உதவி செய்வோரே... நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்!
நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஓர் அதிசயமே. அதை புறக்கணிப்பதற்குப் பதிலாக அனுபவிக்க வேண்டும்.


நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஓர் அதிசயமே. அதை புறக்கணிப்பதற்குப் பதிலாக அனுபவிக்க வேண்டும்.
- யோகோ ஓனோ
உலகமே ஊரடங்கில் இருப்பது என்பது மனிதகுல வரலாற்றிலேயே இது முதல் முறையாகக் கூட இருக்கலாம். ஊரடங்கு நேரத்தில் அவசிய, அவசரத் தேவைக்கு... குறிப்பாக உடல்நிலை, மருத்துவம் தொடர்பாகக் கூட சாலைகளில் பயணிக்க நேர்வது ஓர் அமைதியச்ச அனுபவம்.
மருத்துவமனையில் இருக்கும் பெற்றவளுக்கு தினந்தோறும் உணவுக் கொடுக்கச் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓர் இளைஞன் ஒருவன், அந்த குறிப்பிட்ட மருத்துவமனை நோக்கி, குறிப்பிட்ட நேரத்தில் செல்லும் போதெல்லாம்... தளர்ந்த நடையோடு ஒரு வயதான பெரியவர் அவனது எதிர்திசையிலிருந்து நடந்து வருவதை கவனிக்கின்றான். ஒரு நாள் அவரை நிறுத்தி விவரம் கேட்கிறான். தனக்கு யாரும் இல்லையென்றும், தான் ஒரு வணிக நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிவதாகவும் கூறிய அந்தப் பெரியவர், பெரும்பாலும் உணவகங்களில் உண்டு காலம் கடத்தியவர். ஊரடங்கின் கோர முகமெல்லாம் இவர்களுக்குத்தான்.
உணவகங்கள் இல்லாத இந்த நேரத்தில் இலவச உணவு கிடைக்குமிடம் நோக்கி நடந்தே செல்பவர்களில் இந்தப் பெரியவரும் ஒருவரானார்.
பெரியவரிடம் விவரம் கேட்ட இந்த இளைஞர், ""ஐயா! நான் இதே நேரம் தினந்தோறும் இந்தப் பக்கம் வருவேன். உங்களுக்கு நான் உணவு கொண்டு வந்து கொடுக்கட்டுமா?'' என்று கேட்க... அந்தப் பெரியவர் என்ன சொன்னாரென்று தெரியுமா? அருகில் நாவறண்டு நின்றுகொண்டிருந்த மாடுகளையும், நாய்களையும் சுட்டிக்காட்டி, ""தம்பி! என்னை விடுங்க... இந்த வாயில்லா ஜீவன்களெல்லாம் யார்கிட்ட போயி நிற்கும்? என்ன செய்யும்?'' விக்கித்த பார்வையோடு அவ்விடத்திலிருந்து நகர்கிறான் அந்த இளைஞன்.
அடுத்த நாள், பெரியவரின் ஒப்புதல் இல்லாமலேயே, அவருக்கு அவனால் இயன்ற சாப்பாட்டு பொட்டலம் ஒன்றை கட்டிக்கொண்டு வந்தவன், வழியில் எதிர்பட்ட பெரியவரை நிறுத்தி கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கொடுக்க, புன்னகைத்த வண்ணம் பரஸ்பரம் இருவரும் தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர். பெரியவரும் உணவைப் பெற்றுக்கொண்டார்.
அதற்கு அடுத்த நாள். மீண்டும் அதே இடம். பரஸ்பர அன்பான சிரிப்போடு உணவு பொட்டலமும் பெரியவரிடம் கைமாற, இளைஞர் கேட்டார்: ""ஐயா! நேற்று... சாப்பாடு எப்படி, பரவாயில்லையா? போதுமானதா இருந்துச்சா?'' என்று கேட்டான்.
அதற்கு பெரியவர், ""தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க. நான் அந்த மரத்தடியில உட்கார்ந்து உங்க சாப்பாட்ட பிரிச்சப்ப... அந்த நாய் ஒன்னு பக்கத்துல வந்துச்சு. சரி அதுக்கு ஒரு வாய் வச்சிட்டு நம்ம சாப்பிடுவோம்னு ஒரு வாய்தான் அதுக்கு எடுத்துக்கொடுத்தேன். எங்கிருந்துதான் வந்துச்சோ... ஒரு ஆறேழு நாய்கள் ஓடிவந்திடுச்சு. அப்புறம் என்ன? அதுகளை சண்டைபோடாம சாப்பிட வைச்சுட்டு, நீங்க கொடுத்த தண்ணீர் பாட்டில்ல கையைக் கழுவிட்டு, நான் கொஞ்சம தண்ணிய குடிச்சிட்டு... நான் எப்பவும் சாப்பிடற இடத்துக்கே நடந்து போயிட்டேன்'' என்றார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அந்த இளைஞன் புதுமனிதனாகியிருந்தான்.
இப்பொழுது அந்த இளைஞன் தினந்தோறும் அந்தப் பெரியவரோடு சேர்த்து... அந்தப்பகுதியில் இருக்கும் நாய்களுக்கு, மாடுகளுக்கும் சேர்த்து ஏதாவது உணவு கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றானாம். இதில் மிக முக்கியமான நிகழ்வு என்னவென்றால், மருத்துவமனையில் இருந்த அவனது தாயார் குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டார் என்பதே.
"எல்லாமே ஒன்றில்லை. இறை தனி; உயிர் தனி. இறை மேலே; உயிர் கீழே. இறையருள் இருந்தால், உயிர் தகுதிபெற்று இறையோடு ஒன்றியிருக்கலாம்; நீ அது ஆகலாம்' என்று மனிதன் தெய்வநிலை அடைவது குறித்து திருமூலர் இப்படி கூறியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள், தெய்வ வழிபாடுகள். ஆனால், வாழுகின்ற காலத்தில் தன்னுயிர் மற்றும் தான் சார்ந்தவர்கள் உயிர் பேணுதலைக் கடந்து, பிற உயிர்களின் நலனில், வாழ்வில், மேம்பாட்டில், அவற்றின் பசியாற்றுவதில் அக்கறையோடு, ஈரத்தோடு ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இறையருளும், இயற்கையின் அருளும் கிட்டுகிறது. அப்படி இயற்கையின் அருள் கிட்டியவர்கள் இருக்கும் இடமும், அவர்களது பார்வையில் படும் அனைத்து உயிர்களுக்கும் நன்மையே நடக்கிறது. பதினெண் சித்தர்களில் ஆரம்பித்து ரமண மகரிஷிவரை இதுவே உண்மை. இன்று நம் உலகை சூழ்ந்திருக்கும் இந்த கொள்ளைநோய் பீதி, அச்சம் எல்லாம் விலகி இயல்பு நிலை திரும்புகின்றபோது... நோய் தாக்குதலிலிருந்து தப்பித்தவர்கள், தங்களை காப்பாற்றிக் கொண்டவர்கள் எல்லாரும் மனிதர்களாக, மனிதத் தன்மையோடு மட்டும் வாழத் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக தீநுண்மி கொடுத்திருக்கும் நல்ல வாய்ப்பிது.
பிறருடைய துன்பத்தை உணர்ந்து உதவி செய்பவனே உயிருள்ள மனிதன், அப்படியல்லாதவன் செத்த பிணத்திற்கு ஒப்பானவன் என்றும் (குறள்: 214), இல்லாதவர்களுக்கு கொடுப்பதே ஈகை. மற்றதெல்லாம் பிரதிபலன் கருதி செய்யப்படுபவை என்றும் (குறள்: 221), மழை பெய்கின்ற மேகம் உலகத்தாரிடம் என்ன பிரதியுபகாரத்தை எதிர்பார்த்து பெய்கிறது என்றும் (குறள்: 211), அன்பில்லாத உடல் வெறுந் தோலால் மூடப்பட்ட எலும்புகள்தான் (குறள்: 80), பிற உயிருக்கு உண்டாகும் துன்பம் தமக்கு வரும் துன்பத்தைப் போலத்தானே இருக்குமென்று உணராவிட்டால் ஒருவரது அறிவினால் என்ன பயன்? என்றும் (குறள்: 315) உயிருள்ள மனிதர்களுக்கான வரையறைகளை திருவள்ளுவர் சொல்லிச் சென்றிருப்பதை நாம் மறப்பது சரியா?
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்வதற்குக் கிடைத்திருக்கின்ற பொன்னான வாய்ப்பிது. புரிந்துகொள்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...