பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முந்தி இருப்பச் செயல் - 30

சமரசப்பேச்சு என்கிற பெயரில் சகித்துக் கொள்ளப்பட முடியாத பல்வேறு குற்றச் செயல்களும், குழப்பமான நடவடிக்கைகளும் நம் நாட்டில் நடந்தேறுகின்றன.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:19 pm

சுப. உதயகுமாரன்

சமரசப்பேச்சு என்கிற பெயரில் சகித்துக் கொள்ளப்பட முடியாத பல்வேறு குற்றச் செயல்களும், குழப்பமான நடவடிக்கைகளும் நம் நாட்டில் நடந்தேறுகின்றன. தமிழகத்தில் "கட்டப் பஞ்சாயத்து' என்றும், வட மாநிலங்களில் "காப் பஞ்சாயத்து' என்றும் அழைக்கப்படும், சட்டத்துக்குப் புறம்பான சமரசப் பேச்சுகள் நிறையவே நடக்கின்றன.

கட்டப் பஞ்சாயத்து என்கிற பெயர் கட்டையைப் பயன்படுத்தி, வன்முறையை மேற்கொண்டு, "நாங்கள் வைத்ததுதான் சட்டம்' என்கிற ரீதியில் நடத்தப்படுகிற பஞ்சாயத்தைக் குறிக்கிறது. சமூகவிரோத சக்திகள் தங்கள் ரவுடித்தனத்தையே மூலதனமாக்கி, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, அவர்களே நீதிபதிகளாக  தீர்ப்பளித்து, அமல்படுத்தும் அதிகாரிகளாகவும் மாறுகிறார்கள். 

இந்நடவடிக்கைகளால் அவர்கள் ஏராளமான பணமும், ஆற்றலும் ஈட்டுகின்றனர். லஞ்சமும், ஊழலும் இடைபுகுந்து காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அதிகார துஷ்பிரயோகத்துடன் கட்டப் பஞ்சாயத்துகள் நடத்தப்படுகின்றன.

வட மாநிலங்களில் நடக்கும் "காப்' பஞ்சாயத்துகள் குலம், கோத்திரம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரே கோத்திர திருமணங்களைத் தவிர்ப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டவை. ஆனால் நாளடைவில் இவை கட்டப் பஞ்சாயத்து அமைப்புக்களாக மாறி நிற்கின்றன.

அதேபோல, சில கிராமங்களில் இயங்கும் ஊர் அல்லது சாதிப் பஞ்சாயத்துகள் வீட்டு வன்முறைகள், குடும்பத் தகராறுகள், சாதிப் பிரச்னைகள், திருமண விவகாரங்கள் எனப் பல்வேறு பிரச்னைகளைக் கையாளுகின்றன. குறிப்பிட்ட சில மக்களை ஊரிலிருந்து விலக்கி வைத்தல், தனிமைப்படுத்துதல், தண்ணீர் தர மறுத்தல் போன்ற சட்டவிரோதமான தீர்ப்புகளையும், கடுமையான  தண்டனைகளையும் வழங்கி, பெரும் கொடுமைகள் இழைக்கின்றனர்.

குற்றவாளிகள் என்று ஒருதலைபட்சமாக அறிவித்து, அவர்களை ஊரார் கால்களில் விழச் செய்வது, கட்டிவைத்து அடிப்பது, அபராதம் விதிப்பது என்றெல்லாம் சாதிப் பஞ்சாயத்துகள் சட்டவிரோதத் தீர்ப்புகளை வழங்குகின்றன. ஆண்களே கோலோச்சும் இந்த சாதிப் பஞ்சாயத்துகள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

அதிகாரப்பூர்வமற்ற, அநியாயத் தீர்ப்புகள் வழங்கும் முறைகேடான மேற்படி அமைப்புகளை "கங்காரு நீதிமன்றங்கள்' என்றழைக்கிறோம். 1849-ஆம் ஆண்டுவாக்கில் கலிஃபோர்னியாவில் தங்கம் தோண்டியெடுக்கச் சென்ற ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பிரச்னைகள் எழும்போது, பிரதிவாதிகள் அளிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளாமல், நீதிபதிகள் தாண்டிக் குதித்துச் செல்வதைத்தான் கங்காரு நீதிமன்றம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்நீதிமன்றம் திடீரென தாவிக் குதித்து வந்து தோன்றுவதாலும், கங்காரு குட்டி போல ஒரு தரப்பின் சட்டைப் பைக்குள் இந்நீதிமன்றம் அமர்ந்திருப்பதாலும் கூட இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

"தடியெடுத்தவன் தண்டல்காரன்' என்பதுதான் மேற்படி நடவடிக்கைகளின் அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. இன்னோரன்ன சாதி, மதம், அரசியல் செல்வாக்கு, அதிகாரம், வன்முறை, பணவெறி போன்றவற்றின் அடிப்படையில் இயங்கும் சட்டத்துக்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்து அமைப்புகளும், சட்டவிரோத சமரசப் பேச்சுகளும் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது மிகவும் 
ஆபத்தானது.

அதே சமயம், மக்களின் நேரத்தையும், பணத்தையும், ஆற்றலையும், பொறுமையையும்  விரயமாக்கும் நீதிமன்றங்களையும் அளவுக்கதிகமாகச் சார்ந்திருக்கக் கூடாது. அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் நிலவும் எடுத்ததெற்கெல்லாம் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் கலாசாரம் இப்போது இந்தியாவுக்குள்ளும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மானநஷ்ட வழக்குகள், இழப்பீடு கோரும் வழக்குகள் போன்றவை இந்தியாவில் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் ஆயிரக்கணக்கில் குவிந்தும் தேங்கியும் கிடக்கின்றன.

நீதிமன்றங்கள் பிரச்னைகளை கருப்பு-வெள்ளை என்று இரண்டு நிலைகளில் மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மனித வாழ்க்கை என்பது இந்த இருதுருவங்களுக்கும் இடையே பரந்து விரிந்து கிடக்கும் சாம்பல் நிற இடைவெளியில்தான் நடக்கிறது. எனவே நீதிமன்றங்களையே அணுகி நியாயம் கேட்டுப் பழகாமல், மாந்தநேயத்துடன் நம் தகராறுகளை நாமே கையாளக்  கற்றுக் கொண்டாக வேண்டும்.

எனவேதான் சீனப் பழமொழி ஒன்று "சாவில், நரகத்தைத் தவிர்ப்போம்; வாழ்வில் வழக்குமன்றத்தைத் தவிர்ப்போம்' என்று அறிவுரைக்கிறது. தென் தமிழகத்திலும் கூட, "கோடு (கோர்ட்) ஏறியவன் கையில் ஓடு ஏறும்' என்கிறார்கள். அதாவது பிச்சையெடுப்பார்கள் என்று அர்த்தம்.

முறைப்படியான, முழுநேர சமரசப் பேச்சு மையங்கள் அதிகம் ஏற்படுத்தப்பட வேண்டிய  தேவை இருந்தாலும், இவை இந்தியாவில் முறைப்படுத்தப்படவில்லை, கட்டமைக்கப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் அரசு சார்ந்த சில நடவடிக்கைகள் பொருத்தமானவையாகவோ, போதுமானவையாகவோ இல்லை.

எடுத்துக்காட்டாக, பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நீண்டநாட்களாக  தீர்வு காணப்படாமல் இருந்தால், அந்த மனுக்கள் மீது உடனே தீர்வு காண்பதற்காக காவல்துறை சார்பில் பெட்டிஷன் மேளா நடத்தப்படுகிறது. இதற்கு ஓர் அழகான தமிழ்ப் பெயர் வைக்காமலிருப்பது ஏனென்று புரியவில்லை. இந்த மேளாக்கள் திருமண மண்டபங்கள், சமூகநலக் கூடங்களில் வைத்து நடத்தப்படுகின்றன. மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் நேரில் ஆஜராகி, போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, நிவாரணம் தேடுகின்றனர்.

அதேபோல, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி, மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இங்கே வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. இம்மாதிரி மக்கள் நீதிமன்றங்களில் விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், உரிமையியல் மேல்முறையீட்டு வழக்குகள், வரைவோலை (செக்) மோசடி, மணவிலக்கு அல்லாத குடும்பநல வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இவை தவிர நுகர்வோர் உரிமை நீதிமன்றங்கள், ரயில்வே நீதிமன்றங்கள் என பல்வேறு சிறப்பு நீதிமன்றங்களிலும் பல பிரச்னைகள் சமரசமாகத் தீர்க்கப்படுகின்றன.

கருத்துப் பரிமாற்றங்களை, கலந்துரையாடல்களை, பேரப் பேச்சுகளை மக்கள்
மயமாக்க வேண்டும். இவற்றை நம் தமிழ்க் கலாசாரத்தின் மூலக்கூறுகளாக மாற்றியாக வேண்டும். உங்களைப் போன்ற கற்றுணர்ந்த, சமூகப் பொறுப்புடைய இளைஞர்கள் உடனுறையும் மனிதர்களுக்கு ஓர் இன்னலென்றால், ஓடோடிச் சென்று தலையிட்டு உதவுங்கள்.

"ஊருக்குழைத்திடல் யோகம்' என்றறிவிக்கும் முண்டாசுக் கவிஞர் முடிவுறச் சொல்கிறார்:

"உற்றவர் நட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை'

எத்தியோப்பியா நாட்டின் டிக்ரை மாநிலத்தில் நான் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது, உற்றவர் சிலரின் பிரச்னைகளில் "நற்றவம்' செய்த சில நல்ல அனுபவங்களைத் தொகுத்து "புயலுக்குப் பின்னே பூந்தென்றல்' (காலச்சுவடு, 2012) எனும் நூலை வெளியிட்டேன்.

எத்தியோப்பியா உள்ளிட்ட எல்லா நாட்டினர்களையும் விட சீனர்கள்தாம் சமரசத்திறனில் சிறந்து விளங்குகின்றனர். "நில உடமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களிடையே எழும் தகராறுகளுக்கு சீனப் புரட்சியே சிறந்த  தீர்வு என்றும், ஆனால் பொதுமக்களிடையே எழும் பொல்லாப்புகளுக்கு சமரசத் தீர்வே சாலச் சிறந்தது' என்றும் அறிவுரைத்தார் மா சேதுங்.

சமரசப்பேச்சு ஒரு பாரம்பரிய தன்னாட்சி வடிவம் என்பதால், அது வழக்குரைஞர்களை விட, நீதிபதிகளை விட பாமர மக்களை அதிகமாக வலுப்படுத்தியது. நாட்டின் ஒவ்வொரு பகுதியாக விடுவித்துச் சென்ற புரட்சியாளர்களால் அம்மக்களின் அன்றாட சண்டை  சச்சரவுகளை தீர்த்து வைக்க இயலவில்லை. எனவே அப்பொறுப்பை அம்மக்களுக்கே வழங்கிச் செல்வது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. குடிமைச் சமூகம் தனக்குள்ளே நடத்திக் கொண்ட சமரசப் பேச்சுகள் உதிர்ந்து போகும் அரசு எனும் கம்யூனிசச் சித்தாந்தத்துக்கு ஏற்றதாக அமைந்தது. 

சீனப் புரட்சியோடு சேர்ந்து சமரசப் பேச்சுக் கட்டமைப்புகளும் வளர்ந்தன. இதனால் 1987-ஆம் ஆண்டு சீனாவில் பத்தாயிரம் வழக்குரைஞர்கள் பணியாற்றியபோது, அறுபது லட்சம் சமரசப் பேச்சு நிபுணர்கள் களத்தில் நின்றனர். நாடெங்கும் சமரசப் பேச்சுக் குழுக்கள் நிறுவப்பட்டன. இதன் உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக, மக்களோடு நெருங்கிய  தொடர்பு கொண்டவர்களாக, சட்டம் பற்றி அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று 
அறிவிக்கப்பட்டது. 

ஐம்பது முதல் அறுபது வயது கொண்டவர்கள் இக்குழு உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களில் பாதி பேர் பெண்களாக இருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்னைகளை பெண்களே சமரசம் பேசித் தீர்த்தனர். இக்குழுக்களுக்கு சட்ட உதவிகள் புரிய சட்டசேவை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். நாமும் சமரசம் செய்து சண்டைகளை நீக்குவோம்!

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.