இணைய வெளியினிலே...
கருத்தோ உரையோவிவரித்தலைப் பொருத்தே...இசையாகவோ இடியாகவோகேட்போரது செவி தொடுகிறது.


பியானோவின்
இசைக்கட்டைகளை
மிதித்துக் கொண்டிருந்தது
என் செல்லப்பூனை...
நகக்கால்களில்
நழுவி ஓடும் இசை
என்ன ராகமென்றேன்...
மெதுவாய் "மியாவ்' என்றது.
பாபு
தேடுவதற்கு ஆளற்றவன்...
எதற்காக காணாமல்
போவதைப் பற்றி
சிந்திக்க வேண்டும்?
ஜெயாபுதீன்
ஒரு சம்பிரதாயத்திற்காகத்தான் நலம் விசாரிக்கிறார்கள்.
ஒரு கடமைக்காகத்தான் ஆறுதல் சொல்கிறார்கள்.
ஒரு பாசாங்கிற்காகத்தான் அரவணைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு பழக்கத்திற்காகத்தான் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.
அதற்காக எல்லாம் அவசரப்பட்டு
அதையெல்லாம் வேண்டாமென
ஒருபோதும் நான் மறுத்திட மாட்டேன்.
வெறுமனே ஒரு சம்பிரதாய நலன்விசாரிப்புக் கூட இல்லாமல்
இவ்வாழ்வின் இருட்டை
தன்னந்தனியே கடக்க...
எனக்கு என்னவோ போலிருக்கும்.
-ரிஸ்கா முக்தார்
எப்பவுமே
பலம் இருக்குன்னு எதிரியையும்
பணம் இருக்குன்னு செலவையும்
உருவாக்கக் கூடாது
மெளனவரி
சருகே விழாதே...
ஏரியில் உறங்குகிறது
நிலா.
ஆரூர் தமிழ்நாடன்
கருத்தோ உரையோ
விவரித்தலைப் பொருத்தே...
இசையாகவோ இடியாகவோ
கேட்போரது செவி தொடுகிறது.
புதிர்
பணம் இருப்பதால்
பெரிய ஆளாகி விடுகிறான்...
நாலடி மனிதனும்.
சிதறல்கள்
துடைப்பத்தை வைத்துப் பெருக்கி, தூசி தட்டிய காலத்தில் இந்த அலர்ஜி பிரச்னை அவ்வளவாக இல்லை. "குனியாமல் நிமிராமல் வீட்டுக் குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்யலாம்' என மோட்டார் துடைப்பத்தை வாங்கிய பின், "எங்க மிஸ் சொன்னாங்க' என குழந்தைகள் மணிக்கு ஒரு தடவை கைகளை சானிடைசர் வைத்துக் கழுவ ஆரம்பித்த பின், சாணம் கரைத்து முற்றம் கழுவித் துடைத்ததை மறந்து, தொலைக்காட்சி சேனல் விளம்பரங்கள் பரிந்துரைத்த கலர் கலர் ரசாயனக் கலவைகளால் தரையை மெழுகத் தொடங்கிய பின், "நாங்க உலகத் தரக்கட்டுப்பாடுகளில் ஒன்றுவிடாமல் பின்பற்றுகிறோமாக்கும்' என உதார்விட்டு விற்கப்படும் உணவுப் பண்டங்களால் சந்தையை நிரப்பிய பின்... "அலர்ஜி' அதீத பயம் காட்டுகிறது.
ஏன்? "சுத்தம் சோறு போடும்' என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு "அதிதீவிர சுத்தம் சொறி, சிரங்கை உண்டாக்கும்' என்பதும் உண்மையோ என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறது மேலை நாட்டு அறிவியல். செயல்திறன் முடக்கப்பட்ட கிருமிகளை தடுப்பூசிகளாக உடலுக்குள் செலுத்தி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை எப்படி உருவாக்குகிறார்களோ, அதேபோல நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகளில் சேட்டைக்காரருக்கு எதிராக மட்டும் வேலி கட்டும் வேலையை, நம் உடல் தானாகவே செய்துவிடும். ஆனால், அது புரியாமல் நுண்ணுயிரிகளின் வாசம் படாமல், "இன்குபேட்டர் கவனிப்பில்' குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களது நோய் எதிர்ப்பாற்றல், யார் எதிரி எனத் தெரியாமல் கன்னாபின்னாவென வாள் சுழற்றத் தொடங்குவதே அலர்ஜி பெருக்கத்துக்கான அடிப்படைக் காரணம்.
"அது சரி... அதிசுத்தமாக இல்லாதவர்களுக்கும் அலர்ஜி வருகிறதே' என்று கேட்கிறீர்களா? சரிவிகித உணவு சரியாகக் கிடைக்காதவருக்கும், சாப்பிடாதவருக்கும் அலர்ஜி அட்டூழியம் அதிகம். அதற்கு மிக முக்கியமான காரணம், "எங்கள் நாட்டுக் குப்பைகள், உங்கள் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் கொட்டப்படும்' என வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் போடும் வணிக ஒப்பந்தங்களும் ஒரு காரணம். சூழல் சிதைவைத் தரும் கண்ணாடி கம்பெனி, கார் கம்பெனி, கலர் கலரான சாயப்பூச்சைப் பயன்படுத்தும் உள்ளாடை தயாரிப்பு கம்பெனி, துருப்பிடிக்காமல் இருக்க இயந்திரங்களுக்குப் பூச்சு போடும் கம்பெனி, அணுவைப் பிளக்கும் கம்பெனி, அணுவை அளக்கும் கம்பெனி... என அத்தனை கம்பெனிகளையும், "வேலைவாய்ப்பு வருது; அந்நிய செலாவணி வருது; அழகழகான கட்டடம் வருது' என்று சொல்லி இங்கே செயல்பட அனுமதிப்பதும் பிரதான காரணம். அவர்களும் சத்தமே இல்லாமல் நம் தாய் மண்ணில், காற்றில், நீரில் நச்சுக்களைக் கலக்க, அது அலர்ஜியை பல வடிவங்களில் பரிசளிக்கிறது.
http://siddhavaithiyan.blogspot.com
-ந.ஜீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...