ஜப்பானில் வேலை!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், வயதானவர்களின் அதிக மக்கள்தொகை, பிறப்பு விகிதம் குறைவு போன்றவற்றால், பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது.
ஜப்பானில் வேலை!

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், வயதானவர்களின் அதிக மக்கள்தொகை, பிறப்பு விகிதம் குறைவு போன்றவற்றால், பல்வேறு துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் திட்டத்தை அது வெளியிட்டது.
ஜப்பான் தற்போது ரூ. 5.6 லட்சம் கோடி (80 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள வணிகத்தை கொண்டுள்ளது. இது அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 7 லட்சம் கோடியை (100 பில்லியன் டாலர்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், அங்கு தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் தொடர்பான தொழில்களில் 84% இருமொழி திறன் கொண்ட திறமையான தொழில் வல்லுநர்கள் இல்லை. தற்போதைய நிலையில், ஜப்பானில் சுமார் 1.7 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கான பற்றாக்குறை உள்ளது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 2 லட்சம் திறமையான பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், இது 2030-க்குள் 4 மடங்காக (8 லட்சம்) உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
இதையொட்டி, சேலத்தில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரி தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஜப்பானில் பணி வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறது. சோனா கல்விக் குழுமத்தின் திறன்சார் பிரிவான சோனா யுக்தி, ஜப்பானிய கற்றல் மையத்தை கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது.
இந்த மையத்தில் ஜப்பானிய ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதையொட்டி, இந்த மையம் ஜப்பானிய அரசாங்கத்தின் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்திற்கு மாணவர்களை அனுப்பும் அமைப்பாக, இந்திய தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்ற குறைந்தபட்சம் ஒரு லட்சம் திறமையான தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

சோனா கல்லூரியின் ஜப்பானிய கற்றல் மையத்தால், தேசிய அளவில் இந்த மொழியை கற்பிக்கும் முதல் இரண்டாம்நிலை நகரமாக சேலம் உருவாகியிருக்கிறது. JLPT தேர்வை (Japanese Language Proficiency Test) நடத்த ஜப்பான் அறக்கட்டளை அங்கீகரித்த இந்தியாவின் 8 ஆவது மையமாக இந்த மையம் உள்ளது. மற்ற மையங்கள் தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளன.
பல ஆண்டுகளாக சுமார் 800 மாணவர்களை ஜப்பானிய மொழித் திறனில் மேம்படுத்தி வருகிறது சோனா ஜப்பானிய கற்றல் மையம். இதனடிப்படையில் அவர்கள் விரைவில் ஜப்பானுக்கு சென்று பணியாற்ற உள்ளனர்". 
இதுகுறித்து சோனா தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவரும், Vee Technologies தலைமை நிர்வாக அதிகாரியுமான சொக்கோ வள்ளியப்பா கூறுகையில், "ஜப்பானில் நானோ தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பணியாற்றிய பேராசிரியர் சரவணன் மூலம் இந்த வாய்ப்பை நாங்கள் கண்டடைந்தோம். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது எங்கள் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஜப்பான் மொழியும், தமிழும் இலக்கணரீதியாக மிகவும் தொடர்பு உள்ளவை. எனவே, மாணவர்கள் அதை 
கற்பது எளிது. இந்திய மாணவர்களின் தொழில்நுட்ப அறிவில் ஜப்பானியர்கள் மகிழ்ச்சியடையும் நிலையில், நாம் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம். 2025 -இல் 8.45 லட்சம் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வரவேற்கும் நோக்கத்தை ஜப்பான் வெளியிட்டுள்ளது'' என்கிறார்.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஃபோட்டானிக்ஸ் மற்றும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத் தலைவரும், ஜப்பானிய மொழி பாடநெறிக்கான கன்வீனருமான எஸ். சரவணன், ஜப்பானில் 12 ஆண்டுகள் படித்து, பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஜப்பானிய மொழியை சரளமாக அறிந்தவர். ஜப்பான் மொழியின் அவசியம் குறித்து அவர் கூறியது:
"மொழி இடைவெளி காரணமாக வெளிநாட்டினருக்கும், ஜப்பானியர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கிறது. தொழிலாளர் இடைவெளியை நிரப்ப வியத்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை ஜப்பான் எதிர்பார்த்து வருகிறது. ஆனால், அண்மைய காலங்களில் ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது, ஜப்பான் தகுதிவாய்ந்த தொழிலாளர்களுக்கான சாத்தியமான மூல சந்தையாக நம்மைப் பார்க்கிறது.

இந்த நிலையில், தற்போது ஜப்பானில் தரையிறங்குவதற்கு முன்பே எங்கள் மாணவர்கள் அங்குள்ள புவியியல், மொழி, பழக்கவழக்கங்களை நன்கு அறிந்திருப்பார்கள். ஜப்பான் மொழியைக் கற்பதற்கான கோரிக்கை பெரும்பாலும் பொறியியல் மாணவர்களிடமிருந்தே வருகிறது. எங்கள் கல்லூரியில் B.E./B.Tech-இன் ஒரு பகுதியாக ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுகிறது.
ஜப்பானிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபாட்டிக்ஸ் மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் திறமையான பட்டதாரிகளைக் கோருகின்றன. இந்த பாடத்திட்டங்களில் சுமார் 800 மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜப்பான் அல்லது இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களில் 100 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளன' என்றார். 
இப்போது, 700 மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்க பதிவுசெய்துள்ளனர். 
ஜப்பானிய மொழியில் திறமைமிக்க தகுதிவாய்ந்த புதிய பொறியாளர் ஆண்டுக்கு ரூ. 18-20 லட்சம் வரை ஊதியம் எதிர்பார்க்கலாம். வீட்டு வாடகையின் ஒருபகுதியை நிறுவனங்கள் செலுத்துவதால், அவர்கள் தங்கள் வருமானத்தில் குறைந்தது 40-50 சதவீதத்தைச் சேமிக்க முடியும்.

ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜப்பான் அறக்கட்டளை ஜப்பானிய மொழித் தேர்வை நடத்துகிறது. மேலும் விவரங்களை http://www.sonatech.ac.in/japanese-course/index.php, https://www.sonayukti.com என்ற இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம்.
இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com