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.

இந்த ஒழுங்கமைப்பு வேலையைச் செய்துவிட்டு, நீங்கள் எழுத வேண்டியதை வேகமாக, நிறுத்தாமல், கவனச்சிதைவு இல்லாமல், பயப்படாமல் எழுதிவிடுங்கள். எழுதும்போது கீழ்க்காணும் விடயங்களை மனதிற்கொள்ளுங்கள்:

உங்கள் படைப்பைப் படிப்பவரை மையப்படுத்தி எழுதுங்கள். அவருக்கு இதில் என்ன இருக்கிறது என்பதுதான் மிக முக்கியமான அம்சம்.
சுருங்கச்சொல்லி விளங்க வையுங்கள். "வழவழ... கொழகொழ' என்று இழுக்காதீர்கள்.
மிக நீண்ட, சிக்கலான வாக்கியங்களைத் தவிர்த்துவிடுங்கள்.
எதிர்மறையான சொற்களை, கருத்துகளை, உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நேர்மறையானவற்றைப் பயன்படுத்துங்கள்.
 ஒவ்வொரு வாக்கியமும் நேரடி வாக்கியமாக இருக்கட்டும்.

“நாங்கள் இந்தப் பொருளின் தரம் குறித்து உங்களுக்கு உறுதியளிக்கிறோம்' என்று சொல்லுங்கள்.

“இந்தப் பொருளின் தரம் குறித்த உறுதி உங்களுக்கு அளிக்கப்படுகிறது' என்றெழுதுவது நகைப்புக்கு இடமாகிவிடும்.

 ஒரு பத்தியில் ஒரு கருத்து இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
 ஒரு பத்தி என்பது அச்சில் பத்து வரிகளுக்குமேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாக்கியங்களும், பத்திகளும் குறுகலாகவும், நீளமாகவும் கலந்திருக்கும்படி எழுதுங்கள்.
 ஒவ்வொரு பத்தியின் முதல் வாக்கியமும் அந்தப் பத்தியின் உள்ளடக்கத்தை முன்மொழியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
 ஒவ்வொரு பத்தியிலுள்ள வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கச் செய்யுங்கள். அதேபோல, அனைத்துப் பத்தி
களையும் சங்கிலித் தொடர்போல ஒன்றோடொன்று இணைத்து எழுதுங்கள்.
 மேற்படி பத்திகளில் தெரிவிக்கும் கருத்துகள் கோர்வையாக இருக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
 உங்கள் எழுத்து யாரையும், குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் போன்றோரை, புண்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு நீங்கள் எழுதிய படைப்பை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, வேறு வேலைகளைக் கவனியுங்கள். ஓர் இடைவேளைக்குப் பிறகு, எழுதிவைத்திருப்பதை ஒரு மூன்றாம் நபர் போல, விருப்பு வெறுப்பின்றி படித்துப் பாருங்கள்.

எழுத்து, இலக்கண, சொற்குறிப் பிழைகளைத் திருத்துங்கள். எழுதி வைத்திருப்பது சுருக்கமாக, நறுக்கென இருக்கிறதா என்று பாருங்கள். தேவையற்ற, முறையற்ற வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்களை நீக்கிவிட்டு, மொழிநடையை மேம்படுத்துங்கள். தெளிவற்ற வாக்கியங்களை எளிய, இனிய, நேரடி வாக்கியங்களாக மாற்றுங்கள். தேவைப்படும் தலைப்புகள், எடுத்துக்காட்டுகள், வரைபடங்கள், பட்டியல்கள், பெட்டிச் செய்திகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்தனைக் கட்டங்களையும் தாண்டிய பிறகும், இறுதியாக மீண்டும் ஒரு முறை உங்கள் படைப்பைப் படியுங்கள். அது அழகியல்தன்மை கொண்டிருக்கிறதா, தெளிவாக இருக்கிறதா, முழுமையானதாக இருக்கிறதா, வாசிப்பவருக்காக எழுதப்பட்டிருக்கிறதா, நீங்கள் சொல்லும் செய்திக்கு உகந்த குரலும், தொனியும் அதில் இருக்கின்றனவா, உங்கள் முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறதா எனும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள். இக்கேள்விகள் அனைத்திற்கும் "ஆம்' என்று நீங்கள் பதிலளித்தால், அந்தப் படைப்பு உங்கள் மேசையைவிட்டு வெளியே செல்லலாம்.
(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.