மக்கள் மனதில் பதிய வேண்டும்!

வெற்றி யாருக்கு எப்போது வாய்க்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு மிக சிறு வயதிலேயே வெற்றியை சுவைப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விடுகிறது
மக்கள் மனதில் பதிய வேண்டும்!
Updated on
3 min read

வெற்றி யாருக்கு எப்போது வாய்க்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு மிக சிறு வயதிலேயே வெற்றியை சுவைப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விடுகிறது. பெற்ற வெற்றி கவர்ச்சியாகத் தெரிந்தாலும் அதற்குப் பின் அயராத உழைப்பு இருப்பது பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. அபராஜிதா இளம் விளம்பரப் படத் தயாரிப்பாளர். அவரது பயணம் எளிதானதில்லை. இரவு பகல் பாராத உழைப்பு இந்தத் துறையில் அவருக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுத் தந்திருக்கிறது. பல துறைகளில் செயல்படுபவர். தனது பயணத்தின் பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சிறுவயதிலேயே வெற்றியாளராக உங்களுக்கு உதவியது என்று எதனை சொல்வீர்கள்?

பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததால் பல விஷயங்கள் இயல்பாகவே எனக்குக் கிடைத்து விட்டன என்று சொல்லுவேன். அப்பா ஓ.ஏ. ராவ், அருமையாக கிதார் வாசிப்பார். அம்மா சீதா பிரானிக்ஹீலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். நடனம் அம்மாவின் விருப்பம். ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடனம் பயின்று சென்னையின் பல சபாக்களில்  நான் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்த துணை நின்றிருக்கிறார்கள்.  தம்பியும் கிதார் வாசிப்பதில் சிறந்த ஆற்றல் கொண்டவன். குடும்பமே கலைக்கூடம் போல இருப்பதால் அதுவே எனது கலை சார்ந்த பயணத்தில் உறுதுணையாக நிற்கிறது.

விளம்பரப் படத் தயாரிப்பு துறைக்கு வந்தது எப்படி?

பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது நடனக் கலைஞராக வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.  பின்னர் மேற்படிப்புக்காக ஒளிபரப்பு செய்தி தொடர்பியல்( broadcasting communication)  படித்தேன். அப்போது பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. விஜய் டிவியின் நிகழ்ச்சி தயாரிப்பு ஒன்றில் முதலில் பயிற்சி, பின்னர் "சரவணன் மீனாட்சி' தொடரின் தயாரிப்பில் பயிற்சி.  தொடர்ந்து விளம்பரப் படத்தில் உள்ளிருப்பு பயிற்சி வகுப்புகள். எனக்கு அந்த சூழலும் வேலையும் பிடித்திருந்தன. அங்கு தான் என்னுடைய பயணம் நடனத்திலிருந்து விளம்பரப்படத் தயாரிப்பு நோக்கி திரும்பியது. 

உங்கள் வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்..

முதலில் உதவி இயக்குநராக பாபுஷங்கர் என்பவரிடம் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது நான் கற்றுக் கொண்டவை தான் என்னை இன்றைய நிலைக்கு உயர்த்தியிருக்கின்றன. நூறு விளம்பரங்களுக்கும் மேலாக உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். 

வேலைக்கு சேர்ந்ததும் முதல் வாய்ப்பு GRT நிறுவனத்திற்காக நயன்தாராவைக் கொண்டு எடுத்த விளம்பரம். உதய்ப்பூர் சென்று படப்பிடிப்பு. இது எனக்கு மிகுந்த நம்பிக்கை தந்தது.

கட்டுமானத்துறையில் அருண் எக்ஸல்லோ நிறுவனத்திற்காக மாதவன், அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம், கார்த்தி, சுஹாசினி மணிரத்னம், சிநேகா, பிரசன்னா என்று பலரோடு வேலை செய்யும் வாய்ப்பு, சானியா மிர்சா விளம்பரம் ஒன்றில் நடித்துக் கொடுத்தார். சென்னை சில்க்ஸ் விளம்பரம் கீர்த்தி சுரேஷ்உடன் பணியாற்ற வாய்ப்பாக இருந்தது.

ஓர் உதவி இயக்குநராக என்னுடைய கடைசி விளம்பரம் கோல்டுவின்னர். அதிலே தெலுங்கு முன்னணி கதாநாயகன் மகேஷ்பாபு மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஆகியோர் நடித்தனர்.

உங்கள் சொந்த நிறுவனம் பற்றி...

பாபுஷங்கரிடம்  நானும் ஜெரால்டு கிறிஸ்டோபர் என்பவரும் உதவி இயக்குநர்களாக இருந்தோம். ஜெரால்டு, 2016- இல் ஜெரால்டு பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். நான் 2017 -இல் பார்ட்னராக இணைந்தேன். இந்த மூன்று ஆண்டுகளில் 19 விளம்பரங்கள் செய்திருக்கிறோம். அபிராமபுரத்தில் எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கான விளம்பரப் படத்தை நாங்கள் தான் செய்திருக்கிறோம். பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து "செந்தூரப்பூவே' என்ற தொடருக்கான விளம்பரத்தையும் நாங்கள் தான் தயாரித்தோம். 

சென்னை சில்க்ஸ் தீபாவளி விளம்பரம், ஆசீர்வாத் நெய் விளம்பரம் ரேவதியயை வைத்து செய்தோம். இதுவரையிலான விளம்பரங்களில் எங்களுக்கு பெருமை சேர்த்தது சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்திற்காக செய்த விளம்பரம். டிஜிட்டல் தளத்தில் 23 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. இப்போது துல்கர் சல்மானை வைத்து விளம்பரம் செய்திருக்கிறோம்.  அதனை எங்கள் வளர்ச்சிக்கான அளவுகோல் என்று கூட சொல்லலாம்.

திரைப்படத் துறையிலும் உங்களுக்கு ஆர்வம் இருந்ததா?

திரைப்படத் துறைக்கென்று நான் என்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தபோது அதனை ஏற்றுக்கொண்டேன். ராஜீவ் மேனன் இயக்கத்தில் "சர்வம் தாள மயம்' என்ற இசையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் அவருக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.  

ஒழுக்கம், ஒழுங்குமுறை இவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். விளம்பரப் படங்கள் படப்பிடிப்பு ஒரு நாளில் முடிந்துவிடும் திரைப்படத்திற்கு 5 மாதங்கள் வரை தொடர்ந்து படப்பிடிப்பு வேலை செய்ய வேண்டும். இசை, நடனம் சார்ந்த அறிவு இந்த வேலையில் பயனுள்ளதாக இருந்தது.  ஒரே படம் தான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன் என்றாலும் அது ராஜீவ் மேனன் என்ற மிகப்பெரிய இயக்குநரோடு என்பதைப் பெருமையாகவே பார்க்கிறேன்.

வெப் சீரியல் தொடர்பான பணி வாய்ப்பு பற்றி...

பெண்கள் தொடர்பான தெலுங்கு வெப் சீரியல் ஒன்று பிரசன்னா, வரலஷ்மி சரத்குமார், ரோகினி போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர். அல்லு அர்ஜுன் குடும்பத்தினரின் ஆஹா வீடியோ நிறுவனத்திற்காக செய்தோம். அந்த வெப் சீரியலில் தயாரிப்பு நிர்வாகியாகப் பங்களிப்பு செய்திருக்கிறேன். சமீபத்தில் மனநிறைவு தந்த பணி இது.

விளம்பரப்படத் தயாரிப்புத் துறைக்குத் தேவையான தகுதிகள் என்னென்ன?

கற்பனை வளம், இரவு பகல் பாராமல் பணியாற்றுவதற்கான ஆர்வம், அழகியல் உணர்வு இந்த மூன்றும் அடிப்படைத் தேவைகள். விளம்பரம் சில விநாடிகளே திரையில் வந்தாலும் அது மக்கள் மனதில் பதிய வேண்டும். பின்புலம் தொடங்கி ஒவ்வொன்றிலும் தொடர்பும், கண்கவரும் அழகும் இருக்க வேண்டும். 

இது பெண்களுக்கு ஏற்ற துறை தானா?

100 சதவீதம் இது பெண்களுக்கு ஏற்ற துறை தான். பெண்களுக்கு நிகரான கற்பனைத்திறன் யாருக்கு உண்டு?  அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்யும் அனைத்துப் பெண்களுக்கும் இந்தத் துறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

நம்பிக்கையும் சுதந்திரமும் தரும் பெற்றோர் இருந்தால் போதும். எனக்கு அப்படியான பெற்றோர் இறை அருளால் அமைந்திருக்கிறார்கள். பெண்ணுக்கு அவளுடைய பணியும் தொழிலும் அவசியமானவை முதன்மையானவை என்று நம்பும் குடும்பம் தான் இது போன்ற துறைகளில் ஜெயிப்பதற்கு அவசியம்.

இன்றைய சூழ்நிலையில் தொழில் முனைவோராக பெண்களுக்கு எது அவசியம்?

எல்லாருக்கும் குடும்பம் இருக்கிறது. அதிலே பொறுப்புகள் இருக்கின்றன.   தொழில் செய்யுமிடத்தில் தொழில் மட்டுமே முதன்மை. ஆண், பெண், பெரியவர் சிறியவர் என்ற யோசனைகளைத் தாண்டி இதனை இவரைக் கொண்டு இப்படி செய்து முடிக்க வேண்டும் என்ற பார்வை மட்டுமே பொது வெளிக்கு வரும் போது இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com