உள்ளத்தனையது  உயர்வு!

இன்றைய அவசர கால ஓட்டத்தில் மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.  நம்மை நாமேதான் ஊக்கப்படுத்திக் கொண்டு  முன்னேற முயற்சிக்க வேண்டும். 
உள்ளத்தனையது  உயர்வு!

இன்றைய அவசர கால ஓட்டத்தில் மற்றவர்கள் நம்மை ஊக்கப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நம்மை நாமேதான் ஊக்கப்படுத்திக் கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும்.

நம்மை நாமே ஊக்கப்படுத்தி கொள்வதற்கும், பெற்ற ஊக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் சிலவழிகளில் தொடர்ந்து நாம் பயணிக்க வேண்டும். அந்த வழிகள் என்னவென்று பார்ப்போம்.

நம்மை நாமே பாராட்டுதல் நாம் செய்யும் அனைத்து விஷயங்களும் அல்லது வேலைகளும் அல்லது புராஜெக்ட்களும் விரும்பியபடியே இருக்குமென்று கருத முடியாது. சில நம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், நாம் விரும்பக் கூடியதாகவும் இருக்கும். பல விஷயங்கள் நமக்கு ஆர்வத்தைத் தராதவையாகக் கூட இருக்கலாம். இத்தகைய சூழலில் குறிப்பிட்ட இலக்கை நாம் அடைந்தால் கிடைக்கக் கூடிய நன்மைகளை நினைத்து நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் இது முடியும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டால், நம்மை அறியாமலேயே நமக்கு அந்தச் செயல்பாடு மீது உற்சாகம் வந்துவிடும் . அது வெற்றியைத் தந்து விடும்.

கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள்

தற்போது கரோனா காலத்தில் பெரும்பாலோனோர் வீடுகளில் இருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அலுவலகத்தில் இருந்து பணியாற்றும்போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே பணியாற்றியவர்கள் தற்போது நேரம், காலம் பார்க்காமல் பணியாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

இதனால் அவர்களுக்கு மனச் சோர்வு ஏற்பட்டு பணி

களில் தொய்வு நிலையும் உருவாகி வருகிறது. இதை தவிர்க்க, சோர்ந்த மனதை உற்சாகப்படுத்த, வேறு ஏதேனும் மனதுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட வேண்டும்.

உதாரணமாக புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம். இது மனதிற்கும், மூளைக்கும் உற்சாகத்தை அளித்து அந்தச் செயலை சிறப்பாக செய்ய உதவியாக இருக்கும். சினிமாவில் முழு நேர கதைகளுக்கு இடையிடையே பாடல்களும், சிரிப்பு காட்சிகளும் ,சண்டைக் காட்சிகளும் இடம் பெற்று உற்சாகத்தை அதிகரிப்பது போல் பணிகளுக்கிடையே சிறிது நேர ஓய்வு எடுத்து விட்டு, அதைத் தொடர்ந்து வேறு செயல்களில் பொழுதைக் கழித்து விட்டு மீண்டும் பணியைத் தொடங்கினால் நாம் மேற்கொண்ட புராஜெக்ட் வெற்றிகரமாக முடிவடையும்.

கடந்த கால அனுபவங்களைத் திரும்பிப் பார்த்தல்

மிகப்பெரிய அலுவலகத்தில், மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் கூட, நமது கடந்த கால வெற்றிகளையும் ,இடையே ஏற்பட்ட தோல்விகளையும் கண்டிப்பாக திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம். நாம் இவ்வளவு உயரிய இடத்தில் இருப்பதற்கு கடந்த காலத்தில் நாம் செய்த ஒவ்வொரு முயற்சிகளும் தான் பலன் தந்தன என்பதை நினைவு கூர்வதற்கு இது வாய்ப்பாக அமையும் . இதன்மூலம் இனியும் அத்தகைய சிறு, சிறு முயற்சிகளை உற்சாகத்துடன் எடுப்பதற்கு மனம் நம்மை ஊக்கப்படுத்தும். அதுபோல் கடந்தகால தோல்விகளையும் நினைவுகூர்ந்து அவை திரும்ப நிகழாமல் இருப்பதற்கு எத்தகைய ஊக்கம் அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதும் அவசியம்.

உடற்பயிற்சி

பணிகளுக்கு இடையே உடற்பயிற்சி செய்வது மூளைக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கக்கூடியது .சிறு உடற்பயிற்சி தானே என்று நினைத்துவிடக்கூடாது. அந்த சிறிய அளவிலான உடற்பயிற்சி கூட மூளைத் திறனை வெகுவாக அதிகரித்து உற்சாகமாக நம்மை செயல்படத் தூண்டும்.

வாசித்தல்

புத்தக வாசிப்பு என்பது மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கக்கூடிய விஷயம். நல்ல புத்தகங்களை ஒவ்வொரு நாளும் வாசிப்பது மிகப்பெரிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும். சோர்ந்து கிடக்கும் நம் மனதை உற்சாகப்படுத்தும் நேர்மறை கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நமக்கு உற்சாகம் பிறக்கும். அது நம்முடைய செயல்பாட்டை அதிகரிப்பதற்கு ஊன்றுகோலாக இருக்கும்.

கலந்துரையாடுங்கள்

கரோனா நோய்த்தொற்று காரணமாக வீடுகளிலிருந்து பணி செய்யும் நிலை இன்றளவும் நீடித்து வருகிறது . இதனால் பெரும்பாலானோர் வெளி உலக தொடர்பின்றி மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் . இச்சூழலால் செய்யும் வேலையில் உற்சாகத்தையும் அவர்கள் இழந்து வருகின்றனர். இத்தகையவர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்களுடன் இணையம் வழியாக சிறிது நேரம் கலந்துரையாடினால் அது அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இதன் மூலம் அவர்கள் ஊக்கத்துடன் பணி செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நம்மால் முடியும் என்ற சிந்தனை இருந்தாலே ஊக்கமும் ,உற்சாகமும் பெருக்கெடுத்து வரும். அந்த ஊக்கத்தின் விளைவால் கிடைத்த வெற்றியை நினைத்து நம்மை நாமே பாராட்டிக் கொண்டால் அடுத்த வெற்றியை நோக்கி நமது மனம் பயணிக்கத் தொடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com