வலி நிவாரண மருந்து X உடற்பயிற்சி!

உடல் வலி என்பது சாதாரணமானது.  அதிகமான உடல் இயக்கம் கூட, உடல் வலிக்குக் காரணமாகிவிடலாம்.  
வலி நிவாரண மருந்து X உடற்பயிற்சி!

உடல் வலி என்பது சாதாரணமானது. அதிகமான உடல் இயக்கம் கூட, உடல் வலிக்குக் காரணமாகிவிடலாம். உடல் வலிக்காக மருந்துக்கடைக்குச் சென்று கடைக்காரர் தரும் மருந்தைப் பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. நமது இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

அப்படித் தரப்படும் ஒரு மருந்துதான் ஓபியாய்டு. இந்த மருந்தை உட்கொண்ட பிறகு, அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிற இளைஞர்கள் அதிகம். ஏனெனில் இந்த ஓபியாய்டு மருந்துகளில் சில அபின் செடியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதனால் வலி நிவாரணி என்ற நிலை மாறி, போதைப்பொருளாக இந்த மருந்து ஆகிவிடுகிறது. ஆக்ஸிகோடோன், ஹைட்ரோகோடோன், ஃபென்டனைல் மற்றும் டிராமடோல் போன்ற தீவிரமான வலி நிவாரணி மருந்துகளும் இவற்றில் அடங்கும். சட்டவிரோத போதை மருந்தான ஹெராயின் கூட ஓபியாய்டு வகைதான்.

பெரிய காயம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இதய நோயாளிகள், புற்றுநோயாளிகளுக்கு என வலி நிவாரணியாக மருத்துவர்கள் ஓபியாய்டு மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக நாள்பட்ட வலி நிவாரணியாக இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த ஓபியாய்டு மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது தூக்கமின்மை, உடல் தளர்ச்சி, வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சுவாசக்கோளாறு, இதயம் உள்ளிட்ட உடலுறுப்புகளின் செயல்பாடு குறைதல் உள்ளிட்ட மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. ஏன், அதிகப்படியாக இந்த வலிநிவாரணி மருந்தை எடுத்துக் கொண்டால், அது இறப்புக்குக் கூட காரணமாகிவிடுகிறது.

தற்காலத்தில் உலக அளவில் இளைஞர்களிடையே ஓபியாய்டு மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் வலிநிவாரணியாக ஓபியாய்டு மருந்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பல இளைஞர்கள் சிறிது நாளில் போதைப் பொருளான ஹெராயினைப் பயன்படுத்தத் தொடங்கி அதற்கு அடிமையாகிவிடுகின்றனர் என சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே வலிநிவாரணியாக இந்த ஓபியாய்டு மருந்தை முதன்முறையாக எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வலிநிவாரணி மருந்து எப்படியெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.

உடற்பயிற்சி செய்யும் திறன்:

உடல்வலியைச் சரி செய்வதிலும் மனநிலையை மேம்படுத்துவதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் நிறைய இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். உடற்பயிற்சி மனதைப் புத்துணர்வுடன் வைத்திருக்கிறது. இதய ஆரோக்கியம், எலும்புகளை வலுப்படுத்துதல், நல்ல வளர்சிதை மாற்றம், உடல் சமநிலை என ஒட்டுமொத்த உடல்நலமும் உடற்பயிற்சியில் அடங்கியிருக்கிறது.

ஆனால், உடலில் வலி ஏற்படும்போது இந்த வலிநிவாரண மருந்தை எடுத்துக்கொள்வதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதயத் துடிப்பு: வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சிலருக்கு இதயம் மெதுவாகவோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ துடிக்கிறது. அவ்வாறு ஒழுங்கற்ற முறையில் இதயம் துடிக்கும் பிரச்னை கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்ய இயலாது. ஒருவேளை அதையும் மீறி உடற்பயிற்சி செய்தால் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.

மூச்சுத் திணறல்:

வலி நிவாரண மருந்தான ஓபியாய்டை ஒருவர் எடுத்துக் கொண்டால் அவருடைய இருமும் திறன் குறைந்துவிடுகிறது. ஒவ்வாமை, சைனஸ் பிரச்னை போன்றவை உள்ளவர்களின் நுரையீரலிருந்து இருமுவதன் மூலம் சளி வெளியேற முடியாமல் போகிறது. நுரையீரலின் செயல்பாட்டை இந்த வலிநிவாரண மருந்து பாதிப்பதே இதற்குக் காரணம்.

கரோனா தொற்று உள்ள இக்காலத்தில் நுரையீரலின் செயல்பாடு குறைந்துபோவதால்தான் செயற்கைமுறையில் ஆக்சிஜனை சுவாசிக்கச் செய்கிறார்கள். இந்த ஓபியாய்டு வலிநிவாரண மருந்துகளைப் பயன்படுத்துபவர்களின் நுரையீரலின் செயல்பாடு குறைந்துவிடுவதால் உடல்நலம் பலவிதங்களில் கெட்டுவிடுகிறது.

உடல் சோர்வு:

இந்த வலி நிவாரண மருந்துகள் சுவாசத்தையும் இதயத் துடிப்பையும் குறைப்பதால், உங்களுடைய தசைகளுக்கு குறைவான ஆக்சிஜனே கிடைக்கின்றது. இதன் விளைவாக, நீங்கள் விரைவாக சோர்வடையலாம் அல்லது நீங்கள் வழக்கமாக செய்வது போன்ற உடற்பயிற்சிகளைக் கூடச் செய்ய முடியாமல் போகலாம்.

வலிமையிழக்கும் எலும்புகள்:

வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வது எலும்பு கட்டமைப்பை சிதைக்கிறது. எலும்பை மெலிவடையச் செய்கிறது. இதனால் நீங்கள் நடக்கும்போது ஓடும்போது எலும்புகள் உடைய வாய்ப்புள்ளது.

மற்ற வகை வலி நிவாரணிகளைவிட இந்த ஓபியாய்டு மருந்துகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஏற்கெனவே உடல் சமநிலையின்மை, தசைச் சிதைவு, எலும்புகளில் கோளாறுகள் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகள் இருப்பின் உடற்பயிற்சி செய்யும்போது இந்த வலி நிவாரண மருந்தை எடுத்துக் கொண்டால் பாதிப்பு மேலும் அதிகமாகும்.

மலச்சிக்கல்:

இந்த வலி நிவாரண மருந்துகள் பெருங்குடல் வழியாக உணவை நகர்த்தும் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையைக் குறைக்கின்றன. இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

குமட்டல்:

இந்த வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்ளும் சிலருக்கு குமட்டல் ஏற்படுகிறது.

உணர்ச்சிகளில் மாற்றம்:

மனிதன் என்பதற்கான அடிப்படையே உணர்ச்சிகள்தான். அந்தவகையில் வலி நிவாரணியான இந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் உணர்ச்சிகளில் படிப்படியாக மாற்றம் ஏற்படுகிறது.

எனவே முடிந்தவரை ஓபியாய்டு போன்ற வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சியில் மாற்றங்கள்:

ஒருவேளை உங்களுடைய வலிக்கு ஓபியாய்டு மருந்துகள் சரியானவை என்று உங்களுடைய மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைத்தால் உடற்பயிற்சி செய்பவர்கள் அதில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

மருந்துகளை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. உதாரணமாக ஓடுவதைவிட பாதுகாப்பான இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

சைக்கிள் ஓட்டுவது நல்ல உடற்பயிற்சிதான் என்றாலும் ஓபியாய்டு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் உடலுக்கு அதிக அழுத்தத்தைத் தர வேண்டாம். சைக்கிளுக்குப் பதிலாக வீட்டிலுள்ள உடற்பயிற்சி இயந்திரங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

உடற்பயிற்சி நேரம் செய்யும் நேரத்தையும் குறைத்துக் கொள்ளலாம். நீங்கள் வழக்கமாக ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டால் அதனை 30 அல்லது 40 நிமிடங்களாக குறைக்க வேண்டும். இது நீங்கள் சோர்வடைவதையும் குறைக்கும்; பாதிப்பின் அபாயத்தையும் குறைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com