ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது... 

உடல்நிலை சரியில்லாத நாள்களில், உணவும் எடுத்துக்கொள்ள இயலாமல் போவது இயல்பான ஒன்றுதான்.

News image
Updated On :8 டிசம்பர் 2020, 6:30 pm

ப. வண்டார்குழலி இராஜசேகர்

உடல்நிலை சரியில்லாத நாள்களில், உணவும் எடுத்துக்கொள்ள இயலாமல் போவது இயல்பான ஒன்றுதான். இயற்கையான ஒன்றும் கூட. ஆனால், அந்த அசாதாரண நிலை எதனால் ஏற்படுகிறது என்பதைத்தான் தெரிந்துகொள்ள மறந்து விடுகிறோம். நோய்க்கு மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்கிறோமே தவிர, அந்த மருந்துகளால் உடலியக்க உறுப்புகளில் அல்லதுரத்தம் முதலான திரவங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு, அதனால் என்னென்ன உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்பதைகவனிக்கத் தவறிவிடுகிறோம். இதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, தசைப் பிடிப்பு, குமட்டல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று குறிப்பேட்டிலேயே கொடுக்கும் நிலையில்கூட, அதைப் படித்துத் தெரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.

இதில், ஒருபுறம் குறைபாடும் நிகழும்; மறுபுறம் வீரியத்தன்மை அதிகரிப்பதும் நிகழும். ஆனால், சில உபாதைகள் மருந்துகளால் ஏற்படுகிறது என்பதை மறந்து, நோயால் என்று நினைத்துக் கொண்டு, அதற்கு வேறொரு மருந்தினைத் தேடிச்செல்கிறோம். உணவும் மருந்தும் ஒன்றிணைந்து வேலை செய்யும்போது, மருந்தின் தனித்தன்மை, நோய் குணமாக்கும் திறன், கணிக்கப்பட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் தன்மை போன்றவற்றில் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.

மற்றொரு நிலையில், நோயாளி எடுத்துக்கொள்ளும் உணவுகளும், அவர்களின் உடலிலுள்ள சத்துகளின் அளவும், மருந்துகளுடன் கொடுக்கப்படும் துணை மருந்துகளும், மருந்துகளின் தனித்திறனை குறைத்தோ அல்லது அளவுக்கதிகமான வீரியத்தன்மையைக் கொடுத்தோ, உடலின் தன்மையை மாற்றுவதாலும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

நீண்டகாலமாக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள், நரம்பு மண்டலம், இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், கண்கள், நுரையீரல் போன்ற உள் உறுப்புகளில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, அவற்றை செயலிழக்கச் செய்யும் அபாயகரமான விளைவுகளைக்கூட ஏற்படுத்திவிடும். மருந்துகளின் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் பணியைச் செய்யும் கல்லீரலும், சிறுநீரகமும் தான் மிக அதிக அளவில் பாதிப்படைகின்றன.

இதுபோன்ற நிலைகளில், தீவிரமான கண்காணிப்பிற்குள் இருக்கும் நோயாளிகளின் உடல் தன்மையை ரத்த பரிசோதனைகள் வாயிலாக தெரிந்துகொண்டு, மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி, உணவுமுறை மாற்றங்களை மிகவும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

வீட்டிலேயே இருந்துகொண்டு, குறைந்தபட்சம் மூன்று நாள்கள் முதல் ஒன்று அல்லது இரண்டு வாரகாலம் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நிலையிலும், தொற்றாத நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவைகளுக்கும், குறுகிய கால உபாதைகளான வயிற்றுப்புண், தொற்றுகள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சிறு அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளாலும்; ஏற்படும் சிறு சிறு பக்க விளைவுகள் அல்லது உபாதைகளை, உணவை மாற்றிக் கொள்வதாலேயே சற்றே சரிசெய்து கொள்ளலாம்.

வயதானவர்கள், உடல் பருமன் உள்ளவர்களின் உடலில் கொழுப்பில் கரையும் மருந்துகள் அதிகம் சேமித்து வைக்கப்படுகின்றன. கொழுப்பு செல்களில் சேரும் இவை, உடலின் விஷத்தன்மையை அதிகரித்துவிடுகின்றன. இவர்களின் கல்லீரலும் இவற்றை அப்புறப்படுத்துவதற்குத் திணறிப்போகும். எனவே, இவர்கள் உடலுக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிப்பது கட்டாயம் என்பதுடன், உடலில் நச்சுத்தன்மை சேராமலிருப்பதற்கு, எலுமிச்சைச்சாறு, மிளகு, இஞ்சி போன்றவற்றை அடிக்கடி அல்லது தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை ஒத்துவரும் நிலையில், வியர்வை வெளியேறும் அளவிற்கு மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவரவேண்டும். நரம்பு மண்டல நோய்களுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகள், பசியெடுக்கும் திறனைக் குறைத்து, உடல் எடையைக் குறைத்துவிடுவதும் உண்டு. அதிகப் பசியைத் ;தூண்டி, அளவுக்கு அதிகமான உணவால் உடல் எடையை அதிகரித்துவிடுவதும் உண்டு.

எனவே அதற்கேற்றாற்போல், அவர்களுடைய கார்போ ஹைடிரேட், கலோரி, புரதம், கொழுப்பு போன்ற ஊட்டங்களின் அளவில் மாறுதல்களைக் கொடுக்கலாம்.

இதயநோய்களுக்காகக் கொடுக்கப்படும் Gemfibrozil, captopri ஆஸ்துமாவிற்காகக் கொடுக்கப்படும் Beclomehasone, Terutaline தொற்றைக் குணப்படுத்த கொடுக்கப்படும் Amprenavir, metronidazole, Cefuroxime போன்ற மருந்துகள் நாவின் சுவையறியும் தன்மையை மாற்றி, உண்ணும் ஆர்வத்தைக் குறைத்து விடுகின்றன. அதுமட்டுமல்லாமல், நோயாளிக்குப் பிடிக்காத, உலோகம், மண் போன்றவற்றின் சுவையைக் கொடுத்துவிடுவதால், சில நேரங்களில், உணவை முற்றிலும் தவிர்த்துவிடும் நிலையும் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற நேரங்களில், அடிக்கடி தண்ணீர் அருந்துவது, உப்புநீரில் வாய் கொப்பளிப்பது, சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்த நீரை வாயில் வைத்திருந்து மெதுவாக விழுங்குவது போன்றவை நிவாரணம் கொடுக்கும்.

மூட்டுவலிக்காகஎடுத்துக்கொள்ளும் alendronate மருந்துகளால் ஏற்படும் குமட்டல், வயிற்றின் அமிலத்தன்மையில் மாற்றம் போன்றவற்றால், 30 நிமிடங்களுக்கும் மேலாக அஜீரணத்தால் தவிக்கும் நிலையும் உண்டு. வயிற்றெரிச்சல், வாயுப்பிடிப்பு, ரணமாக்குதல் போன்ற உபாதைகள், வலி நிவாரணத்திற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளால் ஏற்படுகின்றன. இவர்கள், உணவு உண்டவுடன் மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், அரை மணி நேரம் கழித்து உண்பதும், குமட்டல், வாந்தி, அஜீரணத்தைக் குறைக்கும் தன்மையுள்ள புதினா, எலுமிச்சை, இஞ்சி, பெருஞ்சீரகம், சீரகம் போன்ற பொருட்களை உணவுக்கு முன்பும், பின்பும் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம்.

உணவை ஒரே மூச்சாக அதிக அளவில் சாப்பிடாமல், சிறிது சிறிதாகக் குறைவான இடைவெளி விட்டு சாப்பிடுவது நலமளிக்கும். சில நீரிழிவு மருந்துகள் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்று மாற்றி மாற்றி ஏற்படுத்துவதும் உண்டு. வயிற்றுப்போக்கு இருந்தால், நார்ச்சத்து உள்ள உணவுகளான கீரைகள், முழு தானியங்கள், அதிகக் காரமுள்ள உணவுகள், செரிப்பதற்கு நேரமாகும் அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் இருப்பின், கூழ் போன்ற அரை திரவ உணவுகளும், அதிக நீர் சேர்த்த உணவுகளும், பச்சை காய்களும், பழங்களும் நல்ல பலனைத் தரும்;.

மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது சிலவகை உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. உதாரணத்திற்கு, ரத்த நாளங்களை சுருங்கச்செய்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கச் செய்யும் டைரமின் என்ற அமினோஅமிலம் பதப்படுத்தப்பட்ட மாமிசம், ஈரல், குடல் போன்ற உறுப்பு உணவுகள், சீஸ், பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட மீன், பிற இறைச்சி வகைகள், சோயாபீன்ஸ் போன்றவற்றில் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்திற்காக மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், இவ்வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.அதிக உப்பு, சர்க்கரை, வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுகள், நோயாளியின் உடலிலுள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்களின் அளவையும் உடல்நீரின் அளவையும் அதிகரித்து, மருந்துகளின் தன்மையை மாற்றிவிடும் என்பதால், அவசரத் தேவைக்காகக்கூட இவ்வகை உணவுகளைக் கொடுத்துவிடக்கூடாது.

அதிக அளவு காபி மற்றும் தேநீர் அருந்துதல், தொடர்ச்சியான மதுப்பழக்கம் போன்றவைகளாலும், மருந்துகளின் செயல்திறன் அதிகரிக்கவும், குறையவும் செய்கிறது. மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நேரத்தில், மதுப்பழக்கம் இருப்பின், வயிற்றெரிச்சல், குழப்பமான மனநிலை, ரத்தக்கசிவு, இதயத்துடிப்பு அதிகரித்தல், குமட்டல் போன்றவை சில நேரங்களில் நிரந்தரமாக இருப்பதுண்டு.

ஒரு குறிப்பிட்ட மருந்து வகையால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும், அதற்காக எந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என்று நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டாலும், பொதுவாகவே, நோய் ஏற்பட்டு, மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, நிறைய தண்ணீர் அருந்துவதும், இரண்டு மூன்று வேளைகள் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வதும் அவசியம். சூப், கஞ்சி போன்ற அதிக நீர் சேர்த்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதால், மருந்துகளின் வேதிவினைகள் நிகழ்ந்த பின்னரும், அதன் தன்மை நீண்ட நேரத்திற்கு ரத்தத்தில் இருந்து, தேவையற்ற எதிர் விளைவுகளை அல்லது சிறு சிறு உடல் உபாதைகளை அல்லது தொடர்ச்சியான பக்க விளைவுகளை ஏற்படுத்தா வண்ணம் ஓரளவிற்குத் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.