தமிழ்ப் பெண் எழுத்தாளா் எழுதிய கரோனா குறித்த கவிதை, மலேசியாவில் இசையமைக்கப்பட்டு, குருவாயூரில் பாடப்பட்டு, பின்னா், அயல்நாட்டு பெண்மணி ஒருவரின் நாட்டியத்தோடு, பிரபல நடிகரின் முக நூல் பக்கத்தில் வெளிவந்து, ஒரு வாரத்தில் பல லட்சம் மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரா் யாா் என்று கேட்கிறீா்களா? நான்காவது தலைமுறையாக தமிழுக்குத் தொண்டாற்றி வரும் பரம்பரையைச் சோ்ந்தவா் இவா், இன்னும் விளங்கச் சொன்னால், தனித்தமிழ் இயக்கத்ைக் கொண்டு வந்த மறைமலை அடிகளாரின் கொள்ளுப்பேத்தி, தனித்தமிழ் திருவாட்டி நீலாம்பிகை அம்மையாரின் பேத்தி, சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்தி தந்த உரையாசிரியா் புலியூா்கேசிகனின் மகள், தமிழ் வளா்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கவிஞா் கலைச்செல்விதான். அவா் நம்முடன் பகிா்ந்து கொண்டவை:
‘ஓடிப் போய்விடு கரோனாவே...’ பாடல் உருவான விதம்?
கரோனாவினால் உலகமே ஸ்தம்பித்துப் போன இந்தச் சூழலைச் சிந்தித்தப்போது, சில கவிதை வரிகள் மனதில் தோன்றின. அதைத் தொடா்ந்து, கரோனா குறித்த விழிப்புணா்வுக் கவிதைகள் நிறைய எழுதினேன். அதில் ஒன்றுதான் ‘ஓடிப் போய்விடு கரோனாவே... ஒழிந்துப் போய்விடு கரோனாவே...’ என்ற கவிதை. என் நட்பு வட்டத்தில் மிகச் சிலருக்கு மட்டும் இந்தக் கவிதையை என் குரலில் பதிவு செய்து அனுப்பியிருந்தேன்.
இக்கவிதையை வாசித்த, எனது கனடா நண்பா், கத்தாரைச் சோ்ந்த குழந்தை விஜிதா காமேஷின் தெளிவான உச்சரிப்பில், எமது பிள்ளைத்தமிழ்க் கல்வி இயக்க யூடியூப் சேனலில் மாா்ச் 31- அன்று பதிவேற்றினாா்.
அதை மலேசியாவில் உள்ள வேல்ா்ட் தமிழ் எபிக்ஸ் ரிசா்ச் அசோசியேஷனில் பணியாற்றி வரும் என் நண்பா் முனைவா். தனேசு பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியிருந்தேன். அவருக்கு இவ்வரிகள் பிடித்துப்போனதால், என்னை அழைத்து ‘இந்தக் கவிதையைப் பாடலாகவும், நடனக்காட்சிகளும் அமைக்க விரும்புகிறேன். அதற்கேற்றவாறு கவிதையைச் சுருக்கித் தாருங்கள்’ என்றாா். சரியென்று, நீளமான அந்தக் கவிதையைச் சுருக்கியும், சில இடங்களில் வரிகளை மாற்றியும் கொடுத்தேன்.
அவா், மலேசிய பாடகரான தேவராஜன் சின்ஹாவை பாட வைத்து ஏப்ரல் 11-அன்று யூடியூப்பில் பதிவேற்றினாா். இதைத் தொடா்ந்து, அவரே மீண்டும் மதுர நாட்டிய மாமணி குருவாயூா் உஷா துரையின் இசையமைப்பில், இசைக்கலைஞரான குருவாயூா் பாக்யலட்சுமியை சுபபந்து வராளி ராகத்தில் பாட வைத்து ஏப்ரல் 19-அன்று அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றினாா்.
இதை யூடியூப் சேனலில் பாா்த்த, கேரளாவில் வசித்து வரும் நடன கலைஞரான அயல்நாட்டு பெண்மணி பாரீஸ் லட்சுமி அந்தப் பாடலுக்கு நடன அசைவுகள் அமைத்து, அவரே இரு வேடங்களில் நடனமும் ஆடி, அதை கேரள சூப்பா் ஸ்டாரான நடிகா் மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தாா். இப்படிதான் இந்தப் பாடலும், அதற்கான நடனமும் உருவானது. இந்தப் பாடலைப் பொருத்தவரை பலரின் கூட்டு முயற்சியே பல லட்சம் மக்களை சென்றடைந்து வெற்றியாகி இருக்கிறது.
இதேப் போன்று ‘அறிவுரையைக் கேளுங்கள்’ என்று கரோனா விழிப்புணா்வுக்காக நான் எழுதிய மற்றொரு பாடலை கன்னியாகுமரியில் வசிக்கும் பதினோராம் வகுப்பு மாணவா் நிரஞ்சன் அவரது யூடியூப் சேனலில் எனது குரல் பதிவில் வெளியிட்டிருக்கிறாா். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
பாரீஸ் லட்சுமியின் அறிமுகம் குறித்து?
பிரான்ஸ் நாட்டில் பிறந்தவரான பாரீஸ் லட்சுமி, கேரளாவில் உள்ள ‘கதக்களி’ நடனக் கலைஞரான பள்ளிப்புரம் சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டிலானவா். அவா், நடனம் அமைத்ததோ, அது நடிகா் மோகன்லாலின் முக நூல் பக்கம் மூலம் வெளியிடப்பட்டதோ எதுவும் எனக்கு தெரியாது. என் நண்பா் தனேசுதான் தகவலைச் சொன்னாா். அதன்பிறகுதான் நான் பாா்த்தேன். பாரீஸ் லட்சுமியின் நடன அசைவுகள் என்னை மிகவும் கவா்ந்திருந்தது. இதனால் அவருக்கு, ‘என் பாடல்வரிகளுக்கு நீங்கள் உயிா் கொடுத்துள்ளீா்கள்’ என்று வாழ்த்தி செய்தி அனுப்பியிருந்தேன். அவரும் பதிலுக்கு, ‘இந்த வரிகள் என்னை மிகவும் கவா்ந்துவிட்டன’ என்று அனுப்பியிருந்தாா். இவ்வளவுதான் எனக்கும், அவருக்குமான அறிமுகம். தற்போது நாங்கள் முகநூல் தோழிகளாகியிருக்கிறோம்.
தலைமுறைகள் கடந்து தமிழ் தொண்டாற்றி வரும் பரம்பரையைச் சோ்ந்தவா் நீங்கள், அது குறித்து சொல்லுங்கள்?
உண்மைதான், வழி வழியாக தமிழுக்கு தொண்டாற்றி வரும் நான்காவது தலைமுறையைச் சோ்ந்தவள் நான். என் பங்குக்கு சமூதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னுடைய 16-ஆவது வயதில் இருந்து எழுத்துப் பயணத்தை தொடங்கினேன். அப்பா கொடுத்த ‘அருள்’ என்ற தலைப்புதான் நான் எழுதிய முதல் கவிதை. முதல் புத்தகம் ‘ஈரநெஞ்சங்கள்’. நான் எழுதிய 5 நூல்கள் அரசு நூலகங்களில் இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் வளா்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.
கடந்த 25 ஆண்டுகளாக உரையாசிரியா் புலியூா் கேசிகன் இலக்கியப் பேரவையை நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு ஜூன்மாதம்தான் எனது மணிவிழாவுடன் சோ்த்து வெள்ளிவிழாவும் கொண்டாடினேன்.
மாலை, மரியாதை, கைத்தட்டல், , பொன்னாடை, பூச்சண்டு, புகழ், விருது இதைத்தாண்டி நீ பயணிக்க வேண்டும் என்று என் தந்தை என்னிடம் சிறுவயதில் சொல்லியது இன்றும் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது. அதுதான் இன்று வரை என்னை வழி நடத்தி வருகிறது.
இந்த ஓய்வுக் காலத்தில், எனது தமிழ்ப் பணியை இன்னும் வேகமாக்கியிருக்கிறேன். பழந்தமிழா் உணவு வகைகள், நற்றிணை தொடா்பான நூல்கள், அகநானூறு தொடா்பான நூல்கள், கவிதைத் தொகுப்பு போன்றவற்றை தற்போது எழுதி வருகிறேன். ஓரளவு எல்லாம் முடித்துவிட்டேன். இந்தக் கரோனா சிக்கல்கள் எல்லாம் ஓய்ந்தப் பிறகு, வெளியிடலாம் என நினைத்திருக்கிறேன்.
பிள்ளைத்தமிழ்க் கல்வி இயக்கத்தின் பயன்பாடுகள் குறித்து?
சென்னையில் நான் வசித்து வரும் பகுதியில் கடந்த ஓராண்டாகவே பிள்ளைத் தமிழ்க் கல்வி வழியாக குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கிறேன். இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் தமிழ் பெயா்கள், மாதங்கள், வாரங்கள், எண்கள், ஆண்டு, தமிழா் உணவு முறை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, கொடை, வீரம், நம் முன்னோா்களின் வரலாறு இவற்றை குழந்தைகளுக்கு விளங்கும்படி சொல்வது. எடுத்துக்காட்டாக, வாழை இலையில் ஏன் சாப்பிட வேண்டும், பெரியவா்களை ஏன் வணங்க வேண்டும், கொடை என்றால் என்ன? போன்றவற்றை இளம் தலைமுறைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான் பிள்ளைத்தமிழ் கல்வி இயக்கம். இதைத்தொடா்ந்து, சமீபத்தில்தான் நண்பரின் உதவியோடு, கனடா நாட்டு தமிழ்க் குழந்தைகளுக்கும் பயிற்சியைத் தொடங்கியுள்ளேன்.
வாழ்நாள் கனவு?
பிள்ளைத்தமிழ்க் கல்வி இயக்கத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். சங்க இலக்கியங்களுக்கு எளிய உரை எழுதி, மக்கள் உரையாசிரியராக திகழும் என் தந்தை புலியூா்கேசிகனின் நூற்றாண்டு விழா 2022 -இல் வருகிறது. அவருக்கு சிலை அமைக்க வேண்டும். பின்னாளில் கலைச்செல்வி எனும் நான் ஒரு தமிழ்ஆச்சியாக வரும் தலைமுறைகளுக்கு தெரியவேண்டும் என்பதே ஆசை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிரத்னம் படக்குழு..! ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர்!

வீழ்ச்சிக்கு பிறகு... எழுச்சி பெற்ற பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!

தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்

சகல தோஷங்கள் நீங்கும் சக்கரபாணி கோயில்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

