தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வலிக்கவே வலிக்காது!

"டாக்டரிடம் அழைத்துச் சென்று ஊசி போடச் சொல்வேன்' என  சிலர் குழந்தைகளைப்  பயமுறுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.

News image
Updated On :6 அக்டோபர் 2020, 12:30 am

ஜீவா

"டாக்டரிடம் அழைத்துச் சென்று ஊசி போடச் சொல்வேன்' என  சிலர் குழந்தைகளைப்  பயமுறுத்துவதைப் பார்த்திருப்பீர்கள்.  நீரிழிவு  நோய் போன்ற நோயின் பாதிப்பால், தினம்தோறும்   ஊசி போட வேண்டியவர்களும் இருக்கிறார்கள்.  குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி,  எல்லாரும் ஊசியை நினைக்கும்போதே பயப்படுவதற்குக் காரணம்,  ஊசி போடும்போது வலிப்பதுதான்.   

"ஊசியும் போட வேண்டும்; வலிக்கவும் கூடாது'  என்ற எண்ணத்தில் ஐஐடி - காரக்பூரின்  எலக்ட்ரானிக்ஸ் அண்ட் எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோ நீடில் எனப்படும் ஊசியை உருவாக்கியிருக்கிறார்கள்.  இந்த ஊசியைப் பயன்படுத்தி மருந்தை உடலினுள் செலுத்த அதற்கேற்ற மைக்ரோ பம்ப்- ஐயும் உருவாக்கியிருக்கிறார்கள்.  

இந்த ஊசியின் மூலம் உடலினுள் மருந்தைச் செலுத்தும்போது, வலிக்கவே வலிக்காது.  ஏனென்றால்  இந்த ஊசி மிக மிகச் சிறியது.  ஊசி போடும்போது தோலைத் துளைத்துச் சென்று வலியைத் தூண்டும் நரம்புகளின் மீது இந்த ஊசி படுவதேயில்லை.  

இந்த நுண்ணிய ஊசி தலை முடியை விட மிக மிக மெல்லியது.  அவ்வளவு மெல்லிய ஊசி  உடலில் குத்தும்போது வளைந்துவிடாமல் - உடைந்து போகாமல் இருக்க வேண்டும். இதற்கு அவர்கள் எஸ்யூ - 8 ப்ரீகர்சர்ஸ் எனச் சொல்லப்படும் கண்ணாடி போன்ற கரிப் பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  

கார்பன் மைக்ரோஎலக்ட்ரோமெக்கானிக்கல்  தொழில்நுட்பத்தை இந்த நுண்ணிய ஊசியைத் தயாரிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  இந்த நுண்ணிய ஊசியின் வெளிப்புற விட்டம் 55 மைக்ரோமீட்டர்கள் ஆகும்.  உட்புற விட்டம் 35 மைக்ரோமீட்டர்கள் ஆகும்.  இடையிலுள்ள 15 மைக்ரோ மீட்டர்கள் விட்ட அளவில் தான் மருந்து செல்ல வேண்டும். 

இவ்வளவு நுண்ணிய ஊசி,  சாதாரணமாகப் பயன்படுத்தும் ஊசிகளை விட எட்டு மடங்கு கடினத்தன்மையுடனும்,  4.8 மடங்கு விரைப்புத் தன்மையுடனும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல்,  ஒரு நொடிக்குள் 0.012 மைக்ரோலிட்டர் மருந்து ஊசிக்குள் செல்ல வேண்டும்.  இவற்றையெல்லாம்  கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த ஊசியைத் தயாரித்திருக்கிறார்கள். 

இந்த ஊசியின் இன்னொரு பகுதியான மைக்ரோ பம்ப்,  அயோனிக் பாலிமெர் உலோகக் கலவையிலான சவ்வு போன்ற பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது.  

ஊசிக்குள் மருந்தைச் செலுத்தும்போது ஒரு நிமிடத்துக்குள் 30 மைக்ரோ லிட்டர் மருந்து செல்லும் வகையில் இந்த மைக்ரோ பம்ப் செயல்படும். 

""அடிக்கடி ஊசி போட வேண்டிய தேவையுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மைக்ரோ நீடில் மிகவும் பயன்படும்.  சிலவகையான புற்றுநோய்கள், நிணநீர் அமைப்பினால் வரக் கூடிய நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஊசி போட வேண்டியதிருக்கும்.  அவர்களுக்கு இந்த ஊசி  பயன்படும்'' என்கிறார் இந்த மைக்ரோ ஊசியைத் தயாரித்த குழுவின் தலைவரான தருண் காந்தி பட்டாச்சார்யா.

இந்த  ஊசி  இப்போது மிருகங்களின் உடலில் செலுத்தி  சோதனை செய்து பார்க்கப்பட்டு இருக்கிறது.  மிக விரைவில் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் மேம்படுத்தப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.