.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
17.2. 2016 இதழின் தொடர்ச்சி...
ஆஸ்திரேலியாவில் குதிரைப் பந்தயம் தொண்டைமானின் பொழுதுபோக்காக அமைந்தது. மோளி பலவிதப் பார்ட்டிகளில் விலையுயர்ந்த ஆடைகளுடன் நவரத்தின நகைகளுடன் அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார். ஆஸ்திரேலியாவில், 1916 ஜூலையில் தொண்டைமான் தம்பதிக்கு மகன் பிறக்க... புதுக்கோட்டையில் ஒரே உற்சாகம். மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் என்று மகனுக்குப் பெயரிட்டார்கள். மகனையாவது புதுக்கோட்டை மன்னனாக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் தரும் என்ற நம்பிக்கையில் தொண்டைமான் இருந்தார். சில ஆண்டுகளில், மகனையும் புதுக்கோட்டை மன்னனாக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் தராது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. ""காதலுக்கும் சோதனை.... காதல் சின்னத்திற்கும் சோதனையா.. காதலித்தது குற்றமா... திருமணம் செய்துகொண்டது குற்றமா..வாரிசைப் பெற்றுக் கொண்டதும் தவறா...'' தொண்டைமான் கலங்கினார்.
மனம் வெறுத்துப் போன தொண்டைமான், மன்னர் மகுடம் பெரிது என்று நினைக்கவில்லை....காதல் மனைவியை கரித்துக் கொட்டவில்லை... வாரிசை ஒதுக்கவில்லை..., மோளி பிறந்த ஆஸ்திரேலியாவுக்கு மனைவி மகனை திருப்பி அனுப்பவில்லை... உள்ளுக்குள் உடைந்து போன தொண்டைமான் , மன்னனாக இருப்பதால்தானே மனதிற்குப் பிடித்தவளைத் திருமணம் செய்து கொண்டதில் பிரச்னைகள்... சாதாரண மனுஷன் ஆகிவிட்டால்... என்ற கோணத்தில்
சிந்தித்தார்.
1920-இல் மன்னர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அதற்கு நஷ்ட ஈடாக சுமார் 22 லட்சம் ரூபாய்களை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமானுக்கு வழங்கியது. குடும்பத்துடன், லண்டன் பயணமானார். அங்கு சிறிது காலம் வசித்தனர். பின்னர், பாரிஸ் நகருக்கு இடம் பெயர்ந்தனர். 1928 மே 28இல் தொண்டைமான் காலமானார். அப்போது அவருக்கு வயது 53. தொண்டைமானின் பூத உடலை கப்பல் மூலமாக புதுக்கோட்டை கொண்டு செல்ல வேண்டும்... அவருக்கு முழு அரசு மரியாதைகள் தரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும்.. என்று பிரிட்டிஷ் அரசிடம் மோளி வேண்டுகோள் விடுத்தார்.
புதுக்கோட்டைக்கு தொண்டமானின் உடலை கொண்டு சென்றால், அவரது மகனை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக அனுதாபத்தின் பெயரில் அரச குடும்பமும் மக்களும் ஏற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தருவதாக அமையும் என்று ஆங்கிலேய அரசு கருதியதால், தொண்டமானின் ஈமக் கிரிகைகள் புதுக்கோட்டையில் வைத்து நடத்த அனுமதிக்கவில்லை.
துக்கத்துடன், மோளி, தொண்டைமானின் உடலை லண்டன் நகருக்குக் கொண்டு சென்றார். அங்கு இந்து மத முறைப்படி தொண்டைமானின் பூதஉடலை எரியூட்டினார். வாய்க்கரிசி போடவும் மோளி மறக்கவில்லை . அந்த அளவுக்கு புகுந்த வீட்டு சம்பிரதாயங்களை மோளி தெரிந்து வைத்திருந்தார் . உள்ளம் கவர்ந்த கணவனின் ஆத்மா சாந்தியடைவதற்காக என்ன என்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து முடித்தார்.
கணவர் இறந்ததும் சில ஆண்டுகள் மோளி வெள்ளைப் புடவை மட்டுமே அணிந்து வந்தார். தொண்டைமான் மீது மோளி வைத்திருந்த அன்பு பாசம் மதிப்பு காதலைப் பார்த்து ஒரு மேல்நாட்டுப் பெண் இந்தியக் கணவன் மீது இப்படி பற்றுதலாக இருக்கிறாரே.. என்று அனைவரும் அதிசயித்தனர்.
தொண்டைமான் இறந்த சில ஆண்டுகளில், உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஆகாகான், மோளியை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். மேல்நாட்டில் கணவன் இறந்ததும் மறு மணம் செய்து கொள்வது மிகச் சாதாரண நிகழ்வு. அதுவும், மோளி ஆஸ்திரேலிய ஆங்கிலப் பெண்மணி.. மறுமணம் பற்றி நன்கு தெரிந்திருப்பவர்...
அதை நினைத்துத்தான் ஆகாகான் மோளியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டார். ""என் மனதில் என்றைக்கும் குடியிருப்பவர் தொண்டைமான் தான். அவரை மறக்க என்னால் முடியாது... தொண்டைமான் என் கணவராகத் தொடர்வார்'' என்று சொல்லி மோளி மறுத்து விட்டார். மோளியின் பதிலைக் கேட்ட ஆகாகான் மட்டுமல்ல, மேல்தட்டு மக்கள் அனைவரும் மோளி தொண்டைமானை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டனர்.
தனிமையில் விடப்பட்ட மோளி, தொண்டைமானின் பிரிவை எண்ணி எண்ணி, துக்கித்து அதிகம் குடிக்க ஆரம்பித்தார். வயிற்றில் புற்று நோய் வந்ததினால், 1967 நவம்பர் 22இல் கேன்ஸ் நகரத்தில் இறந்தார். அப்போது அவருக்கு வயது 73.
""தொண்டைமான் - மோளியின் ஒரே வாரிசான, மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் ஆஸ்திரேலியா, லண்டன், பாரிஸ் என்று சுற்றி கடைசியில் அமெரிக்க குடிமகன் ஆகி... 68ஆம் வயதில், 1984இல் இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் இறந்தார். தந்தை தொண்டைமான், தாய் மோளியின் ஈமக்கிரிகைகள் நடந்த லண்டன் நகரத்தில் இருக்கும் கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டிலேயே அடக்கம் நடந்தது. ஒரு காதல் குடும்பத்தின் அஸ்தமனம் ஒரே இடத்தில் நடந்து முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.