தேவை... புதிய ஆசிரியர்!

அறிவியல், தொழில்நுட்பம், தொழில், வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இந்தியா வல்லமை கொண்டதாக மாற வேண்டும்.
தேவை... புதிய ஆசிரியர்!

அறிவியல், தொழில்நுட்பம், தொழில், வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி, கல்வி உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இந்தியா வல்லமை கொண்டதாக மாற வேண்டும். இந்த கனவுக்கு புதிய வடிவத்தைக் கொடுத்திருக்கிறது கரோனா தீநுண்மி தொற்றுநோய். கரோனா என்றதும் அலறியடித்துக் கொண்டு மக்கள் ஓடுகிறார்கள். இந்த தொற்றால் தீமைகள் பல இருந்தாலும், நன்மைகளும் இல்லாமல் இல்லை. மரணபீதியில் ஓடுவதாக நினைத்துக்கொண்டு ஓடினாலும், புதிய பார்வையோடு மாற்றங்களை நோக்கி ஓடுகிறோம் என்பது தான் உண்மை. ஆம். கரோனா தீநுண்மி தொற்றுநோயால் தலைகீழ் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அப்படி தலைகீழ் மாற்றங்களுக்கு உள்ளான மிகப்பெரிய துறை, கல்வித்துறை.

நான்கு சுவர்களுக்குள், கரும்பலகையில் எழுதி கற்பித்த வகுப்பறை கற்பித்தல் நடைமுறை, துரிதகதியில், செல்லிடப்பேசி, டேப்லெட், மெய்நிகர் வகுப்பறைகளாக களம் மாறிவிட்டன. கடந்த 4 மாதங்களில் கற்கும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், ஆசிரியர்களின் பங்களிப்புத்தன்மையும் மாறிவிட்டன. தத்தமது செல்லிடப்பேசி, டேப்லெட்கள், கணினிகளைச் சொடுக்குவதன் வாயிலாக கற்றுக் கொள்ள முடியும் என்ற புதிய சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டிருப்பதால், வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்களின் பாத்திரங்களையும் மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது என்று உலகப் பொருளாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி, மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கான வசதிகளைச் செய்து தருபவர்களாக ஆசிரியர்கள் மாற வேண்டியதிருக்கிறது.

புதுமை ஆசிரியர்கள்: இணையவழி அல்லது மெய்நிகர் கற்பித்தல் என்பது, வழக்கமான நேருக்குநேர் முகம்பார்த்து கற்பிக்கும் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இணையவழி வகுப்பறைகளில், மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தனது கற்பித்தலை அமைத்துக் கொள்ள வேண்டியது ஆசிரியர்களுக்கு அவசியமாகும். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லெர்னிங் டூல்ஸ் முறைகளைக் கையாண்டு, மாணவர்களின் அறிவு ஆதாயம் மற்றும் செயலாக்கம் உள்ளிட்ட கூறுகளை மதிப்பிட்டு, அதற்கேற்ப கற்பித்தல் முறைகளை ஆற்றல் வாய்ந்ததாகக் கட்டமைப்பது தான் ஆசிரியர்களின் இன்றைய தேவையாகும். பாடம் சார்ந்த ஆழமான அறிவுடன், உயர்ந்த தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்திறன் உள்ளவர்களாக ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கல்வித்துறையில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கு: முழுமையான பாட அறிவு, கற்பித்தல் அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகிய மூன்றும் மிகமிக முக்கியமாகும். புதியன கற்றலுக்கான கூர்மையான ஆர்வம், தொழில்நுட்ப தகவல் அறிவு, நேர்மறையான எண்ணவோட்டம், படைப்பாற்றல், புதிய கருவிகள் மற்றும் மென்பொருள்கள் மீதான காதல், மேலாண்மைமுறைகளைக் கற்கும் அறிவு, செயலாற்றல், பாடங்களைக் கட்டமைக்கும் திறன் போன்ற குண இயல்புகள் ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படைகள் ஆகும்.

தரவுப் பகுப்பாய்விலும் ஆசிரியர்களுக்கு போதுமான அறிவு இருப்பது கட்டாயமாகும். மாணவர்களின் கற்றல் மற்றும் செயல்திறனைப் பகுப்பாய்ந்து, அதற்கேற்றவகையில் தீர்வுகளை வழங்குவது எதிர்கால ஆசிரியர்களுக்கான புதிய அணுகுமுறையாகும். திறன்களை வளர்த்துக் கொள்வது, இணையகற்றல் மற்றும் கற்பித்தல் கருவிகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கும், மெய்நிகர்வகுப்பறைகளை கட்டமைப்பதற்கும், இணையம்சார் பாடங்களைத் திட்டமிடுவதற்கும் பேருதவியாக இருக்கும். புதிய மாற்றங்களுக்கு ஆசிரியர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு: இணையவழி கற்பித்தல் பெருகிவரும் நிலையில், கல்வித்துறையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. இணையவழி அல்லது மெய்நிகர் வகுப்பறைகளில் கற்பித்தல் வேகமாகப் பரவிவருவதால், இணையவழிப் பாடங்களைக் கட்டமைப்போர்(ஆன்லைன் கன்டென்ட் டெவலப்பர்), மதிப்பீட்டுமுறையை வகுப்போர் (அசஸ்மென்ட் டெவலப்பர்), கற்றலை அளவிடுதல் மற்றும் தரவுப்பகுப்பாய்வு(லேர்னிங் மெஷரபிலிட்டி அண்ட் டேட்டா அனாலிசிஸ்), தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து கற்றுத்தருவோர், கல்வி நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் சேவை வழங்குவோர் போன்ற பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இணையவழி கற்பித்தல் கலையை ஆசிரியர்களுக்கு கற்றுத் தருவோருக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான கல்விசார் மென்பொருள் தயாரிப்பு, வடிவமைப்பில் ஈடுபடுவோருக்கும் வளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. கல்விசார் விளையாட்டுகள், கற்பவருக்கு ஏற்றவகையில் சூழல் அமைக்கப்படும் மேம்பட்ட மெய்நிகர் கற்றல் (ஆக்மென்டெட் லேர்னிங்), செய்முறை கற்றலுக்குத் தேவையான கருவிகள் போன்றவற்றை வடிவமைப்போர், தயாரிப்போருக்கு எண்ணில் அடங்காத வேலைவாய்ப்புகள் காணக் கிடைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com