ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முந்தி இருப்பச் செயல் - 34: மீட்புநீதித் திறன் - 1

கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் வாழ்ந்திருந்த நரேந்திர சிங் (40), நஜ்மா (30) எனும் தம்பதியினர் ஓர் ஐந்து வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு

News image
Updated On :2 பிப்ரவரி 2021, 12:30 am

சுப. உதயகுமாரன்


இரண்டு நிகழ்வுகளோடு தொடங்குவோம்.

நிகழ்வு 1:

கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் வாழ்ந்திருந்த நரேந்திர சிங் (40), நஜ்மா (30) எனும் தம்பதியினர் ஓர் ஐந்து வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் சிறைக்குச் சென்றதும், இவர்களின் ஐந்து வயது மகனும், மூன்று வயது மகளும் ஏதோவொரு கருணை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்காமல், உண்மையான குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்காமல் வழக்கை அவசரக்கோலத்தில் முடித்த அவலம், அண்மையில் தெரிய வந்தது. நிரபராதியான ஓர் ஆசிரியரும், அவரது அப்பாவி மனைவியும் தவறுதலாகத் தண்டிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையை முடித்துவிட்டு வெளியே வந்திருக்கும் இத்தம்பதியர், தங்களின் ஆசைக் குழந்தைகளை ஆவலுடன் தேடினர். ஆனால் அந்தக் குழந்தைகள் எங்கே இருக்கின்றனர் என்கிற தகவல் யாருக்கும் தெரியவில்லை. கண்ணீரும், கம்பலையுமாக அந்த பெற்றோர் கதறுகிறார்கள்: ""எங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? ஐந்தாண்டு காலம் அவர்கள் அநாதைகளாக வாழ்ந்தார்கள்.

இப்போது காணாமலேயே போய்விட்டனரே? இது என்ன நீதி?''

நிகழ்வு 2:

இந்தியா விடுதலை அடையவிருந்த தருணத்தில், 1946-ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வங்காளம் மதவெறியில் எரிந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி மதக் கலவரத்தை அடக்குவதற்காக பேலாகட் எனும் ஊரில் ஓர் இசுலாமியர் வீட்டில் காலவரையற்ற உண்ணா விரதத்தை மேற்கொண்டார்.

அப்போது பலரும் தாங்கள் இழைத்த கொடுமைகளைக் காந்தியிடம் சொல்லி, தமக்கு பாவப் பிராயச்சித்தம் கேட்டு, அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அப்போது ஓர் இந்து ஆண், காந்தியடிகளை அணுகி, தனது மகனை இசுலாமியர்கள் கொன்றதால், தான் ஓர் இசுலாமியச் சிறுவனின் தலையைச் சுவரில் மோதிக் கொன்றுவிட்டதாகச் சொல்லி அழுதார். தான் நரகத்துக்குப் போகப் போவதாகவும், ஆனால் இரத்தக்கறையோடு போக விரும்பவில்லை என்றும் அரற்றினார்.

படுக்கையில் குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்த காந்தி மகான், அந்த நபர் நரகத்திலிருந்து விடுபடுவதற்கு தனக்கு ஒரு வழி தெரியுமென்று பலவீனமான குரலில் சொன்னார். கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபரிடம் காந்தி சொன்னார்: கொல்லப்பட்ட சிறுவனின் உயரத்தையொத்த, மதக்கலவரத்தில் தன் அம்மாவையும், அப்பாவையும் இழந்துவிட்ட ஒரு சிறுவனைத் தத்தெடுத்து வளருங்கள். அவன் ஓர் இசுலாமியச் சிறுவனாக இருக்கட்டும்; அவனை ஓர் இசுலாமியராகவே வளர்த்தெடுங்கள்.

முதல் நிகழ்வு தண்டனை நீதியின் (Retributive Justice) குறைகளையும், இரண்டாவது நிகழ்வு மீட்புநீதியின் (Restorative Justice) நிறைகளையும் விவரிக்கின்றன. இவ்விரண்டையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் ஒப்பீடு நமக்கு உதவும்:

"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பது நமது தமிழினம் வழங்கும் முதுமொழி. சிறு சிறு பிரச்னைகளுக்காக உறவுகளை வெட்டிக் கொண்டே சென்றால், எப்படி நாம் தனிமைப்பட்டுப் போவோமோ, அதேபோல, குற்றங்கள், குற்றமிழைத்தவர்கள், தண்டனைகள் என்று மட்டுமே சிந்தித்து நாம் கடின முறைகளைக் கைக்கொண்டால், நம்மிடையே தண்டனைக்கு உள்ளாகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்றியங்கும் சமூகத்தில் யாருக்குமே கண்ணும் இருக்காது, பல்லும் இருக்காது.

எனவே தண்டிக்கும் நீதியை சற்றே தள்ளிவைத்துவிட்டு, மீட்புநீதி குறித்து சிந்திப்போம். குற்றமிழைத்தவரைத் தண்டித்துவிட்டு, பாதிக்கப்பட்டவரைப் பரிதவிக்க விடுவதா; அல்லது குற்றமிழைத்தவரைச் சீர்திருத்தி, பாதிக்கப்பட்டவருக்குப் பிராயச்சித்தம் செய்ய வைப்பதா? இதுதான் நம் முன்னிருக்கும் கேள்வி.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு

என்கிறது வள்ளுவம். தன் குற்றத்தையும் வராமல் நீக்கி, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும் என்று கேட்கிறார் வள்ளுவர். அரசனுக்கு மட்டுமல்ல, இந்த பேருண்மை நம் அத்தனை பேருக்குமே பொருந்தும்.

மீட்புநீதி என்பது குற்றமிழைத்தவர்மற்றும் பாதிக்கப்பட்டவர் எனும் இருதரப்பும் நீதிகோரும் ஒரு மாற்று நீதிமன்றம் அல்ல. இது ஒரு புதிய திட்டமோ, அல்லது நடவடிக்கையோ அல்ல.

தண்டனைநீதி குற்றமிழைத்தவரைத் தண்டிப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, பாதிக்கப்பட்டவரைக் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் மீட்புநீதி என்பது பாதிக்கப்பட்டவருக்கு நேரும் துன்பங்களைக் கண்டுணர்ந்து, அவற்றைக் களைந்து, அவருக்கான தேவைகளை நிறைவேற்றுகிறது.

அதேபோல, குற்றமிழைத்தவரைப் பிடித்து வெறுமனே தண்டித்துவிட்டு, அவரை அப்படியே விட்டுவிடுவதற்குப் பதிலாக, அவரிழைத்த துன்பங்களை அவரே உணரச் செய்து, தானாகவே அவற்றுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளவும் செய்கிறது மீட்புநீதி.

வன்முறை நிகழும்போது, பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அநீதியைக் கண்டுணர்தல், அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், மன்னிப்புக் கோரல், இழப்பீடு வழங்கல், மனோதத்துவ உதவிகள் செய்தல், வன்முறை நிகழ்ந்த சூழலைக் கண்டுணர்ந்து மீண்டும் வன்முறை எழாதிருக்க ஆவன செய்தல், தொடர்புடைய அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல் என்று நீள்கிறது மீட்புநீதி.

மீளிணக்கம் போலவே மீட்புநீதியும் நம் சமூகத்தில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. ஆனால் அதை நாம் இனம்கண்டு பிரித்துப் பார்க்கவில்லை, பெயர் வைக்கவில்லை, அவ்வளவுதான்!

மீளிணக்கமும், மீட்புநீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இந்த இரு குழந்தைகளும் ஒரே தலை உடையவர்கள் என்பதால் ஒருவரில்லாமல்,
இன்னொருவர் உயிர் வாழ முடியாது.

மீளிணக்கம் தண்டனை நீதியைவிட மீட்புநீதியையே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியும். ஏனென்றால் பின்னதுதான் பாதிக்கப்பட்டவரின் இழப்புகளை, தேவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. குற்றமிழைத்தவரை நடந்த குற்றத்துக்குப் பொறுப்பாளி ஆக்குகிறது. குற்றமிழைத்தவர், பாதிக்கப்பட்டவர், பொதுச்சமூகம் எனும் இவர்களுக்குள் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை, ஆற்றுப்படுத்துதலை, சமூக நீதியை சாத்தியமாக்குகிறது மீட்புநீதி. மீட்புநீதி என்பது குற்றம், குற்றவாளி, தண்டனை, நீதி போன்றவை பற்றிய ஒரு புதிய பார்வையாக அமைகிறது.

கவிமணி தேசிகவிநாயகத்தின் வார்த்தைகளில் சொல்வதென்றால்:

ஏகாந்தம் யாவருக்கும் இசையமாட்டா(து);
எந்நாளும் கூடியே வாழ வேண்டும்;
சாகாத வரம்பெற்றோர் எவரும் இல்லை;
தளர்ந்தவரைத் தாங்குவதே தருமமாகும்;

குற்றமிழைத்தவரைத் தண்டித்து, தனிமைப்படுத்தாமல், தளர்ந்தவரைத் தாங்கிப் பிடித்து, குறுகிய காலமே நாம் வாழும் இப்பூவுலகில் அனைவரும் கூடி ஒன்றாய் வாழச் செய்வதுதான் மீட்புநீதி.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.