கதை சொல்லும் குறள் - 5: தொழில் பக்தி!
சூரியன் உச்சியைத் தொட்டிருந்தான். தன்னுடைய பண்ணை வீட்டின் வெளிவராந்தாவில், சிலு சிலுவென வீசிக் கொண்டிருந்த தென்றல் காற்றை அனுபவித்தபடி ஈஸிசேரில் சாய்ந்து படுத்திருந்தார் லஷ்மண் மேத்தா.


சூரியன் உச்சியைத் தொட்டிருந்தான். தன்னுடைய பண்ணை வீட்டின் வெளிவராந்தாவில், சிலு சிலுவென வீசிக் கொண்டிருந்த தென்றல் காற்றை அனுபவித்தபடி ஈஸிசேரில் சாய்ந்து படுத்திருந்தார் லஷ்மண் மேத்தா. மார்கழி மாதமாக இருந்ததால் சூரியனின் வெப்பத்தையும் மீறி சுகமான காற்று சுவாசப் பைகளை நிரப்பிக் கொண்டிருந்தது.
""ஐயா, கொஞ்சம் இளநீர் குடிங்க'' தோட்டக்காரன் வேலன் பவ்வியமாக நீட்டிய காயை லஷ்மண்மேத்தா வாங்கிக் கொண்டார். சில காலமாகவே வேலன் பப்பாளி மரத்தின் இளம் தண்டுகளை ஸ்டிரா போல அளவாக வெட்டி இளநீர் காய்க்குள் போட்டுக் கொடுக்கிறான்.
இளநீர் கற்கண்டுபோல இனித்தது. தஞ்சாவூரில் ஆயிரம் தென்னை மரங்களைக் கொண்ட தோப்பு, இருநூறு ஏக்கர் நெல் விளையும் வயற்காடுகள், மாந்தோப்பு, வாழைத்தோப்பு என்று பொன்விளையும் பூமி, மேத்தாவுக்கு இருக்கிறது. இது எல்லாம் பரம்பரைச் சொத்து இல்லை. தனிமனிதனாக, கையில் வெறும் நூறு ரூபாயோடு மனைவி மாயாவை அழைத்துக்கொண்டு ரயிலில் கும்பகோணம் வந்து இறங்கியது நேற்று நடந்ததுபோல இருக்கிறது.
ஆனால் வருடங்கள் ஐம்பது, கடந்துவிட்டன. மேத்தாவின் இரண்டு ஆண்பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் பிறந்தது கும்பகோணத்தில் என்பதில் அவருக்கு மிகவும் பெருமைதான். பிழைக்க வந்தவரை, வாழ வைத்தது அல்லாமல் பெருஞ்செல்வந்தர் ஆக்கியது கும்பகோணமாக இருந்ததுதான் இதற்கு காரணம்!
கோபால்தாஸ் வைர நகைக்கடை கும்பகோணத்தில் 1929}இல் நிறுவப்பட்டு இன்றளவும் பிரபலமாக இயங்கி வருகிறது. அங்கே மாதம் இருநூறு ரூபாய் சம்பளத்துக்கு 1960}இல் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக தொழிலைக் கற்று, சிறிய அளவில் நகைகளைச் செய்து கொடுக்கும் தொழிலை லஷ்மண் மேத்தா ஆரம்பித்தார்.
தொழிலில் நேர்மை, பானை பிடித்தவளின் ராசி, இன்று "லஷ்மண் மேத்தா வைர மாளிகை' என்ற பெயரில் இரண்டு கடைகள் கும்பகோணத்தில் ஒன்று, தஞ்சாவூரில் ஒன்று என்று உயர்ந்து நிற்கின்றன. கும்பகோணம் கடையை பெரிய மகன் மோகன் மேத்தா பார்த்துக் கொள்ள, தஞ்சாவூரில் உள்ளதை இளையமகன் சுரேஷ் மேத்தா நடத்தி வருகிறார். இரண்டு பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஒருத்தி எலும்பு சிகிச்சை நிபுணருக்கு வாழ்க்கைப்பட்டு சென்னையில் வாழ, மற்றொருத்தி சிங்கப்பூரில், பெரிய கட்டட நிபுணரின் மனைவியாக வலம் வருகிறாள். பேரன், பேத்திகள் என்று நிறைவான வாழ்க்கை.
லஷ்மண் மேத்தாவுக்கு, இப்பொழுது எண்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. முன்போல் உடம்பில் தெம்பில்லை என்றாலும் கடைக்கு செல்வதை நிறுத்தவில்லை. வாரத்தில் முதல் மூன்று நாட்கள் கும்பகோணத்தில் இருக்கும் லஷ்மண் மேத்தா வைர மாளிகைக்கும் மீதி மூன்று நாட்களை தஞ்சாவூரில் இருக்கும் கடைக்கும் சென்று காலை பத்துமணி முதல் மாலை நான்கு மணிவரை இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை வீட்டுக்கு மனைவி மாயாவுடன் வந்து ஓய்வு எடுப்பது வழக்கம்.
ஆர்டர் கொடுத்த நகைகளை லஷ்மண் மேத்தாவின் ராசியான கைகளால் வாங்கவேண்டும் என்பதற்காகவே, வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். கல்யாணம், சீமந்தம், பிறந்தநாள், அறுபதாம் கல்யாணம் என்று எந்த விசேஷத்திற்கு நகைகளை செய்யக் கொடுத்திருந்தாலும், இங்கே வாடிக்கையாக நகைகளைச் செய்பவர்கள் ""பெரியவர் வரட்டும், அவர் வந்து கொடுக்கட்டும்'' என்பார்கள்.
தொழிலில் அவ்வளவு சுத்தம். லஷ்மண் மேத்தாவிடம் இருபதாயிரம் தொடங்கி, பல லட்சங்கள் ஏன் கோடிகளில் நகைகளை ஆர்டர் செய்பவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று பெருங்குடி மக்களும், தன் பெண்ணின் கல்யாணத்துக்கு ஒரு ஜோடி வைரக் கம்மலை செய்ய, தன் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தைக் கொண்டுவரும் நடுத்தர வர்க்கத்தினரும் வருகிறார்கள். சிறுபணமோ, பெரும்பணமோ வைரக்கற்களில் பேதம் இருக்காது.
கடந்த மூன்று நாட்களாக தன்னுடைய பண்ணைவீட்டுக்கு திடீர் என்று தனி ஆளாக வந்த லஷ்மண் மேத்தா, திரும்பிப் போகாமல், அன்ன ஆகாரம் இல்லாமல் படுக்கையில் முடங்கிக் கிடந்தார். தன்னோடுதானே பண்ணைவீட்டுக்கு போவார் ஏன் இப்படித் தனியாக போனார் என்று விளங்காத மாயா, இங்கே வந்ததும் கணவன் சாப்பிட மறுப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்.
எவ்வளவோ, கேட்டுப் பார்த்தாகிவிட்டது, மனிதர் வாய் திறக்காமல் ஊமையாக இருந்தார். செய்தி அறிந்து பெரிய மகன் மோகன் மேத்தா ஓடோடி வந்தான், காரணத்தை அறிய முயன்று தோற்றான். இளையவனும் வந்தான், அப்பாவின் நிலைமை அவனைக் கலங்க வைத்தது.
நள்ளிரவு, லஷ்மண் மேத்தாவின் உண்ணாநோன்பின் நான்காவது நாள் அது. மொத்த குடும்பமும் கவலையோடு, செய்யும் வகை அறியாது தவித்து நின்றது. மருத்துவர்களுக்கு சொல்லக்கூடாது, தன் உடம்பில் வலுக்கட்டாயமாக உணவை செலுத்த முயலக்கூடாது. அப்படித் தவறினால் தன்னை உயிரோடு பார்க்கமுடியாது என்று லஷ்மண் மேத்தா சொல்லிவிட்டார்.
"டக் டக்' என்று லஷ்மண் மேத்தாவின் அறைக்கதவு தட்டப்பட்டது. மாயா சென்று கதவைத் திறக்க அங்கே அவர்களுடைய இளையமகன் சுரேஷ் கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தான். மாயா, எதையோ புரிந்து கொண்டாள். மகனை உள்ளே விட்டு கதவை சாத்தினாள்.
ஓடிச்சென்று அரை மயக்கத்திலிருந்த தந்தையின் கால்களைப் பற்றிக்கொண்டு கதறினான் இளைய மகன் சுரேஷ்.
""அப்பா சீனாவில் தொழில் செய்யும் என்னுடைய பால்ய நண்பன், அங்கே வைரத்தை ஒத்த போலி கற்களைத் தயாரிக்கிறார்கள், நிஜ வைரத்திற்கும் அதற்கும் வேறுபாட்டைக் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு தத்ரூபமாக அவைகள் இருக்கின்றன என்று சில போலி வைரக்கற்களைக் காட்டினான். நான் பதில் ஏதும் சொல்லாமல் அவனை அனுப்பிவிட்டேன். அந்த விஷயத்தை நம் மேனேஜர் உங்களிடம் கூறியிருக்கிறார். நான் அவற்றைப் பற்றிக் கேட்டேன், பார்த்தேன் என்பதை அறிந்தவுடன் இப்படி உங்களை வருத்திக் கொள்கிறீர்களே! அதை நான் உபயோகித்து இருந்தால், அப்பப்பா நினைக்கவே உடம்பு நடுங்குகின்றதே, உங்கள் மீது சத்தியம் என் வாழ்நாளில் உங்கள் மகனாகவே, உங்கள் தொழில் தர்மத்தைக் கடைப் பிடித்து வாழ்வேன். எந்த விதமான ஈனச் செய்கைகளையும் செய்ய மாட்டேன். தயவு செய்து எழுந்திருங்கள், சாப்பிடுங்கள்'' என்று மகன் சுரேஷ் அழுது மன்னிப்புக் கேட்க, அணையும் தீபம்போலப் படுத்திருந்த லஷ்மண் மேத்தா மெதுவாக எழுந்து அமர்கிறார், அவர் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருந்த நம்பிக்கையும் நிமிர்ந்தது. அவர் தன் தொழிலின் மீது காட்டிய பக்தி, அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தது, வான் அளவு அவரை உயர்த்தி, தெய்வத்தன்மை உடையவராக ஆக்கிவிட்டது.
(குறள் எண்: 50)
பொருள் :கைப்பிடித்த மனைவியுடன், சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகப் போற்றப்படுவான்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...