தேவை... வைராலஜிஸ்டுகள்!
கரோனா... இந்த ஒற்றைச்சொல் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை எந்த நாட்டு மக்களையும் விட்டுவைக்காமல் தாக்குகிறது கோவிட்-19 என்னும் கொடிய தீநுண்மி.


கரோனா... இந்த ஒற்றைச்சொல் உலகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை எந்த நாட்டு மக்களையும் விட்டுவைக்காமல் தாக்குகிறது கோவிட்-19 என்னும் கொடிய தீநுண்மி.
நாளுக்கு நாள் மாறி வரும் இந்த தீநுண்மியின் தன்மைகள் குறித்து வைராலஜிஸ்ட் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். எபோலா, போலியோ,ஹெச்ஐவி, சார்ஸ், சிகா போன்ற எண்ணற்ற தீநுண்மிகள் இந்த உலகில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
அவை சிறு பூச்சியின் வழியாகக் கூட மனிதர்களுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளன.இத்தகைய தீநுண்மிகளின் தாக்கம் திறன், தாக்கும் தன்மை, ஏற்படுத்தும் பாதிப்புகள், குணப்படுத்தும் வழிமுறைகள், தடுப்பூசி கண்டறிதல் என்பன போன்ற பணிகளுக்கு வைராலஜிஸ்டுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீநுண்மிகளுக்கு எதிராக தடுப்பூசி கண்டறிதல், அதை முதல் கட்டமாக விலங்குகளுக்குப் பரிசோதனை செய்தல், அதைத் தொடர்ந்து கிளினிகல் ஆய்வகங்களில் பரிசோதனை செய்தல், பரிசோதனை அளவில் மனிதர்களுக்குப் பயன்படுத்தி ஆய்வு செய்தல் என்பன போன்ற எண்ணற்ற பணிகளுக்கு வைராலஜிஸ்டின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
எனவே வைராலஜிஸ்ட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வரும் காலங்களிலும் இது மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே அது தொடர்பான கல்வியைக் கற்பது தற்போதைய சூழலில் மிக பலன் தரும் விஷயமாக மாறி வருகிறது.
நோய் கண்டுபிடிப்பாளர் என்று அறியப்படும் வைராலாஜிஸ்டுகள், தங்களின் பெரும்பகுதி நேரத்தை ஆய்வகங்களில் செலவிட்டு வருகின்றனர். நானோ அளவைவிட பல மடங்கு சிறிதாக உள்ள தீநுண்மிகள் குறித்து நுண்ணோக்கி மூலம் இவர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருவது அந்த தீநுண்மிகளை ஒழிப்பதற்குத் தேவையான தடுப்பு வழிகளைக் கண்டறிவதற்காகத்தான்.
வைராலஜிஸ்டுகளைப் பொருத்தவரை ஒன்று ஆய்வு கூட நிபுணர்களாக இருப்பார்கள்; அல்லது அது தொடர்பான விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பணியில் இருப்பார்கள். இவர்களில் பலர் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்கள் ஆகவும், சிலர் மருந்துத் தயாரிப்புத் துறையிலும் இருக்கக்கூடும்.
வைராலஜிஸ்ட் ஆக விரும்புகிறீர்களா?:
உயிரியலின் ஒரு துணை பிரிவாகவே வைராலஜி இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே பத்தாம் வகுப்பிலிருந்தே உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களை நிச்சயம் படித்திருப்பது அவசியம்.
அதன்பின் இளம் அறிவியல் பாடங்களைத் தெரிவு செய்யும்பொழுது மைக்ரோ பயாலஜி, பயோ மெடிக்கல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து படிப்பது அவசியம். இந்த படிப்புகளைப் படித்தவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளைக் கூட படிக்க இயலும்.
அதே சமயம் கண்டிப்பாக வைராலஜிஸ்ட் ஆகத்தான் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால் முதுநிலையில் மைக்ரோ பயாலஜி, மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, இம்யுனாலஜி, வைராலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை படித்தாக வேண்டும். இந்த முதுநிலைப் படிப்புகளில் ஆய்வகம் சார்ந்த செயல்முறைகள், பரிசோதனை வகுப்புகள், கோர்ஸ் ஒர்க் போன்றவை இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய முதுநிலைப் படிப்புகளைப் படித்தவர்கள் பல துறைகளில், குறிப்பாக மேலாண்மை, விற்பனை, ஆய்வுத்துறை,சேவைத் துறைகள் மற்றும் அப்ளைடு ரிசர்ச் தொடர்பான வேலைவாய்ப்புகளைப் பெறமுடியும்.
இதற்கும் மேலாக மைக்ரோ பயாலஜி படிப்பில் ஒரு பிரிவான தொற்றுநோய் தொடர்பான படிப்புகளில் டாக்டரேட் எனப்படும் முனைவர் பட்டம் பெற்றால் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் இது தொடர்பான ஆராய்ச்சி நிலையங்களில் நிர்வாகியாகக் கூட மிளிர முடியும்.
இத்தகைய துறைகளுக்கு செல்ல விரும்புபவர்கள் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் . குறிப்பாக மிகத்துல்லியமாக எதையும் செய்வது அல்லது கணிப்பது; ஒரு விஷயத்தை மிகவும் திடமாக பகுத்தாய்வு செய்து முடிவுகளை அறிந்து கொள்வது; ஒரு பொருள் குறித்து உற்று நோக்கி அதற்கான விளக்கத்தைக் கவனமாக அளிப்பது ஆகிய திறன்களைப் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் லாஜிக்கல் திறன் பெற்றவராகவும், விவரங்களை மற்றவர்களுக்கு விளக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் திறன் உடையவராகவும் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி தீநுண்மி தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்கு மிகுந்த மனதைரியம் அவசியம்.
சில கல்வி நிறுவனங்கள்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி - புனே, ஸ்ரீ வெங்கடேஸ்வரா யுனிவர்சிட்டி - திருப்பதி, சாவித்திரிபாய் புலே புணே யுனிவர்சிட்டி, மணிபால் சென்டர் பார் வைராலஜிஸ் ரிசர்ச் - மணிப்பால் யுனிவர்சிட்டி கர்நாடகா, அமிதி இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி அண்ட் இம்யுனாலஜி நொய்டாஆகிய சில கல்வி நிறுவனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஊதிய விகிதம்: புதிதாக முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டு ஆய்வு நிறுவனங்களில் பணியில் சேருபவர்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. முனைவர் பட்டம் முடித்துவிட்டு பணியில் சேருபவர்களுக்கு இதைவிட பல மடங்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு தனியார் ஆய்வு நிறுவனங்கள் ஊதியத்தை அள்ளிக் கொடுத்து வருகின்றன.
பணியிட வாய்ப்புகள்: உணவு தொடர்பான தொழிற்சாலைகள், சுகாதாரம் தொடர்பான துறைகள், வேளாண் தொடர்பான துறைகள், சுற்றுச்சூழல், நுண் உயிரி தொழில்நுட்ப துறைகள், மருந்த தயாரிப்பு போன்ற துறைகளில் பணி வாய்ப்பு பெற முடியும்.
மேலும் வைராலஜி தொடர்பான நிறுவனங்கள், தண்ணீர் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் தொழிற்கூடங்கள், மிகப்பெரும் மருத்துவமனைகள் போன்றவற்றிலும் வேலை வாய்ப்பைப் பெற முடியும். அரசுத்துறைகளில் எங்கெல்லாம் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவைப்படுகிறார்களோ அங்கெல்லாம் பணி பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...