பிரபலமாகிவரும் திருமண முகக்கவசங்கள்!

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தீநுண்மி தொற்றுநோய், மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. வாழ்வில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
பிரபலமாகிவரும் திருமண முகக்கவசங்கள்!
Published on
Updated on
2 min read

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தீநுண்மி தொற்றுநோய், மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. வாழ்வில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தனிநபர் தூய்மைக்கு முக்கியத்துவம் பெருகியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க மூலிகைகளுக்கு வீடுகளில் மவுசு கூடியுள்ளது. 

ஒருவகையில், பாட்டிவைத்தியத்தைப் பரிந்துரைக்காத நபர்களே இல்லை என்று கூறலாம். உடல்நலம் பேணலில் அதீத அக்கறை செலுத்த தொடங்கியிருக்கும் நாம், தனிநபர் இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி போன்ற புதிய பழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளோம். மழை பெய்தாலோ, வெயில் அடித்தாலோ வீட்டில் இருந்து புறப்படும்போது குடையை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. கடைகளுக்கு சென்றால் பை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. அப்படி, நமது அன்றாட வாழ்க்கைமுறையில் வீட்டில் இருந்து வெளியே சென்றால், தவறாமல் எடுத்துச் செல்லும் பொருளாக முகக் கவசம் மாறிவிட்டது. 

எதை மறந்தாலும், முகக்கவசங்களை மறக்கக் கூடாது என்ற நிலை உருவாகிவிட்டது. கண்ணாடியை பார்க்கும்போது, முகக்கவசங்களில் நமது முகங்கள் புதைந்துள்ளது புலப்படுகிறது. இது எத்தனை காலத்திற்கு? 

கரோனா தீநுண்மி பெருந்தொற்று, வந்தது தெரிந்துவிட்டது; எப்போது போகும் என்பதை எவராலும் ஆரூடம் சொல்ல முடியவில்லை. முகக்கவசங்கள் தான் நமது முகங்களாக மாறிவிட்டநிலை. 

கரோனா தீநுண்மியோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமே கூறிவிட்டது. கரோனாவுக்காக அலுவலகங்களையோ, வியாபாரத்தையோ, தொழில் நடவடிக்கைகளையோ நிறுத்து விட முடியாத சூழ்நிலை.    காதுகுத்து, மஞ்சள்நீராட்டுவிழா, திருமணங்கள், வளைகாப்பு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தீபாவளி, பொங்கல் போன்ற குதூகலத் தருணங்களை தவறவிடக் கூடாது என்பதும் முக்கியமாகிறது. அப்படிப்பட்ட சூழலில் உறவுகளோடு மகிழ்ச்சி சூழ பூத்திருக்கும்போது  புத்தாடைகளை அணிந்து கொள்வது வழக்கம். 

விழாக்களின்போது, முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதில் ஆண்களை விட பெண்கள் அதீத ஆர்வம் காட்டுவது இயல்பு. ஆனால், முகக்கவசங்கள் முகங்களை மூடிக் கொண்டிருக்கும்போது, அழகை என்ன செய்வது? அந்த கேள்வியில் தோன்றியதுதான் அழகியலோடுகூடிய முகக்கவசங்கள் என்ற சிந்தனை. மணப்பெண்கள் தாங்கள் அணியும் திருமண பட்டுச்சேலைக்கு நிகராக அழகு நிறைந்த முகக்கவசங்கள் தயாரிக்கும் வேலையில் அழகியல் ஆடை நிபுணர்கள் கவனம் செலுத்தினார்கள். 


அதன்விளைவாக, ஆடைக்கேற்ற அழகிய வண்ணங்கள், வடிவமைப்புகளில் முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இது திருமணங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ரவிக்கை அல்லது சேலையின் வண்ணத்தில் முகக்கவசங்கள் தயாரித்து தரப்படுகின்றன. அந்த முகக்கவசங்களை எழிலூட்டும் வேலைப்பாடுகளும் செய்யப்படுகின்றன. அழகான படிகங்கள், பின்னற்பட்டிழைகள், முத்துகள், பூத் தையல் போன்றவை முகக்கவசங்களுக்குப் பொலிவூட்டுகின்றன. 

வகைவகையான வண்ணங்கள், வண்ண அச்சுகள், கலையோவியங்கள், வடிவமைப்புகளால் பட்டு, பருத்தி, கைத்தறி ஆடைகளில் முகக்கவசங்கள் செய்யப்படுகின்றன. ஜரிகைப் பூ வேலை செய்த பட்டுத்துணிகளிலும் முகக்
கவசங்கள் தயாராகின்றன. 

சுவாசிப்பதற்கு எவ்வித தொந்தரவும் இல்லாத, அழகுக்கும் குறைவில்லாத முகக்கவசங்களை வாங்கி அணிவதில் பெண்கள், குறிப்பாக இளம்பெண்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். திருமணங்களில் மணமகள், மணமகன் அணியும் ஆடைகளுக்கு ஏற்ற வண்ணத்தில் முகக்கவசங்கள் உருவாக்கப்படுகின்றன. தோல்நிறம், அணியும் ஆடை நிறத்திற்கும் பொருந்தும் முகக்கவசங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை சலவை செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். 

பெங்களூருவில் அழகு வேலைபாடுகளுக்கு தகுந்தபடி திருமண முகக்கவசங்கள் ரூ.3500 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. வீடுகளில் நடக்கும் விழாக்களுக்காக தயாரிக்கப்படும் குறைந்த வேலைபாடுகள் கொண்ட முகக்கவசங்கள் ரூ.600 முதல் ரூ.2500 வரையிலான விலையில் கிடைக்கின்றன. சுவாசிப்போம், அழகாக சுவாசிப்போம் என்பதுதான் நவீன மங்கைகளின் தாரக மந்திரமாக இருப்பதால், புது எண்ணத்தில் உருவான வண்ணவண்ண முகக்கவசங்கள் முகங்களில் பூத்துக் குலுங்குகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com