கரோனா தீநுண்மி பரிசோதனை... 5 நிமிடங்களில் முடிவு!

உலக அளவில் அதிகமானோர் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்படும் நாடாக இந்தியா மாறிவிட்டது.
கரோனா தீநுண்மி பரிசோதனை... 5 நிமிடங்களில் முடிவு!


உலக அளவில் அதிகமானோர் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்படும் நாடாக இந்தியா மாறிவிட்டது.
மக்கள் தொகை அதிகம் உள்ள ஒரு நாட்டில் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது என்றாலும், அதிகப்படியான கரோனா தீநுண்மித்
தொற்றைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் அதிகரித்துவரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. அனைவருக்கும் கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதே மிகப் பெரிய வேலையாக மாறிவிட்டது.
கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தேவையான மருந்துகள், மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என கரோனா தீநுண்மியை எதிர்த்துப் போராடுவதே இன்றைய முக்கிய பிரச்னையாக மாறியிருக்கிறது.
ஒருவருக்கு கரோனா தீநுண்மி இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் அதிகம் பயன்படுத்தும்முறையாக ஆர்டி -பிசிஆர் எனச் சொல்லப்படும் (ரிவெர்ஸ் - ட்ரான்ஸ்கிரிப்ஸன் பாலிமிரேஸ் செயின் ரீ ஆக்ஷன்) முறை இருக்கிறது.
ஒருவரின் மூக்கில், தொண்டையில் உள்ள சளி மாதிரியை எடுத்து அதில் கரோனா தீநுண்மித் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதே இந்தப் பரிசோதனைமுறை.
தொண்டையின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரியில் மரபணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அவற்றின்
எண்ணிக்கையை அதிகமாக்கி, அவற்றில் கரோனா தீநுண்மியின் மரபணுக்கள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு ஓரிரு நாள்கள் ஆகலாம்.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் இப்போது, இதைவிட விரைவாக கரோனா தீநுண்மியைக் கண்டுபிடிக்க வேண்டிய முறையின் தேவைஅதிகரித்துள்ளது.
அப்படிப்பட்ட முறை ஒன்றைப் பயன்படுத்தி, ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருக்கிறதா என்பதை வெறும் 5 நிமிடங்களில் கண்டு
பிடிக்கும் கருவி ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த "பாத்ஷோத் ஹெல்த்கேர்' என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கருவி ஒருவரின் உடலில் தொற்றிக் கொண்டுள்ள கரோனா தீநுண்மியைக் கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளியின் நோய் எதிர்ப்பாற்றலையும் அடையாளம் காட்டிவிடும்.
இதற்காக அவர்கள் ஒருவரின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து அதை ஆன்டிபாடி சோதனை முறை மூலமாக கரோனா தீநுண்மியின்
அளவைக் கண்டறிகிறார்கள்.
""ஒருவருக்கு கரோனா தீநுண்மி தொற்றிக் கொண்டால், சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட பல அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் எதுவும் தென்படாமலும் கரோனா தீநுண்மி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள்
அதிகம். சளி மாதிரியை எடுத்துப் பரிசோதிக்கும்
முறையில் "அறிகுறிகள் தென்படாத' நோயாளிகளைப் பரிசோதிப்பது சிரமம். இந்த ஆன்டிபாடி சோதனைமுறையில் எல்லாரையும் பரிசோதிக்கலாம்.
மேலும் தற்போது கரோனா தடுப்பு ஊசி நாடு முழுவதும் மக்களுக்குப் போடப்பட்டு வருகிறது. தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்
களின் நோய் எதிர்ப்புத்திறன் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதையும் இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்'' என்கிறார் இந்நிறுவனத்தைச் சேர்ந்த நவகந்தா பட்.
இந்த ஆன்டிபாடி சோதனைக் கருவியை உருவாக்குவதில் இந்நிறுவனத்தைச் சேர்ந்த வினய் குமாருக்கும் முக்கிய பங்குண்டு.
இந்தக் கருவியின் மூலம் ஒருவரின் உடலில் உள்ள கரோனா தீநுண்மியை இருவிதங்களில் கண்டுபிடிக்கலாம். ஒருவரின் விரல்நுனியில் உள்ள ரத்தத்தை இந்தக் கருவி பார்த்ததுமே அதுகுறித்த விரிவான தகவல்களைச் சொல்லிவிடும். இது ஒருவிதம். ரத்தத்தை இந்தக் கருவி உள்ளிழுத்துக் கொண்டு அதைப் பரிசோதனை செய்வது இன்னொருவிதம்.
""நாங்கள் உருவாக்கிய இந்தக் கருவி ரத்த மாதிரியின் மூலமாக உடலில் உள்ள ஆன்டிபாடிகளை, குறிப்பாக கரோனா தீநுண்மியை 5 நிமிடங்களில் கண்டுபிடித்து ரிசல்ட்டையும் சொல்லிவிடும். அதை உங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இம்மாதிரியான ஒரு லட்சம் ரிசல்ட்களை இந்தக் கருவியில் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். இந்தக் கருவியை ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்'' என்கிறார் வினய் குமார்.
இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 500 கரோனா தீநுண்மி பரிசோதனை முடிவுகளையும் அவற்றிற்கான ரத்த மாதிரிகளையும் பெங்களூருவில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி சரி பார்த்திருக்கிறார்கள்.
இந்தியன் கவுன்சில் ஆஃப் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்)- ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஃபரீதாபாத்திலுள்ள "டிரான்சிஸ்னல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்'டுக்கும் அனுப்பி இந்தக் கருவியை அனுப்பி மதிப்பீடும் செய்திருக்கிறார்கள். இறுதியாக இந்தக் கருவியை "சென்ட்ரல் ட்ரக்ஸ் ஸ்டேண்டர்டு கண்ட்ரோல் ஆர்கனிசேஷன் (சிடிஎஸ்சிஓ)' என்ற நிறுவனத்துக்கும் அனுப்பி முறையான அனுமதி பெற்று இருக்கிறார்கள்.
""எங்கள் நிறுவனம் ஒருநாளைக்கு 1 லட்சம் கருவிகளைத் தயாரிக்கும் திறன் படைத்தது. பெருகிவரும் தேவையை இது ஓரளவுக்கு நிறைவு செய்யும். மேலும் இந்தக் கருவியின் மூலம்
ஒருவர் தனக்கு கரோனா தீநுண்மி இருக்கிறதா என்பதைச் சோதனை செய்ய குறைந்தது ரூ.500 மட்டுமே செலவாகும்'' என்கிறார் வினய்குமார்.
இந்தக் கருவியை உருவாக்கியிருக்கிற "பாத்ஷோத் ஹெல்த்கேர்' நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் - பெங்களூருவின் ஆதரவில் செயல்படும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com