ஆரோக்கிய சமையல்

ஆரோக்கியத்தைக் காக்க ஆரோக்கியமான சமையல் அவசியம். இதோ உங்களுக்காக ஆரோக்கிய சமையல் குறிப்புகள்
Updated on
4 min read

பச்சை மொச்சை கூட்டு

தேவையானவை:

மொச்சைப்பருப்பு -  1 கிண்ணம்

மல்லி தூள் -  1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

தேங்காய் விழுது  - அரை கிண்ணம்

உப்பு - தேவையான அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கிண்ணம்

கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் -  தேவையான அளவு

கறிவேப்பிலை  - சிறிதளவு

நல்லெண்ணெய்  - 1 குழிக்கரண்டி

செய்முறை: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு  இரண்டையும் வேக வைத்து மசித்து கொள்ளவும்.  புளியை  ஊற வைத்து  கரைத்து  கொள்ளவும்  அதனுடன்  சாம்பார் பொடி, மல்லி தூள், உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும்.  பின்னர் அதனுடன், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து,  தேங்காய் விழுது  சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  பிறகு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான பச்சை மொச்சை கூட்டு ரெடி

•••

கோதுமை காபி

தேவையானவை:

முழு கோதுமை - 500 கிராம்

மல்லி - 50 கிராம்

நாட்டுச் சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை:  முழு கோதுமையை உமி நீக்கி காபி கொட்டை வறுப்பது போல நன்கு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் மல்லி விதையையும் சிவந்து மணம் வரும்வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். இந்தப் காபி பொடியை இரண்டு தேக்கரண்டி பால் அல்லது தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து நாட்டுச் சர்க்கரை கலந்து பருகலாம். இது சுவையில் காபி போலவே இருக்கும். காபி குடிப்பதை விடமுடியாதவர்களுக்கு சிறந்த மாற்று வழி. உடலுக்கும் ஆரோக்கியமானது.

•••

ராகி - பாலக் அடை

தேவையானவை :

பாலக்கீரை - 1 கட்டு

ராகி மாவு - 2 கிண்ணம்

தோசை மாவு - 1 கிண்ணம்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

முட்டைக்கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கேரட் - 1 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

செய்முறை: பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ராகி மாவு, தோசை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதங்கியபின் மாவுடன் சேர்த்து கலக்கவும். அரைமணி நேரம் கழித்து அடை வார்க்கலாம். சுவையான சத்துள்ள ராகி - பாலக் அடை தயார்.

•••

பிரட் போண்டா

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2

முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் - 1 கிண்ணம்

(பொடியாக நறுக்கியது)

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்

தக்காளி - 2

பிரட் - 1

பாக்கெட் பால் - 1/4 லிட்டர்

கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - சிறிதளவு

கொத்துமல்லி - சிறிதளவு

 செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, கரம் மசாலா, மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, பின் மசித்த உருளைக்கிழங்கு, கொத்துமல்லி சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாலில் பிரட்டை நனைத்து, அதில் செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து நீளமாகவோ, உருண்டையாகவோ உங்கள் வசதிப்படி செய்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். மிகவும் ருசியாக இருக்கும்.

•••

புடலங்காய் கார குழம்பு

தேவையான பொருள்கள்:

புடலங்காய்   - 200 கிராம்

துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு.

வறுத்து அரைக்க...

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 3

துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி

மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி

அரிசி - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை: துவரம் பருப்பில்  மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும்.  பின்னர் வறுக்கக் கொடுத்துள்ள அனைத்தையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு, உ.பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.

•••

வாழைப்பூ ஸ்பைசி குருமா

தேவையானவை:

சிறிய வாழைப்பூ - 1

வெங்காயம் - 3

தக்காளி - 3

பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, - தாளிக்க

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

எண்ணெய்   - தேவையான அளவு

உப்பு - தேவையான  அளவு

மல்லித் தழை - சிறிதளவு

அரைக்க:

காய்ந்த  மிளகாய் - 8

தேங்காய் - 3 தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கசகசா - அரை தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி - சிறு துண்டு

செய்முறை: வாழைப்பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவற்றை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

 பின்னர், வாணலியை வைத்து பட்டை- கிராம்பு, அன்னாசிப்பூ தாளித்து பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். நன்கு வதங்கியதும் வாழைப்பூவைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி மல்லித் தழை தூவவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com