பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முந்தி இருப்பச் செயல்: பயிற்றிப் பல கல்வி தந்து...

"ஒரு சீனாக்காரர் சாப்பிட்டதற்கு உலகமே  கைகழுவுகிறது' என்று சிலர் கரோனா பிரச்னை பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள்.

News image
Updated On :15 ஜூன் 2020, 6:30 pm

சுப. உதயகுமாரன்


"ஒரு சீனாக்காரர் சாப்பிட்டதற்கு உலகமே கைகழுவுகிறது' என்று சிலர் கரோனா பிரச்னை பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். நாமெல்லாம் சிரித்துவிட்டுக் கடந்து சென்றோம். பிரச்னை பூதாகரமாக வெடித்த பிறகு, கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உயிர்ப்பிரச்னை என்றான பிறகுதான், கைகழுவுவதைப் பற்றி நம்மில் பலர் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினோம்.

உள்ளங்கைகளைச் சேர்த்துத் தேய்த்து, விரல் இடுக்களில் விரல்களைக் கோர்த்துத் தேய்த்து, பெருவிரல்கள் இரண்டையும் மட்டும் இணைத்துத் தேய்த்து, நகக்கண்களை உள்ளங்கைகளுக்குள் அழுத்தித் தேய்த்து, பின்னங்கைகளையும் தேய்த்துக் கழுவ வேண்டும் எனும் வித்தையைப் படித்தோம்.

நாமெல்லாருமே குழந்தைப் பருவத்திலிருந்தே கைவிரல்களால்தான் உணவை அள்ளியெடுத்து உண்டு வருகிறோம். காலம் காலமாக சாப்பிடுவதற்கு முன்னரும், சாப்பிட்ட பின்னரும் கைகழுவி வந்திருக்கிறோம். ஆனாலும், நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எப்படிக் கை கழுவ வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஏராளமான பொதுநல உணர்வாளர்கள் நமக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. கைகழுவுவது ஒரு முக்கியமான வாழ்க்கைத் திறனாக (கண்ச்ங் நந்ண்ப்ப்) மாறிவிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தச் சமூகமும் கைகழுவப் படிப்பது போலவே, நம் மாணவர்களும், இளைஞர்களும் பல்வேறு வாழ்க்கைத் திறன்கள் பெற வேண்டியிருப்பதைப் பற்றி நாம் கரிசனம் கொள்கிறோம்.

ஒட்டுமொத்த பள்ளி, கல்லூரிக் கல்வியும் வாழ்க்கைக்கானதாகவே இருப்பதால், விசேடமாக வாழ்க்கைத் திறன்களை கற்பிக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்றுதான் பலரும் சிந்தித்தோம்.

ஆனால் பள்ளி, கல்லூரிகளின் யதார்த்தமே வேறாக இருக்கிறது. குறிப்பிட்ட பாடங்களைப் பாடத்திட்டத்தின்படி உரிய கால இடைவெளியில் முடித்தாக வேண்டும்; முறையாகத் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்க வேண்டும்; மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பேணல்; ஆவணங்கள் தயாரிப்பு என்றெல்லாம்தான் ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் தங்கள் நேரத்தைச் செலவிட முடிகிறது. அரசின் கல்வித்துறை, கல்வி நிறுவனங்களை அதட்ட, கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை மிரட்ட, ஆசிரியர்கள் மாணவர்களை விரட்ட, ஒரு வேடிக்கையான தொடர் ஓட்டம்தான் அங்கே நடக்கிறது.

மாணவர்களுக்கு என்னென்ன அடிப்படைத் திறமைகள் தேவைப்படுகின்றன என்று அவர்களிடம் யாரும் கேட்பதுமில்லை; கலந்தாலோசிப்பதுமில்லை. அவற்றைக் கொடுக்க முனைவதுமில்லை; முடிவதுமில்லை. வெறுமனே தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக கல்விக்கூடங்கள் மாறியிருக்கும் நிலையில், படைப்புத்திறன் கொண்ட நடவடிக்கைகளை அங்கே எதிர்பார்க்க இயலாத நிலை நீடிக்கிறது.

இன்ன பிற காரணங்களால், தொழில் நிறுவனங்கள் "90 விழுக்காடு பட்டதாரிகளையும், 75 விழுக்காடு பொறியாளர்களையும் வேலைக்கமர்த்த தகுதியற்றவர்கள்' என்று நிராகரிப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களிடம் தமது துறை குறித்த முழுமையான அறிவோ, தொழிற்நுட்பத்திறனோ, தன்னாளுமை மற்றும் பிரச்னைகள் மேலாண்மை போன்ற திறமைகளோ காணப்படவில்லை என்று தொழில் நிறுவனங்கள் விசனப்படுகின்றன. வேலைக்கமர்த்தும் திறன்கொண்ட இளைஞர்களின்
எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவது அனைத்துத் தரப்புக்களின் கவலையாகவும் இருக்கிறது.

அண்மையில் இரண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சேர்ந்து நடத்திய ஓர் ஆய்வில், மாணவர்கள் தங்கள் வேலைகளில் வெற்றி பெறுவதற்கு வெறும் 25 விழுக்காடுதான் தொழில்நுட்பத் திறன் தேவைப்படுகிறது; ஆனால் 75 விழுக்காடு பிறரோடான உறவுத் திறன்களே அத்தியாவசியமாக இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கின்றன.

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' என்று சொல்வதுபோல, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் பெறுகிற கோட்பாட்டு அறிவு மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கைக்குப் போதாது. நடைமுறையில் பயன்படும் கல்வியும், அறிவுசார்ந்த திறமைகளும் அவசியம் வேண்டும் என்பது தெளிவாகிறது.

இப்படியாக வாழ்க்கைத் திறன்கள் மற்றும் மென்திறன்கள் (நர்ச்ற் நந்ண்ப்ப்ள்) பற்றி பேசத் தொடங்கியவர்களும்கூட, பேச்சு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதும், நேர்காணல் பயிற்சி கொடுப்பதும், குழு விவாதம் செய்யப் பயிற்றுவிப்பதுமாகவே இருந்தனர்.

இப்போதும் கூட பலரும் மாணவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பாகவே பல பயிற்சிகளும், வகுப்புக்களும் நடத்துகின்றனர். கல்வி, அடுத்தது வேலை என்று நேர்கோட்டிலேயே நாம் சிந்திக்கிறோம். இந்நடவடிக்கைகளின்போதும், அவற்றுக்குப் பிறகும் வாழ்க்கை என்று ஒன்று இருப்பதைப் பற்றி நாம் பெரிதாக அக்கறை கொள்வதில்லை.

எடுத்துக்காட்டாக, கல்வி, வேலை, வாழ்க்கை என அனைத்துக் கட்டங்களிலுமே தேவைப்படும் சில முக்கியமான விடயங்களான செவிமடுத்தல், பகுத்தறிதல், கருத்துப்பரிமாறல், தகராறு தீர்த்தல், மீளிணக்கம், முடிவெடுத்தல், கடினமான மனிதர்களை கைக்கொள்ளல் என ஏராளமான விடயங்கள் பற்றி நாம் எங்குமே பேசுவதில்லை. பாலுறவு போலவே எங்கேயாவது, எப்படியாவது இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்கள் என்று கருதிக் கொண்டு நம் இளைஞர்களை முற்றிலுமாகக் கைவிடுகிறோம்.

ஆனால் கேட்டல் குறித்து எங்கே போய் படிப்பது? பள்ளியிலும், கல்லூரியிலும் நாம் படிக்கும்போது, பத்துக்கணக்கான ஆசிரியர்களை நாம் சந்திக்கிறோம். ஆனால் அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே நம் மனத்தைக் கவர்கிறார்கள். நமது அன்றாட வாழ்வில் நாம் மருத்துவர், வழக்கறிஞர், காவல்துறை அதிகாரி, வங்கி ஊழியர் என பலரைச் சந்திக்கிறோம்; உறவாடுகிறோம். ஆனால் யார் நம் கவனத்தைக் கவர்கிறார்கள், நமது அன்புக்குப் பாத்திரமாகிறார்கள் என்று பார்த்தால், நாம் பேசுவதைக் கவனமாகச் செவிமடுக்கிறவர்கள்தான்.

இதை இன்னொரு விதத்தில் சொன்னால், யார் ஒருவர் பிறர் பேசும்போது கூர்மையாகக் கேட்கிறாரோ, அவர் தன் வேலையில் பெரிதும் மிளிர்கிறார், ஒரு வெற்றியாளராகவே இருக்கிறார். கேட்டல் என்பது இத்தனை முக்கியமானது என்றால், நாம் ஏன் இதனை எங்கேயுமே முறையாகப் பயிற்றுவிப்பதில்லை?
ஓர் அழகான இளம்பெண்ணிடம் ஓர் இளைஞன் வந்து தன் காதலைத் தெரியப்படுத்துகிறான். அதனை ஏற்றுக் கொள்ள விரும்பாத அல்லது முடியாத அந்தப் பெண், அந்தச் சூழலை எப்படி சாதுர்யமாக அணுகி, சாமர்த்தியமாகப் பேசி, அந்தப் பிரச்னையை எதிர்கொள்வது என்று நமது கல்வித்திட்டம் எங்காவது, எதையாவது போதிக்கிறதா? இல்லை.

வேலை கிடைப்பதைப் பற்றியெல்லாம் பேசுகிற வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர்கள் கூட, நம் இளைஞர்கள் உரிய வேலை, உற்ற நண்பர்கள், உவப்பானத் திருமணம் போன்றவை குறித்து சொந்தமாக முடிவுகள் எடுப்பதற்கு எந்தவிதத்திலாவது உதவுகிறோமா? இல்லையே!

இந்தியாவைப் போன்ற பல்வேறு சாதிகள், மதங்கள், இனங்கள், மொழிகள், வகுப்புகளைக் கொண்ட மக்கள் வாழும் நாட்டில் வாழ்க்கைத் திறன்கள் மிகவும் இன்றியமையாதவை. அதனால்தான் பாரதியார், "பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்று நம்மைப் பணித்தார். இந்தத் தொடர் அந்தப் பணியை திறம்படச் செய்ய விரும்புகிறது.

பரவலாகப் பயிற்றுவிக்கப்படாத பயிற்சிகளின் ஒரு நீண்ட பட்டியலோடு எழுதத் தொடங்குகிறேன். உங்கள் கருத்துகளையும், உங்களுக்கு வேறு என்னென்ன திறமைகள் தேவைப்படுகின்றன என்பதையும் தெரிவியுங்கள்.
தொடர்வோம்!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.