சமையல் சமையல்!: பஜ்ஜி  ஸ்பெஷல்

சமையல் சமையல்!: பஜ்ஜி  ஸ்பெஷல்

காலிஃப்ளவரை காம்புடன் ஆய்ந்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதை சூடான வெந்நீரில் 2 நிமிடம் போட்டு வைத்து, நீரை வடிகட்டவும்.


காலிஃப்ளவர் பஜ்ஜி 

தேவையானவை: 
சிறிய காலிஃப்ளவர் - 1 
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு
சோள மாவு கலவை - 3 கிண்ணம்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: காலிஃப்ளவரை காம்புடன் ஆய்ந்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதை சூடான வெந்நீரில் 2 நிமிடம் போட்டு வைத்து, நீரை வடிகட்டவும். அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு கலவையுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், ஒவ்வொரு காலிஃப்ளவர் துண்டையும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

நேந்திரம்பழ பஜ்ஜி

தேவையானவை: 
நேந்திரம்பழம் - 2
கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கிண்ணம்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். நேந்திரம்பழத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இனிப்பும் காரமும் இணைந்து ருசிக்கும் இந்த கேரளா ஸ்பெஷல். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

பேபிகார்ன் பஜ்ஜி


தேவையானவை: 
பேபிகார்ன் - 6 
கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 தேக்கரண்டி
சோள மாவு - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னின் மேல் உள்ள தழைகளை உரித்து நீளவாக்கில் சரி பாதியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். நறுக்கிய பேபிகார்னை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். குழந்தைகளுக்கு மிளகாய்த்தூள் போடாமல் தயாரித்துக் கொடுக்கலாம்.

கத்தரிக்காய் மசாலா பஜ்ஜி

தேவையானவை: 
கத்தரிக்காய் - 1
கடலை மாவு, அரிசி மாவு, 
சோள மாவு மூன்றும் சேர்த்த கலவை - 
ஒரு கிண்ணம்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: மூன்று மாவுக் கலவையுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொரித்து எடுக்கவும்.

பீர்க்கங்காய் பஜ்ஜி

தேவையானவை: 
பீர்க்கங்காய் - 1
கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கிண்ணம்
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயை தோல் சீவி வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு  வெந்ததும் எடுக்கவும்.

இந்த பஜ்ஜி மிகவும் வாசனையாக இருக்கும். தேங்காய்ச் சட்னி இதற்கு அற்புதமான சைட் டிஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com