அலுவலகம்... நடந்து கொள்வது எப்படி?

எந்த துறைசார்ந்த அலுவலகமாக இருந்தாலும், ஊழியர்களின் நடத்தைகளில் சில பொதுவான எதிர்பார்ப்புகள் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இருப்பது இயல்பானது.
அலுவலகம்... நடந்து கொள்வது எப்படி?

எந்த துறைசார்ந்த அலுவலகமாக இருந்தாலும், ஊழியர்களின் நடத்தைகளில் சில பொதுவான எதிர்பார்ப்புகள் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இருப்பது இயல்பானது. அடிமட்ட ஊழியர் முதல் மேல்மட்ட அதிகாரி வரையில் சீரான நடத்தைகள் காணப்படும்போது, நிறுவனங்கள் தழைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், ஊழியர்களின் நடவடிக்கைகள் ஒரு நிறுவனத்தை வளர்ச்சி சார்ந்த பாதையில் பயணிக்க வழிவகுக்கும்.

ஊழியர் தாம் செய்யும் வேலையில் அக்கறையோடு ஈடுபடுவதும், உண்மையான உழைப்பை வழங்குவதும் நிறுவனத்தின் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, நிறுவனம் உயர்நிலையை அடைவதற்கும் படிக்கல்லாக அமையும்.

ஏற்றுக்கொண்ட பணி அல்லது வேலையில் முன்னேறுவதற்கு சில ஒழுக்கநெறிகள் அல்லது நடத்தைவிதிகளை ஊழியர்கள் தவறாமல் கடைபிடிப்பது அவசியம்.

முன்னதாக வருவது சாலவும் நன்று:

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் பலரும் பொதுவாகக் கூறும் அறிவுரை: "மேலதிகாரி அல்லது முதலாளி அலுவலகம் வருவதற்கு முன்புநீங்கள் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிடுங்கள்; அவர் சென்ற பிறகு அலுவலகத்தில் இருந்து புறப்படுங்கள்' என்பதுதான். இது இக்காலத்துக்கும் பொருந்தும்.

அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும். உறவென நட்பை விரிவுசெய்:

"தான் உண்டு தன் வேலை உண்டு' என்று வேலையில் மனதை கூர்மையாக செலுத்தி, குறித்த நேரத்தில் வேலையைத் திறம்பட முடிப்பது பாராட்டத்தகுந்தது. அதே நேரத்தில் அலுவலகத்தின் மூத்தவர்கள், அனுபவசாலிகளை அவ்வப்போது சந்தித்து வேலைநுணுக்கங்களை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது நல்லது. அது வேலைத்திறனை மேம்படுத்த உதவும். சக ஊழியர்களுடன் நல்லமுறையில் பழகுவது அலுவலகச்சூழலை இனிமையாக்குவதோடு வேலை தொடர்பான அறிவைப் பெறவும் உதவியாக இருக்கும்.

உதவிக்குக் கைகொடுப்போம்:

தனது பணியை முடிப்பதற்காக சக ஊழியர் உதவி கேட்டால், உடனடியாக இணங்குவது நல்ல பண்பாகும். பிறருக்கு உதவுவது உங்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவும். பிறருக்கு நீங்கள் உதவினால் எதிர்காலத்தில் அவர் உங்களுக்கு உதவக் கூடும்.

தனி மின்னஞ்சல்:

வேலைநேரம் முடிந்தபிறகு அல்லது வார இறுதிநாட்களில் சக ஊழியர்களோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அலுவலக மின்னஞ்சலைப் பயன்படுத்தாமல், தனி மின்னஞ்சலை உருவாக்கி,சக ஊழியர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது நல்லது.

புதிய வேலையா? பதற்றம் அடையாதீர்கள்:

நீங்கள் இதுவரை செய்திராத வேலையைச் செய்யுமாறு உங்களது மேலதிகாரி அல்லது சக ஊழியர் உங்களிடம் கேட்டுக்கொள்ளும்போது, பதற்றமடைவது இயல்பானது. வேலையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள அது காரணமாகிவிடக்கூடாது. புதிய வேலை அல்லது பணியை ஏற்று செயல்படும்போது தான் உங்களுடைய திறன் மேம்படும். உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால், அந்த பணியை உங்களிடம் மேலதிகாரி ஒப்படைத்திருக்கலாம். அந்த நம்பிக்கை உங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும்.

இணக்கமாக இருங்கள்:

சில நேரங்களில் நிர்ணயிக்கப்படாத வேலைகளைச் செய்ய அலுவலக அதிகாரிகள் அல்லது முதலாளிகள் உத்தரவிடலாம்.

அலுவலக நேரம் கடந்தும் வேலை செய்யும்படி சில நேரங்களில் கூறலாம். விடுமுறை நாள்களிலும் வேலைசெய்ய அறிவுறுத்தப்படலாம். வேறொருவரின் வேலையை செய்யவும் கேட்டுக் கொள்ளலாம். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர், அவற்றை மறுக்காமல் ஏற்று செயல்படுத்துவது வேலையில் முன்னேற்றமடைய உதவும். ,

பணியிடங்களுக்குப் பொருத்தமான உடை:

வேலை செய்யும் இடத்துக்குப் பொருத்தமான ஆடைகளை அணிவது அவசியமாகும். பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பிறர் முகம்சுழிக்காத வகையிலும் ஆடைகளை அணிவது நல்லது.

வேலைக்கு மட்டும்தான் அலுவலகம்:

அலுவலகத்தில் இசை கேட்பது அல்லது காணொலிகளை காண்பது சரியல்ல.
இதனால் மேலதிகாரிகளின் கோபத்துக்கு மட்டுமல்ல, சக ஊழியர்களின் கோபத்திற்கும் உள்ளாக நேரிடும். அலுவலகத்தில் தனிப்பழக்கங்களை ஒதுக்கிவைப்பது நல்லபழக்கம்.

திறந்தமனநிலை தேவை:

புதியவேலையில் ஈடுபடும்போது, புதிய உறவுகளைக் கட்டமைக்கும் போது, வேலையில் உயர்படிநிலைகளில் முன்னேறும் போது எல்லா கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் திறந்தமனநிலையை வைத்துக்கொள்வது நல்லது. மாற்றங்களை ஏற்கதயாராக இருங்கள்.

முகமலர்ச்சி:

நேர்மறை சிந்தனைகளை கொண்டிருப்பதும், எப்போதும் முகமலர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதும் அவசியம். வேண்டும். அது அலுவலகப்பணிகளை திறம்படமுடிக்க உதவியாக இருக்கும். தோழமையான அணுகுமுறை வேலையைச் சுமுகமாக முடிக்க உதவும்.

தவறுகள் தவறல்ல:

வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல. அந்த தவறுகளை திருத்திக் கொள்வதும், அதேதவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதும் நல்லது. தவறுகள், புதியனவற்றைக் கற்க உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com