நான் சரியாக உறங்க மாட்டேன். நள்ளிரவில்கூட எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். ஒரு பாத்திரத்தின் உண்மைத் தன்மையை உள்வாங்கிக் கொள்ளவும், அதை அப்படியே அப்பட்டமாக வெளிப்படுத்தவும் நான் திணறித் திண்டாடிப் போயிருக்கிறேன். அதிலும், ஆஷாடா, வாட்டர் லில்லீஸ், நைட்ஸ் என்ட் ஆகிய நாடகங்கள் வேறு வகை. தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணின், அழுத்தி வைக்கப்பட்ட சமூகத்துப் பெண்ணின் உணர்வுகளை அசலாக சித்திரிக்க வேண்டும். இந்தப் பொறுப்பின் காரணமாக, ஒட்டுமொத்தமான நன்மைக்காக, என்னுடைய சொந்த ஆற்றாமையையும், பயத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது.