தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வீராங்கனையான பல் மருத்துவர்!

மைசூரில் வசித்து வரும் பல் மருத்துவர் உஷா ஹெக்டே, பெங்களூரில் இருந்தபோது, விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 12:30 am

பூா்ணிமா

மைசூரில் வசித்து வரும் பல் மருத்துவர் உஷா ஹெக்டே, பெங்களூரில் இருந்தபோது, விடுமுறை நாள்களில் நண்பர்களுடன் நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்வதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். நாளடைவில் விளையாட்டுத் துறையில் ஆர்வம் ஏற்படவே, 1987-ஆம் ஆண்டு பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் முறைப்படி சைக்கிள், நீச்சல், ஓட்டப் பந்தயம் மற்றும் மலையேறுதல் போன்றவைகளை கற்று தேர்ந்ததோடு ஓட்டப் பந்தயம், டுயத்லான் ( சைக்கிள் மற்றும் ஓட்டப் பந்தயம்) டிரயத்லான் ( நீந்துதல், சைக்கிள் மற்றும் ஓட்டப்பந்தயம்) போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

டுயத்லான் என்ற போட்டி ஒரே சமயத்தில் குறிப்பிட்ட தூரம் சைக்கிளில் சென்று, பின்னர் தொடர்ந்து ஆற்றிலோ, கடலிலோ, குறிப்பிட்ட தூரம் நீந்தி பந்தயத்தை முடிக்க வேண்டும். இது ஒரே சமயத்தில் முடிக்க வேண்டிய போட்டியாகும். அதே போல் டிரயத்லான் போட்டியிலும் முதலில் குறிப்பிட்ட தூரம் நதியிலோ, கடலிலோ நீந்திய பின்னர், குறிப்பிட்ட தூரம் சைக்கிளில் கடந்து, தொடர்ந்து இறுதியாக குறிப்பிட்ட தொலைவு ஓடி பந்தயத்தை முடிக்க வேண்டும். இது ஒரு நாள் முழுக்க நடக்கும் தொடர் போட்டியாகும்.

இந்த போட்டியை அயர்ன் மேன் டிரயத்லான் என்று குறிப்பிடுவார்கள். கடந்த பத்தாண்டுகளாக பத்தாயிரம் மற்றும் அரை மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற உஷா ஹெக்டே, ஒருமுறை 42.2. கி.மீ. தொலைவு முழு மாரத்தான் பந்தயத்திலும் ஓடி சாதனை படைத்துள்ளார். இது தவிர மைசூர் - ஊட்டி, மைசூர்- கோவா, போன்ற நீண்ட தூர சைக்கிள் பயணங்களும் புரிந்துள்ளார்.

அயர்ன் மேன் டிரயத்லான் மிகவும் கடினமான போட்டியாகும். இதில் கலந்து கொள்பவர்கள் முறையாக பயிற்சிப் பெற்றால் ஒழிய போட்டியில் பங்கேற்க முடியாது. ஏனெனில் நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மூன்றுமே ஒரே நாளில் ஒரே தொடர் போட்டியாக நடத்தப்படுவதாகும். இதில் பங்கேற்பவர்களுக்கு உடல் தகுதியும், திடமான மனதும் அவசியமாகும். அதுமட்டுமல்ல, இதில் பயிற்சிப் பெற அதிகம் செலவாகும். மிகவும் ஆபத்தான போட்டி என்பதால் ஸ்பான்சர் செய்பவர்கள் மிகவும் குறைவு. சொந்த பணத்தை செலவழித்தே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மேல்நாடுகளில் பிரபலமான இந்த டிரயத்லான் போட்டியில் ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமாக கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் இந்த போட்டியில் பயிற்சிப் பெற்று கலந்து கொள்பவர்கள் இப்போது அதிகரித்துள்ளனர்.

டிசம்பர் 1, 2019- ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியா, பஸ்ஸல்டனில் நடந்த இந்த கடினமான ஒருநாள் டிரயத்லான் போட்டியில் கலந்து கொண்ட 49 வயதாகும் உஷா ஹெக்டே, முதலில் 3.85 கி.மீ.தூரம் கடலில் நீந்தி பின்னர் 180 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்து அடுத்து 42.2. கி.மீ.தூரம் ஓடி 17 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய இந்த பந்தயத்தை 14 மணி 30 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைக்க வயது ஒரு தடையல்ல என்று கூறும் உஷா ஹெக்டேவுக்கு இரண்டு குழந்தைகள். கணவர் அஜஸ் ஹெக்டே ஆர்தோ பெடிஸ்ட் மருத்துவர். விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி படிக்கும்போதும் முதல் மாணவியாக விளங்கியதோடு, மூன்று தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

ஒரே சமயத்தில் மருத்துவ தொழிலிலும், விளையாட்டுத் துறையிலும் எப்படி கவனம் செலுத்த முடிகிறது ? உங்கள் சாதனைகள் மூலம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

""மருத்துவம், விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து 4.30 மணிக்கு பயிற்சியை தொடங்குவேன். ஒவ்வொரு விளையாட்டிற்கும் தேவையான அடிப்படையில் என்னுடைய உடல் தகுதியை பராமரிக்க வாரத்தில் 7 முதல் 16 மணி நேரம் செலவழிக்கிறேன். மூன்று வேளை சரிசமமான அளவில் உணவு. இடையில் இருமுறை லைட் ஸ்நாக்ஸ், சிறு வயதிலிருந்தே என்ணெய் மற்றும் மசாலா உணவுகள் எனக்குப் பிடிக்காது. அதிக நேரம் டிவி பார்ப்பதோ, வெளியில் செல்வதோ இல்லை.

இது போன்ற போட்டிகளில் பங்கேற்க விரும்பும் இளம் விளையாட்டு வீரர்கள் முதலில் வெவ்வேறு விதமான இந்த மூன்று விளையாட்டுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதோடு முறையாக பயிற்சி பெற வேண்டும். நல்ல விளையாட்டு வீரர்களாக உடல் வலிமையும், மன திடமும் வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் பெண்கள் தங்கள் உடல் நலனையும் கவனிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பங்களை, என்ன சாதிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை ஒதுக்கி விடாதீர்கள். உங்கள் திறமையை சக்தியை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்'' என்கிறார் உஷா ஹெக்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.