பாலைவனம் சோலை ஆனது!

கடும் வெப்பம், தோலைத் துளைக்கும் சூரியக் கதிர்கள் காரணமாக பொதுவாகவே ராஜஸ்தான் பூமி வறண்டு இருக்கும்.
பாலைவனம் சோலை ஆனது!

கடும் வெப்பம், தோலைத் துளைக்கும் சூரியக் கதிர்கள் காரணமாக பொதுவாகவே ராஜஸ்தான் பூமி வறண்டு இருக்கும். மரங்கள் காய்ந்து கருகிப் போயிருக்கும். தண்ணீருக்காகப் பெண்கள் நீண்ட தூரம் கொளுத்தும் வெயிலில் போக வேண்டிய அவலம். கால்நடைகளின் உணவுக்காக புல் பூண்டு கூட முளைக்காத பூமி.

அந்தப் பகுதி பச்சை பசேல் என்று கனவில் கூட மாறாது என்ற நினைப்பை மாற்றியவர் அமலா ரூயா. ராஜஸ்தானின் நீர் வளத்தைப் பாதுகாக்க அவர் என்ன செய்தார்? அவரே கூறுகிறார்:

""ராஜஸ்தானில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் சேமித்தால், பஞ்ச நிலைமை வெகுவாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதற்கு மழை பெய்யும் இடங்களில் சிறு சிறு அணைகள் கட்டலாம், ஏரி குளங்கள் உருவாக்கலாம் என்று முடிவு செய்தேன்.. இந்த முயற்சியில் உள்ளூர் மக்களையும் பங்காளியாக்கினேன். செலவில் கால் பகுதியை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

எனது தொண்டு நிறுவனம் மூலம் என் திட்டம் வெற்றி பெறுமா என்று சோதனை செய்து பார்க்க ஆரம்பத்தில், மழை குறித்த புள்ளி விவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் , மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களைக் கணித்து அந்தப் பகுதியில் இரண்டு தடுப்பணைகளைக் கட்டினேன். உள்ளூர் மக்கள் எனது முயற்சியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு நல்கினர் . அடுத்த சில ஆண்டுகளில் நூறு கிராமங்களில் இருநூறு தடுப்பணைகள் கட்டி முடித்தேன்... சிறிது சிறிதாக செடிகள், மரங்கள் துளிர்த்தன. பிறகு வயல்கள் பிறந்தன... தண்ணீர், திரவ வடிவில் இருக்கும் தங்கம் ... அதன் மதிப்பு மகத்தானது.. என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டார்கள். ஒரு தடுப்பணை கட்ட ஐந்து லட்சம் செலவானது . இந்த சமூகப் பணிக்கு நிறைய ஆர்வலர்கள் நிதி உதவி செய்கிறார்கள் .

இந்த தொலை நோக்குத் திட்டத்தால் சுமார் இரண்டு லட்சம் ராஜஸ்தான் மக்கள் பயன் பெறுகிறார்கள். இவர்களின் மொத்த வேளாண்மை வருவாய் ஆண்டிற்கு முன்னூறு கோடிகளைத் தொட்டிருக்கிறது.

முன்பெல்லாம் வருவாய்க்காக நகரங்கள் நோக்கிச் செல்பவர்கள் இந்தப் பகுதியில் அதிகம். அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. வறண்ட பூமியில் வசிக்கும் இளைஞர்களுக்கு யாரும் பெண் தர மாட்டார்கள். இப்போது தண்ணீர் வசதி ஏற்பட்டிருப்பதால், இளைஞர்களுக்கு திருமணம் நடக்கிறது.

குடிநீருக்காக நீண்ட தூரம் சுடும் வெயிலில் கால்கள் கடுக்க பெண்கள் போய்வரும் நிலைமை மாறியுள்ளது.

தெருவில் தண்ணீர் குழாய்கள் வந்துவிட்டன. தண்ணீருக்காக அலையும் நேரம் மிச்சம். அந்த நேரத்தை வயல் வேலைகளில் பெண்கள் செலவு செய்கிறார்கள்''} என்று சொல்லும் அமலா, ராஜஸ்தானின் சிகார், ஜுன்ஜுனு, பிகானீர், அல்வார், தாசா மாவட்டங்களில் தனது பசுமைப் பணியை வெற்றிகரமாக நடத்தி அந்தப் பகுதி மக்களின் வாழ்வில் பெரிய திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறார். அதனால் அந்தப் பகுதி மக்கள் அமலாவை "தண்ணீர்த் தாய்' என்று அழைக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com