பயணங்கள், பாடங்கள்! - ஹேமா ரமணி
எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் பயணம் போய்த் திரும்பியதும், பேனாவும் கையுமாக எழுத உட்கார்ந்துவிடுவதில்லை. ஆங்கிலத்தில் பத்திகைகளில் எழுதி


எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் பயணம் போய்த் திரும்பியதும், பேனாவும் கையுமாக எழுத உட்கார்ந்துவிடுவதில்லை. ஆங்கிலத்தில் பத்திகைகளில் எழுதி வரும் ஹேமா ரமணிக்கு காமிரா கண். பார்த்ததை அப்படியே படம் பிடித்த மாதிரி எழுதுவதில் கைதேர்ந்தவர். கணவர் ரமணி ஓவியர். நடனக் கலைஞர்களின் உடைகளை வடிவமைப்பவர். மேடைகளை அழகுப்படுத்தி அசத்துபவர்.

தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தின் இயற்கையான சூழலில், ஹேமா ரமணியின் நூல் "úஸôல்ஸ்கேப்ஸ்' என்ற பயணக் கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. பத்திகையாளர் நிர்மலா லக்ஷ்மண் வெளியிட, கணிதப் பேராசிரியர் சேஷாத்ரியும், நடிகையும் , நடனக் கலைஞருமான சுகன்யாவும் பெற்றுக்கொண்டனர்.
நடையில் ஒரு கவித்துவம் வெளிப்பட எழுதும் ஹேமா ரமணி, முன்னாள் ஆங்கில ஆசிரியர். பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர்கள் இலக்கியத் துறைக்கு வந்தால் அவர்களுடைய அகடமிக் நடைதான் சாதாரணமாக அவர்களிடமிருந்து வெளிப்படும். ஆனால் ஹேமா வேறு ரகம்.
காசிக்குப் போய் வந்ததை விவரிக்கும் கட்டுரையில் ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி போல அவர் நடை அமைந்திருப்பதுதான் நூலைப் படிக்கத் தூண்டுகிற அம்சம். "நகரம் விழித்துக் கொள்ளும் அழகான காலையில் எழும் சூரியன், சிவந்த வானத்தை மெல்லத் தழுவிக் கொள்கிறபோது, கங்கைக்கும் அந்தச் செறிவான வண்ணம் தொற்றிக் கொண்டு வானைத் தன் மார்பில் அணைக்க, பின்னர் சூரியன் கம்பீரமாகத் தன் பவனியில் முழு ஒளியையும் வழங்குவதற்காக விட்டுக் கொடுத்து விலகிக் கொள்கிறது' என்பது போன்ற கவி நயமான நடை ஹேமாவின் வார்த்தை-ஓவியமாக வெளிப்படுகிறது. மாலை வானம் கறுக்க, எரியும் காட்சிகளின் தணல் மேலெழும்பி பஞ்சபூதங்களையும் இணைக்கிற மாதிரி சிவந்த வண்ணத்தை மெல்லப் பூசுகிறபோது, "ராம் நாம் சத்ய ஹை' ஒலி பின்னணியில் கேட்டுக் கொண்டே இருக்கிறதாம். நடனக் கலைஞர் பேராசிரியர் சி.வி. சந்திரசேகர் பனாரஸில் வாழந்தவர். அவர் சொன்னாராம்: ""இங்கேதான் மரணம்கூட அழகாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். மரணம் வாழ்க்கையின் ஓர் அங்கம். கடைசி ஜுவாலை தணியும் வரை ஒருவித அமைதியும், வாழ்க்கையைப் புரிந்துகொண்ட உணர்வும் நம்மிடம் வந்து சேர்கின்றன'' என்றாராம். ""கங்கை உண்மையில் மேற்கேயிருந்து கிழக்கே பாய்கிறது. ஆனால் வாரணாசியில், அவள் கிழக்கே திரும்பு முன் வடக்கே வளைந்து கொடுக்கிறாள். 64 கட்டங்களும் ("காட்'களும்) ஆய கலைகள் 64ஐயும் நினைவுபடுத்துகின்றன'' என்கிறார் ஹேமா.
கங்கையைப் பற்றி எழுதும்போது, அங்கேயே வாழ்ந்து மறைந்த ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு தடவை அவர் வீட்டில் அவர் வாசிப்பதைக் கேட்கப் போன போது, சாதாரணமாக அவர் வீட்டு வாசலில் செருப்புத் தைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளி ஒருவரும் அவருடன் சரிசமமாக அமர்ந்து ஷெனாய் வாசிப்பதைக் கேட்டு நெகிழ்ந்து போனதைத் தம் உரையில் குறிப்பிட்டார் ஹேமா.
அந்தத் தொழிலாளி ஷெனாய் வாசிக்க அவரிடம் கற்றுக்கொண்டு வந்தாராம்.
சிக்கிம் மாநிலப் பயணத்தில் அங்கே பாயும் டீயெஸ்டா நதியைப் பார்க்க ஜீப்பில் பயணம் செய்த அனுபவத்தை ஹேமா வர்ணித்திருப்பது நூலில் இருக்கிறது. மலைப் பாதையில் போகையில், திடீரென்று மறையும் டீயெஸ்டா நதி, வலப்புறம் பார்த்தால் திடீரென்று மந்திரம் போட்ட மாதிரி தோன்றுமாம். அந்த பிரதேசம் முழுதும் அமைதியாக இருக்க, வாகனத்தின் ஒலி மட்டுமே கேட்குமாம். அருகில் பார்க்கையில் அச்சுறுத்தும் டீயெஸ்டா, மலையின் உச்சிக்குச் சென்று பார்க்கையில் சின்னதாகச் சிறுத்துப் போய்த் தெரியுமாம். ""சிக்கிம் மக்களுக்கு நீர் மட்டுமல்ல, நம்பிக்கையும் ஆனந்தமும் அளிக்கிறது டீயெஸ்டா நதி'' என்கிறார் ஹேமா.
""ரமணியின் தந்தை சிக்கிமில் இருந்த போதுதான் நாதுலா பாதை போட்டார். அவர் வீட்டை விட்டு வெளியே போனால், எப்போது திரும்பி வருவார் என்று தெரியாது. 10 - 15 நாட்கள் கூட ஆகும். ரமணியின் அம்மா அவரிடமிருந்து எதாவது செய்தி வருகிறதா என்று கவலையோடு காத்துக் கொண்டிருப்பார். அப்போது எல்லாம் ஏது செல்போன்? இப்போது என் மகன் ஹைதராபாத்தில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறான். அவனிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால்கூட, மனம் பதறிப் போகிறது. என் மாமியார் எப்படி அந்த நாட்களில் பொறுமையாக இருந்தார் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது'' என்று தன் உரையில் குறிப்பிட்டார் ஹேமா.
கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகையைப் பற்றி வர்ணிக்கும்போது, "அங்கே வசிக்கும் பெண்கள், ஓவியத்திலிருந்து உயிர் பெற்று வந்த கோபிகைகள் போல இருந்தார்கள்' என்று எழுதுகிறார்.
பாடகி அருணா சாயிராம் தன் கணவருடன் அங்கே வசித்த நாட்களைச் சொல்லும்போது, ஏதோ நம் வீட்டுக்கே திரும்பி வந்தது போல் இருந்தது என்றாராம். மும்பையில் பெற்றோருடன் வசித்த போது பாடும்போதும், கிருஷ்ண விக்கிரகம் முன்னிலையில்தான் பாடுவார்களாம் (அருணாவுக்கு தமிழ் தவிர ஹிந்தி, மராத்தி, குஜராத்தியும் தெரியும்). துவாரகா வாசிகளுக்கு, கிருஷ்ணர் கடவுள் அல்ல. அவர்கள் மகன். அதனால் அவனை அரச வடிவத்தில் பார்த்து மகிழ்வார்களாம். "எல்லோரும் மனிதர்களைக் கடவுளாகச் சித்திரித்து வரும்போது, துவாரகையில் கடவுளைத் தங்கள் சொந்த மனிதனாகப் பார்ப்பது புதுமையாக இருக்கிறது'' என்கிறார் ஹேமா.
அருணாவின் நிகழ்ச்சி ஒன்றையும் குறிப்பிட்டிருக்கிறார் ஹேமா. ஆல் இந்தியா ரேடியோவின் ராஜ்கோட் நிலையத்தில் அருணா பாடி முடித்துவிட்டு வெளியே வரும்போது, அடுத்த ரெகார்டிங் அறையில், ஓர் ஏக்தாராவும், டோலக்கும் மட்டும் பின்னணி இசைக்க யாரோ ஒருவர் வைஷ்ணவ ஜனதோ பாடக் கேட்டாராம். "இப்படி ஒரு வைஷ்ணவ ஜனதோ நான் கேட்டதில்லை' என்கிறார் அருணா. அப்பட்டமான கத்தியவாட் பகுதி சங்கீதம்.
அவர் முடித்து வெளியே வரும்வரை அருணா சாயிராம் காத்துக் கொண்டிருந்துவிட்டு, "இப்படி மனத்தைத் தொடும் பாடலைக் கேட்டதே இல்லை. எனக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா?' என்று குஜராத்தியில் கேட்டாராம். அந்தப்
பாடகர் அங்கேயே தரையில் உட்கார்ந்து கொண்டு, அவருடைய புதிய மாணவிக்கு அந்தப் பாடலைக் கற்றுக் கொடுத்தாராம். "கிருஷ்ணரின் ஊரில் நான் அவருடைய ஆன்மாவின் குரலைக் கேட்டேன்'' என்று கூறியிருக்கிறார் பாடகி அருணா சாயிராம்.
""பெங்களூரு மவுண்ட் கார்மல் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்த ஹேமாவை, வேலையை உதறிவிட்டுச் சென்னைக்கு வரச் செய்தது இன்னும் எனக்குள் குற்ற உணர்வாக இருக்கிறது'' என்று நன்றி சொல்கையில் ரமணி குறிப்பிட்ட போது, ""அதைப் பற்றி நான் கவலையே படவில்லை என்றார்'' ஹேமா.
புத்தகத்தின் தலைப்பிலேயே அறிவித்திருப்பது போல, இது வெறும் பயணக் கட்டுரைத் தொகுதி அல்ல. இந்தியாவில் பயணங்களும் உரையாடல்களும் நிறைந்தது. (நூலின் ஆங்கிலத் தலைப்பு: "úஸôல்ஸ்கேப் - டிராவல்ஸ் அன்ட் கான்வர்சேஷன்ஸ் இன் இந்தியா').
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...