

செவ்வாய் கிரகத்தில் செயல்பாட்டில் உள்ள பெர்செவரன்ஸ் விண்கலத்தின் ரோவரை கட்டுப்படுத்தி வரும் நாசா விஞ்ஞானிகள், மகிழ்ச்சியாகக் கொண்டாட இப்போது ஒரு காரணம் கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகத்தைக் கணக்கிட இந்த ரோவர் உதவி செய்திருப்பதே மகிழ்ச்சிக்கான காரணம்.
லேசர், பெர்செவரன்ஸ் ரோவரின் சூப்பர்காம் மைக்ரோபோன் ஆகியவற்றுடன் புத்திசாலித்தனமான கணக்கீடுகளைப் யன்படுத்தி இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
பிரபஞ்சம் முழுவதும் ஒலியின் வேகம் அது பயணிக்கும் ஊடகத்தின் அடர்த்தியைப் பொருத்து மாறுபடும். அந்த வகையில், செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் குறித்து நிகழ் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற 53-ஆவது சந்திர மற்றும் கிரக அறிவியல் மாநாட்டில் விஞ்ஞானிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
அதன்படி, செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகமானது விநாடிக்கு 240 மீட்டர் அல்லது விநாடிக்கு 787 அடி எனத் தெரிய வந்திருக்கிறது. பூமியில் ஒலியின் வேகமானது விநாடிக்கு 340 மீட்டர் அல்லது விநாடிக்கு 1,125 அடி என்பது குறிப்பிடத்தக்கது. பூமியை விட செவ்வாயில் ஒலியின் வேகம் குறைவாக இருப்பது, செவ்வாய் கிரகத்தின் குறைந்த வளிமண்டல அழுத்தத்தின் விளைவாகும்.
லேசரால் தூண்டப்பட்ட ஒலி, பெர்செவரன்ஸ் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோபோனை அடையும் நேரத்தைக் கணக்கிட்டு ஒலியின் வேகத்தை விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து 2.1 மீட்டர் உயரத்தில் லேசர் பொருத்தப்பட்டுள்ளது. செவ்வாய் கிரக பாறைகள் மற்றும் கிரகத்தின் ஒட்டுமொத்த புவியியல் அமைப்பை ஆய்வு செய்ய இந்த லேசர் பயன்படுத்தப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் அதிக ஒலியானது வேகமாகப் பயணிப்பதாகவும், ஒலியின் வேகத்தில் மாறுபாடு உள்ள ஒரே கிரகம் செவ்வாய் எனவும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறைந்த அழுத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ûஸடு மூலக்கூறுகளின் தனித்துவமான பண்புகள் காரணமாக, செவ்வாயில் ஒலியின் வேகம் மாறுபடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.