

நம்மில் பலருக்குள்ளும் நிலவும் ஓர் இக்கட்டான நிலைமையை மீனா சோமசுந்தரம் எழுதிய ஒரு புதுக்கவிதை துல்லியமாகக் கோடிட்டுக் காட்டுகிறது:
கணக்குக் கேட்டால்
ஒரு கிறுக்கல்
வழக்குப் போட்டால்
ஒரு வழுக்கல்
நேரே வாதாடினால்
ஒரு சறுக்கல்
எப்படிச் செய்தாலும்
ஒரு விலகல்
முடிவு என்று வந்தால்
ஓர் ஓட்டம்
தீர்வு என்பது இல்லை
தீர்க்கத் தெரியாததால்.
வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கத் தெரிவது ஒரு மிக முக்கியமான திறன். உறவுகளைச் சாதுரியமாகக் கையாள்வதும், அவற்றிலெழும் சிக்கல்களை சாமர்த்தியமாகக் கட்டவிழ்ப்பதும், நாம் எதிர்கொள்ளும் தகராறுகளைத் திறம்பட மேலாண்மை செய்வதும் தலையாய வாழ்வியல் வித்தைகள்.
வாழ்வியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பயன்படும் பல்வேறு அடிப்படைத் திறன்களைத்தான் கடந்த நான்கு மாதங்களாக கோலப் புள்ளிகளாக ஆங்காங்கே வைத்திருக்கிறோம். இப்போது அந்தப் புள்ளிகளை கவனமாக இணைத்தால், நாம் போட்டிருக்கும் அழகிய கோலம் கண்ணுக்குப் புலப்படும்.
ஆங்கிலத்தில் வழங்கும் "அமைதிப் பிரார்த்தனை' ஓர் அற்புதமான கருத்தியலை முன்வைக்கிறது:
"இயற்கையே, என்னால் மாற்றவியலாத விடயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், என்னால் மாற்றவியலும் விடயங்களை மாற்றியமைக்கும் தைரியத்தையும், இவ்விரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியும் ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக!'
வாழ்க்கையில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சில மாயங்களை ஆய்ந்தறியும் அறிவோ, ஆற்றலோ நமக்கு இல்லை. இந்த சூட்சுமத்தை கவிஞர் கண்ணதாசன் அழகாக சுருக்கிச் சொல்கிறார்:
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்.
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்.
மனித வாழ்வின் இந்த மாபெரும் சிக்கலை, “காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்” என்று கவிஞர் தீர்த்துவைக்கிறார்.
"காலம் வகுக்கும் கணக்கு' ஒருபுறம் இருக்கட்டும். நம் கட்டுக்குள்ளிருக்கும் சிக்கல்களை, பிரச்னைகளை நம்மால் கட்டாயமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். புல், பூண்டுகளும், புதர்களும் மண்டிக் கிடக்கும் நம் வாழ்க்கைப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, இடையூறுகளாய் இருக்கும் இவற்றை நீக்கிவிட்டுப் பயணப்படப் பழகிக் கொள்வோம்.
வாழ்வின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க பசிபிக் பெருங்கடல் தீவுகளில் வசிக்கும் ஹவாய் பூர்வகுடி மக்கள் "ஹோபோனோபோனோ' எனும் ஓர் அற்புதமான முறையைக் கையாள்கின்றனர். இந்த ஹவாய் மொழி வார்த்தையின் அர்த்தம் "சீரமைத்தல்' என்பதாகும். குடும்ப உறவுகளை, குடும்பத்துக்கும் இயற்கைக்குமான உறவைச் சீரமைக்க ஒரு குறிப்பிட்ட முறையை இந்த மக்கள் கடைப்பிடிக்கின்றனர். குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அல்லது மதிப்பிற்குரிய விருந்தினர் ஒருவர் தலைமையில் இந்த நுண்மமான, நீண்ட சிக்கல் தீர்க்கும் நிகழ்வு நடக்கிறது.
முதலில் நிகழ்வின் தலைவர் கடவுளை, குடும்ப தெய்வங்களை வணங்கி, தங்களின் சிக்கல் தீர்க்கும் முயற்சியை வாழ்த்துமாறு பிரார்த்திக்கிறார். பங்கேற்கும் அனைவரும் உண்மையாகவும், நேர்மையாகவும் கலந்து கொள்ள வழிவகுக்கிறார். அனைவருக்குமான பொதுப் பிரச்னைகளும், அங்கிருப்போரின் தனிப்பட்ட பிரச்னைகளும் கூடுகையின் முன்னால் கொட்டப்படுகின்றன.
இரண்டாவதாக, பொதுப் பிரச்னைகள் ஒவ்வோர் அங்கமாக விவாதிக்கப்படுகின்றன. அதன் பின்னர் தவறிழைத்தோருக்கும், தவறிழைக்கப்பட்டோருக்கும் இடையேயான குறிப்பிட்ட தகராறுகள் தலைவரின் மேலாண்மையோடு பேசப்படுகின்றன. அனைவரும் தத்தம் எண்ணங்களை, உணர்வுகளை முழுமையாகப் பகிர்ந்து கொள்கின்றனர். உணர்வுகள் மேலெழும்பி பதற்றநிலை எழுந்தால், தலைவர் உணர்வுகளைத் தணிவிக்கும்பொருட்டு முழு மவுன இடைவேளையை அறிவிப்பார்.
மூன்றாவதாக, தவறிழைத்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்குவர். இதனையேற்று பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு வழங்குவர். இப்படியாக கசப்புணர்வுகளும், எதிர்மறை உறவாடல்களும் ஒவ்வொன்றாக விலக்கிக் கொள்ளப்படும்.
இறுதியாக, நடந்தவற்றை எல்லாம் விளக்கிச் சொல்லி, அக்குடும்பத்தின் பலங்களை, அழுத்தமான உறவுகளைக் கோடிட்டுக்காட்டி, கூட்டுப் பிரார்த்தனையும், ஒருவருக்கொருவர் நன்றி சொல்கிற நிகழ்வும் நடக்கும். விவாதிக்கப்பட்ட விடயங்கள் முடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை மீண்டும் விவாதிக்கப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்படும். முறைப்படியான இந்த சிக்கல் தீர்க்கும் நிகழ்வை அன்றாட வாழ்வுக்கு மாற்றிக் கொள்ளும் விதமாக விருந்தும், கேளிக்கையும் நடைபெறும். ஹவாய் மக்களின் இந்த "ஹோபோனோபோனோ' முறையை நாமும் நம்முடைய குடும்பங்களில், சமூகத்தில் நடத்திப் பயனடையலாம்.
உங்கள் குடும்பத்தில், பணியிடத்தில், கோயிலில், ஊரில், சமூகத்தில் ஒரு பிரச்னையா? "அலட்டிக்கொள்ளாமல் அமைதியாகத் தூங்குங்கள்' என்கின்றனர் ஆய்வாளர்கள். நிலைகுலைந்து, நிம்மதியிழந்து, விழித்திருந்து வழிதேடுகிறவர்கள் பெரும்பாலும் தோற்றுப் போகிறார்கள். ஆனால் "கவலைகள் கிடக்கட்டும், மறந்துவிடு' என்று நிம்மதியாகத் தூங்கி எழுகிறவர்களின் ஆழ்மனது, சிக்கலின் அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து அருமையான ஒரு விடையைக் கண்டுபிடித்துச் சொல்கிறது என்கிறார்கள் அவர்கள்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்ப்புக்கான நுழைவுத் தேர்வுகளிலும், நேர்காணல்களிலும் சிக்கல் தீர்க்கும் திறன் பரிசோதிக்கப்படுகிறது. வார்த்தைகளால் விவரிக்கப்படும் சந்தர்ப்பங்களை நீங்கள் உள்வாங்கும் விதம், கணக்குப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பாங்கு போன்றவற்றைப் பரிசீலிக்கிறார்கள். உங்களின் விழிப்புணர்வு, வேகத்தன்மை, புத்திசாலித்தனம் போன்றவை இங்கே உற்று நோக்கப்படுகின்றன.
சரி, இந்த சிக்கல் தீர்க்கும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? மனப்பழக்கத்தால்தான். மனதைப் பழக்கிக் கொள்வதன் மூலம்தான்.
விடுகதைகள், புதிர்கள், திகைப்புக் கணக்குகள் போன்றவற்றுக்கு விடைகாணுங்கள்.
அதேபோல, பத்திரிகைகளில் வெளிவரும் சுடோக்கு, குறுக்கெழுத்து, "ஆறு வித்தியாசங்கள்' என்பன போன்ற பயிற்சிகளைச் செய்யுங்கள். இவையெல்லாம் உங்கள் மனதைத் தயார் நிலையில் வைத்திருக்க மிகவும்
உதவும்.
சிக்கல் தீர்க்கும் விளையாட்டுகளை ஒரு குழுவாகச் சேர்ந்து விளையாடலாம். சிக்கல்களை அணுகும் பல்வேறு பார்வைகளும், அணுகுமுறைகளும் உங்களுக்குப் புலப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு மலையுச்சியில் மானொன்று நிற்கிறது. அதன் முன்னாலும், பின்னாலும் ஆழமான பள்ளத்தாக்குகள். திடீரென தனது வலது
பக்கம் ஒரு புலி நடந்து வருவதையும், இடது பக்கம் ஒரு வேடன் தன்மீது அம்பெய்யத் தயாராவதையும் மான் பார்க்கிறது. அந்த மான் எப்படித் தப்பித்துக் கொள்ள முடியும்?
இம்மாதிரியான சிக்கல்களுக்கு சரியான விடை, தவறான பதில் என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை எப்படி உள்வாங்குகிறீர்கள், எங்ஙனம் இந்தச் சிக்கலைத் தீர்க்கிறீர்கள் என்றறிவதுதான் நோக்கம். வேடன் அம்பெய்ததும் மான் "படக்'கென்று கால்களைப் பரப்பி தரையில் படுத்துவிட்டால், புலி சாகும், மான் தப்பி ஓடிவிடலாம்.
நேர்முகத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட கீழ்க்காணும் புதிரை விடுவிக்க முயல்வோம்:
கொடுங்காற்றும், பேய் மழையும் பெய்து கொண்டிருக்கும் ஓர் இரவில், இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடிகிற உங்கள் மகிழுந்தை நீங்கள் ஓட்டிச் செல்கிறீர்கள். ஒரு பேருந்து நிறுத்தத்தைக் கடந்துசெல்லும்போது, மூன்று பேர் அங்கே பேருந்துக்காகக் காத்திருப்பதைப் பார்க்கிறீர்கள்:
* எந்நேரமும் இறந்து போகலாம் என்கிற நிலையில் ஒரு வயதானப் பெண்மணி,
* முன்பொருமுறை உங்கள் உயிரைக் காப்பாற்றிய ஒரு பழைய நண்பன்,
* வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று நீங்கள் கனவுகாண்பது போன்ற ஓர் அழகான இளம்பெண்.
ஒரே ஒருவருக்கு மட்டுமே காரில் இடம் கொடுக்க முடியும் என்கிற நிலையில், இவர்களில் யாரை நீங்கள் அழைத்துச் செல்வீர்கள்?
அறிவார்ந்த ஒருவர் இந்தச் சிக்கலை இப்படித் தீர்த்தார்: “
"எனது கார் சாவியை எனது பழைய நண்பனிடம் கொடுத்து, அந்த வயதானப் பெண்மணியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரது வீட்டுக்குப் போகச் சொல்வேன். நான் அந்த இளம்பெண்ணுடன் பேருந்துக்காகக் காத்திருந்து, அவரின் நட்பைப் பெற்றுக்கொள்வேன்.'
சிக்கல் தீர்க்கும் திறனின் அடிப்படை இதுதான்: யோசி, வேகமாக யோசி, மாற்றி யோசி!
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.