தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நான் கிளாஸிகல் நடனக் கலைஞர் அ‌ல்ல! மனம் திறக்கிறார் : அனிதா ர‌த்​ன‌ம்

நடனத்துறையில் அனிதா ரத்னம் என்ற பெயர் பிரபலமானது. அதிலும் குறிப்பாக நவீன நடன வகை, இணையான நடன வகை என்றால் அனிதா ரத்னம் பெயர் நினைவுக்கு வராமல் போகாது.

News image
Updated On :3 நவம்பர் 2015, 5:48 am

சாருகேசி

நடனத்துறையில் அனிதா ரத்னம் என்ற பெயர் பிரபலமானது. அதிலும் குறிப்பாக நவீன நடன வகை, இணையான நடன வகை என்றால் அனிதா ரத்னம் பெயர் நினைவுக்கு வராமல் போகாது.

அவருடன் நடந்த உரையாடல், இதோ:

நீங்கள் இப்போது புதிதாக என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள்?

கடந்த ஒரு வருடமாக, நான் புதிதாக எதுவும் செய்யவில்லை.  ஒவ்வொரு கலைஞருக்கும் அவ்வப்போது ஓய்வு தேவை.  தொடர்ந்து எதையாவது செய்துகொண்டே இருப்பதிலிருந்து சற்றே விடுதலை.  என்னைப் பொறுத்தவரை, என்னுடைய கார் பாட்டரிகளை -சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதனால் கார் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க முடியாது. ஓடாமல் ஒர்க் ஷாப்புக்குப் போயாக வேண்டும்.

நான் என்னுடைய யோகா பயிற்சிகளை கிருஷ்ணமாச்சாரியா முறையில் செய்து வருகிறேன். நீண்ட பிராணாயாமம் காலையில்.  பிற பயிற்சிகளும் உண்டு - சைக்கிளிங், காலை நடைப் பயிற்சி, நீச்சல், வேதம் ஓதக் கேட்பது எல்லாம்தான்.  இவை எல்லாம் என் உடலையும் மனத்தையும் ஆரோக்கியாக வைத்திருப்பதற்குத்தான்.  நடனமாடவும், நடனம் வடிவமைக்கவும் அல்ல.

நான் ஐ.ஐ.டி, என்.ஐ.ஐ.டி., ரோடா ஆகிய அமைப்புகளில் பேசி வருகிறேன். அவற்றில், என் வாழ்க்கையை எவ்வாறு சில அனுபவங்கள் உருவாக்கின என்று பகிர்ந்து கொள்கிறேன். நான் கடைசியாக மேடை ஏற்றியது எ மில்லியன் சீதா.  அது அமெரிக்கா, மலேஷியாவில் எல்லாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, இப்போது இந்தியாவில் பல புத்தக விழாக்களிலும், இலக்கிய விழாக்களிலும் விரும்பி நடத்தப்படுகிறது.  நடனத்தைவிட தியேட்டர் (நாடகம்) என்னை அதிகம் ஈர்த்திருக்கிறது.  நான் நிறைய தியேட்டர் நிகழ்ச்சிகள் இப்போது பார்க்கிறேன். இப்போது ஆரோவில்லிலும் நிறைய நேரம் செலவிடுகிறேன்.  இங்கே வீடு போல இருக்கிறது.  கலைஞர்களும், சூழ்நிலையும் புத்துணர்வு தருகின்றன.  அவர்கள் குறைந்தபட்சமாகவே கருத்துகளைச் சொல்கிறார்கள்.

நான் மீண்டும் இசை கற்க விரும்புகிறேன்.  இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை.  வித்வான் மதுரை என். கிருஷ்ணன் அவர்களிடம் அரியக்குடி பாணி இசை கற்றுக் கொண்டிருக்கிறேன்.  இசையை மீண்டும் தொடர வேண்டும்.  என் மனசில் நிறைய ஐடியாக்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே பெண்கள் மற்றும் இதிகாச அடிப்படை கொண்டவை.  அவை எனக்கு ஓரளவு தெளிவானதும், என் பணிகளைத் தொடங்குவேன்.

Story image

இந்த டிசம்பர் சீசனில் உங்கள் நிகழ்ச்சி உண்டா?

இந்த சீசனில் நான் ஆடவில்லை.  காரணம், புதிதாக என்னிடம் வழங்க ஏதுமில்லை என்பதல்ல.  என்னை யாரும் அழைக்கவில்லை என்பதும் அல்ல. மொத்தத்தில் யாருடைய தவறும் அல்ல.  சென்னை சீஸனின்  பரபரப்புக்கு என்னுடைய பணியும், நடனமும், அணுகுமுறையும் சரிப்பட்டு வராது.  எனக்கென்று ஒரு சிறு ரசிகர் கூட்டம் இருக்கிறது.  எனக்கு அது போதும்.  என்னுடைய ஒளி, உடையலங்காரம், இசை,மேடை நிர்வாகம் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சபா கலாசாரம், என்னுடைய போக்குக்கு ஒத்துவரும் என்று தோன்றவில்லை.  ஆனால் சென்னை நகரம் ஓர் அற்புதமான நகரம்.  என்னுடைய கருத்துகளை, என் தனிப்பட்ட ஆன்மாவை வளர்க்கவும் சென்னை உகந்த நகரம்.

உங்களுடைய நேரத்தை, பல பணிகளுக்கு இடையே, எப்படி நிர்வகித்து வருகிறீர்கள்?

என்னுடைய நேரத்தையும், நிகழ்ச்சிகளையும் கடுமையாக நிர்வகித்து வருகிறேன்.  நான் சோஷியலைஸ் செய்வதில்லை.  என்னைக் கலாசார நிகழ்ச்சிகளில்தான் பார்க்கலாம்.  வெகு அபூர்வமாக பார்ட்டிகளிலும், 5-நட்சத்திர ஓட்டல்களிலும்.  நான் அதிகாலையில் எழுந்து, இரவில் முன்னதாகவே படுக்கச் சென்றுவிடுவேன்.  நான் உணவருந்துவதும், ஓய்வு எடுத்துக் கொள்வதும் ஓர் ஒழுங்குடன் இருக்கும்.

என்னுடைய ஆரோக்கியத்தையும், உடலையும் சீராக வைத்துக் கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பல விஷயங்களிலும் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு குறிக்கோளுடன், என்னைச் சுற்றி ஒரு குழுவை உருவாக்கிச் செயல்பட முடிகிறது.  எப்போதும் மற்றவர்களைவிட குறிக்கோளுடன் இருப்பவர்கள், அதிகம் சாதிக்க முடியும்.  ஏனென்றால் அவர்களுடைய நேர நிர்வாகம் செம்மையாக இருக்கும்.  இதை என் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.  சமூகத்தின் பல தளங்களில் அவர்கள் இயங்கினார்கள்.

இப்போது ஆண் நடனக் கலைஞர்களை அதிகம் பார்க்க முடிகிறதே?

ஆண் நடனக் கலைஞர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.  அவர்கள்தாம் குடும்பத்தில் சம்பாதிக்கிறவர்கள் என்பதால், பெண் நடனக் கலைஞர்களை விட அதிக அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள்.  ஓர் ஆண் நடனக் கலைஞர் ஒரு டாக்டரை மணந்து கொண்டதாக நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒரு நடனக் கலைஞனுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். மாறாக, பெண் கலைஞர்களுக்கு அப்படி இல்லை.

ஆண் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.  சபாக்கள் அவர்களை அலட்சியம் செய்கின்றன.  திறமையில்லாத அழகான பெண் நடனக் கலைஞருக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, திறமையான ஆண் நடனக் கலைஞருக்கு வாய்ப்புக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஆண் நடனக்கலைஞருக்கு கோரியோகிராபி (நடன வடிவமைப்பு), நட்டுவாங்கம், கற்பித்தல், உலகின் பல இடங்களில் ஓர்க்ஷாப், எல்லாம் கிடைப்பதால், அவர்கள் முன்னைவிட இப்போது நன்றாக சம்பாதிக்கிறார்கள்.  இந்தியர்கள் அவர்களுடைய திறமையை என்றென்றும், ஒரு போதும் அங்கீகரிக்காத நிலையில், என்.ஆர்.ஐ. என்ற அயல் நாட்டுக்காரர்கள்தாம் அவர்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.

மாதம் தோறும் வரும் உங்களுடைய நர்த்தகி செய்திக் கடிதத்தில் சில மூத்த நடனக் கலைஞர்களை அப்படிப் போட்டுத் தாக்குகிறீர்களே?

என்னுடைய நர்த்தகி வலைத்தள செய்திக் கடிதத்தில் நான் எழுதும் தலையங்கங்கள் எல்லாம் என்னுடைய சொந்தக் கருத்துகள்.  என்னைக் கேட்டால் நட்சத்திர நடனக் கலைஞர்களுக்கு (இவர்களை ஆங்கிலத்தில் திவா என்கிறார்) பொதுமக்களிடம் ஒரு பொறுப்பும் கடமையும் இருக்கின்றன.  பலரும் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள்.  அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.  ஆராதிக்கிறார்கள்.  ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களை காப்பியும் அடிக்கிறார்கள்.  அவர்களைப்பற்றிய ஐயங்களை எழுப்பாமல் இருக்கும் ரசிகர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். காபியும் தோசையும் சாப்பிடும்போது மட்டுமே பேசுகிறார்கள். இன்றைக்கு நிஜமான விமர்சகர்கள் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிலிருந்து மறைந்து

போய் விட்டார்கள்.  அதனால் எல்லோருக்கும் மரியாதை காண்பிக்க வேண்டும், அடங்கி, கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்.  மீடியா எல்லா நடன விமர்சனங்களையும் வெட்டித் தள்ளிவிட்டு, கத்துக்குட்டி (ஜூனியர்) ரிபோர்ட்டரை நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைக்கிறது.  இது கொடுமையானது. இந்த ஜூனியர்கள் என் மகளைவிட இளையவர்களாக இருப்பார்கள்.  நடனத்தின் அடிப்படைகூடத் தெரியாதவர்களாக இருப்பார்கள்.  எனவே, நம்மைச் சுற்றி இருக்கும் சோஷியல் மீடியாவில் எல்லோருமே சூப்பர் ஸ்டாராகவும், ஜீனியஸôகவும் இருப்பதாகக் கருதுவதால், கடந்த சில வருடங்களாக, நான் என்னுடைய நிலையில் உறுதியாக நின்று, எதைச் சொல்கிறேனோ அதை மட்டுமே செய்து வருகிறேன்.  

நான் ஒன்றும் கிளாஸிகல் (சாஸ்த்ரிய) நடனக் கலைஞர் அல்ல. ஆனால் என்னுடைய பாரம்பரியத்தையும், பயிற்சியையும் மதிக்கிறேன்.  ஆனால் நான் பிரிந்து பல திசைகளிலும் பயணம் செய்கிறேன்.  அதற்காக கிளாஸிகல் நடனத்தை நான் வெறுக்கிறேன் என்று அர்த்தமல்ல. 

இந்த நடனக்கலைஞர்கள் வணக்கத்தையும், புகழ்ச்சிகளையும் அவர்களுடைய தீவிர சிந்தனை (க்ரிடிகல் ரிப்ளெக்ஷன்) இல்லாமல் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.  இந்தியர்கள் பிரபுத்துவ மனப்பான்மையுடன் இருப்பதால், விமர்சனத்தை ஏற்பதில்லை.  என்றாலும் என்னுடைய நிகழ்ச்சிகள் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றன.  நான் ஓர்

எழுத்தாளரை மதிக்கிறேன் என்றால், அவருடன் உட்கார்ந்து உரையாடுவேன்.   நான் ஓவராக ரியாக்ட் செய்ததுமில்லை.  அப்செட் ஆனதுமில்லை.  நான் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டேன் என்றால் அத்தோடு முடிந்தது  விமர்சிக்கப்படுவது நான் அல்ல;  என் நடனம்தான்.

கடந்த பல வருடங்களாக எனக்கு சர்வதேச அளவில் இளம் நடனக் கலைஞர்கள் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.  நான் எழுதுவதைப் படித்துவிட்டு, என் ஆலோசனைகளை விரும்பிக் கேட்கிறார்கள்.  வழிகாட்டச் சொல்கிறார்கள்.  நடன நிலை பற்றி வெளிப்படையாகக் கேட்கிறார்கள். சென்னையில் அமைப்பாளர்களும், சபா செயலர்களும் என்னை ஒதுக்கிவைக்கிறார்கள்.  ஏனென்றால் நான் அங்குள்ள பாத்ரூம் மற்றும் பிற வசதிக் குறைகள் பற்றி எழுதுகிறேன்.  ஆனால் நான் எல்லா இடங்களிலும் அழைக்கப்படுவதுடன், எனக்கு விரோதிகள் யாரும் இல்லை என்பேன். பொறாமை. ஆம்; இருக்கிறது.  வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் இது இல்லையா என்ன? நடனத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது ஒரு விளையாட்டு.  அந்த விளையாட்டுக்குப் பெயர் கலை என்னும் வாழ்க்கை!

இளம் நடனக் கலைஞர்களைப் பற்றி உங்கள் நிலை அல்லது கருத்து என்ன?

இளம் நடனக் கலைஞர்கள் கடினமான பாதையில் பயணம் செய்தாக வேண்டும்.  சோஷியல் மீடியாவில் என்னவோ பிரமாதமாக வளைய வரலாம். எல்லோரையும் ஹீரோ ஹீரோயினாக ஒரு நாளைக்கு உலா வரச் செய்யலாம்.  ஆனால் இன்றைக்கு இளம் நடனக் கலைஞர்களுக்கு மாரதான் ஓட்டக்காரன் உடலுறுதி வேண்டும். அது ஐந்து வருடங்களுக்கு உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும்.  அப்படியானால் 20, 30, 40, 50 வருடங்கள் நிலைத்து இருப்பது எப்படி?

என்னுடைய அரங்கேற்றம் 50 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.  என் ஒன்பதாவது வயதில் அது நடந்தது.  விரைவில் நான் அறுபதை எட்டிவிடுவேன்.  அதை வரவேற்கக் காத்திருக்கிறேன்.  இருபது வயதில் இருக்கும் எத்தனை நடனக் கலைஞர்கள், ரசிகர்கள் பார்வையில் இத்தனை வருட காலம் இருக்க முடியும்  அதுதான் கவலை அளிக்கிறது.  எப்படி என்னால் - ஒரு பெண்ணியவாதியால் - நேர்மையாக, நடனத்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடச் சொல்ல முடியும்.  மேடையில் தொடர்ந்து இடம் பிடிக்க நிறையச் செலவாகும் என்பதோடு, இதில் பயணம் செய்வது வெகு கடினம்.  என்.ஆர்.ஐ.- களின் பண பலம் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது.  பல பெண்மணிகளும் பணி செய்ய, சம்பாதிக்க, நல்ல வாழ்க்கை நடத்த விரும்புகிறார்கள்.

இன்னொரு விஷயம்.  பெரிய குருமார்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள்.  இளம் நடனக் கலைஞர்களே இப்போது குருவாகிவிட்டார்கள்.  அறியும் அளவில் குறைவு. நோக்கமும் குறுகலானது.  நான் நடனத்தின் வருங்காலம் பற்றிக் கவலைப்படுகிறேன்.  என்றாலும், அது ஒரு நாள் மாறும். புதிய கலாசாரத்துக்கு ஏற்றபடி, தன்னை மாற்றிக்கொள்ளும்.  நடனம் கற்றுத் தருபவர்களுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது.  நடனம் ஆடுபவர்களுக்கு அல்ல.  இதுதான் உண்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.