ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி... கரோனா காலத்து சொற்கள்!
மக்கள் தங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவே மொழிகள் தோன்றின.


மக்கள் தங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவே மொழிகள் தோன்றின. ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்கள் நிரந்தரமாக வழக்கில் இருப்பதில்லை. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பல புதிய சொற்கள் பிறந்து மக்களிடையே வழக்கத்துக்கு வருகின்றன. சில சொற்கள் காலப்போக்கில் மறைந்தும் போவதுண்டு.
கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. எந்தவொரு நாட்டையும் அந்நோய்த்தொற்று விட்டுவைக்கவில்லை. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மக்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையே பெருமளவில் மாறியுள்ளது.
வாழ்க்கை மட்டுமல்லாமல் மக்கள் பேசும் மொழியிலும் பல்வேறு சொற்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. முக்கியமாக ஆங்கிலத்தில் சில சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சொற்கள் குறித்து ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியைத் தயாரிப்போர் ஆய்வு மேற்கொண்டனர்.
வழக்கமாக ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் ஆங்கிலத்தில் புதிதாக வழக்கத்துக்கு வந்துள்ள சொற்கள் குறித்து ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மேற்கொள்ளும். அதனடிப்படையில், ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிய சொற்கள் இணைக்கப்படும்.
ஆண்டுதோறும் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய சொற்கள் இணைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை ஆக்ஸ்ஃபோர்டு வெளியிடும். கரோனா நோய்த்தொற்று பரவல் மக்களிடையே பல சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளதை நடப்பாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆக்ஸ்ஃபோர்டு கண்டறிந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் ஒரே ஒரு சொல் மட்டுமே புதிதாகத் தோன்றியுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு தெரிவித்துள்ளது. கரோனா நோய்த்தொற்றைக் குறிக்கும் "கொவைட்-19' என்ற சொல்லே அது.
மற்ற சொற்களான "சோசியல் டிஸ்டன்சிங்' (சமூக இடைவெளி), "ரிப்ரொடக்ஷன் நம்பர்' (நோய்த்தொற்று பரவல் விகிதம்) உள்ளிட்டவை அனைத்தும் ஏற்கெனவே தோன்றியிருந்தாலும், தற்போதுதான் அதிக அளவில்
புழக்கத்துக்கு வந்துள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு தெரிவிக்கிறது.
வழக்கமாக வேதிப்பொருள்களின் பெயர்கள் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இணைக்கப்படுவதில்லை. அந்த வேதிப்பொருள்களானது மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும்போது மட்டுமே அவற்றின் பெயர் அகராதியில் இணைக்கப்படும்.
கரோனா பரவல் காலகட்டத்தில் "ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' உள்ளிட்ட சில வேதிப்பொருள்களின் பெயர்கள் மக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சிறந்த பலனளிப்பதாக நம்பப்படுகிறது.
உலக அளவில் அந்த மருந்தை அதிக அளவில் தயாரிக்கும் நாடு என்ற பெருமையைக் கொண்ட இந்தியா, அந்த மருந்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. "ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' என்ற சொல் 1951-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் தான் அச்சொல் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இணைக்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதில் "டெக்ஸாமெதசோன்' என்ற மருந்து முக்கிய பங்காற்றியது. அந்தச் சொல்லானது 1958-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. அச்சொல் 1989-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் இரண்டாவது பதிப்பில் இணைக்கப்பட்டது.
டெக்ஸாமெதசோன் மருந்து கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது என்று கடந்த ஜூலை மாதத்தில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், அகராதியில் ஏற்கெனவே இணைக்கப்பட்ட சொற்களான "கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன்', "கம்யூனிட்டி ஸ்ப்ரட்' ஆகியவற்றின் பயன்பாடு குறித்த விளக்கங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நோய்த்தொற்று பரவலில் இருந்து தப்புவதற்கு மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதைக் குறிக்கும் "செல்ஃப்-ஐசோலேட்', "ஷெல்டர் இன் பிளேஸ்' ஆகிய சொற்கள் ஏற்கெனவே ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இணைக்கப்பட்டிருந்தன. அச்சொற்களின் பயன்பாட்டு விளக்கங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே வேளையில் சில சொற்களுக்கான பொருளும் மாறியுள்ளது. "ஷெல்டர் இன் பிளேஸ்' என்ற சொல்லானது, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போதும், போரின்போதும் பாதுகாப்பான இடத்தில் தங்குவதைக் குறிக்கும். ஆனால், தற்போது அச்சொல்லானது மக்கள் தங்களை நீண்ட நாள்களாக தனிமைப்படுத்திக் கொள்வதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
"செல்ஃப்-ஐசோலேட்' என்ற சொல் பிரிட்டனில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதைப் போல், அதே பொருளைக் கொண்ட "செல்ஃப்-குவாரண்டைன்' என்ற சொல்லானது அமெரிக்காவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இது குறித்து ஆக்ஸ்ஃபோர்டு அகராதி நிர்வாகம் விரிவாக ஆராயவில்லை.
மேலும், முகக் கவசத்தை அணிவதால் ஏற்படும் தழும்பைக் குறிக்கும் "மாஸ்க்னே', காணொலி வாயிலாக உரையாடும்போது மூன்றாவது நபரின் தலையீட்டைக் குறிக்கும் "ஜூம்பாம்பிங்', கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழி முறைகளைக் கடைப்பிடிக்காத நபர்களைக் குறிக்கும் "கொவிடியட்', அத்தியாவசியப் பொருள்களை அதிக அளவில் வாங்கிக் குவிப்பதைக் குறிக்கும் "ஹாம்ஸ்டர்காஃப்' ஆகிய சொற்களையும் மக்கள் புதிதாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அச்சொற்கள் அனைத்தும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இணைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...