கரோனாவிற்கு  பிறகு... எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

கரோனாத் தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி, குணமடைந்தபின்பு  மருத்துவமனையிலிருந்து வெளிவந்துவிட்டாலும், ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு சோர்வுடன் இருக்கிறார்கள்.
கரோனாவிற்கு  பிறகு... எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
Published on
Updated on
3 min read


கரோனாத் தொற்று ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி, குணமடைந்தபின்பு  மருத்துவமனையிலிருந்து வெளிவந்துவிட்டாலும், ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு சோர்வுடன் இருக்கிறார்கள். மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் நேரடிக் கண்காணிப்பில் மருந்து மற்றும் உணவுகளை எடுத்துக்கொண்ட  அவர்களுக்கு வீடு திரும்பியதும், உணவு முறையில் குழப்பம் ஏற்படும் நிலை பரவலாகக் காணப்படுகிறது. அவர்களின் உடல்நிலை சாதாரணமாக அல்லது ஆரோக்கியநிலைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் பத்து நாள்களாவது தேவைப்படும் நிலையில், அதற்குத் தகுந்தவாறு உணவு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். 

உணவுமுறை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், தொற்றிலிருந்து குணமடைந்தவரின் உடல்நிலை எவ்வாறிருக்கும் அல்லது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.  

உடலின் ஆற்றலின் இயக்கத்தின் அளவு ஏறக்குறைய 13- 15 சதவீதம் அதிகரித்து இருக்கும் நிலையில், உடலின் கலோரியின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே, முதலில் நோயிலிருந்து மீண்டவருக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்க வேண்டும். தேவையான ஆற்றல், சத்துகள் யாவும் ஏற்கெனவே உடலில் இருந்த புரதம் மற்றும் கொழுப்புத் திசுக்களிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதால், அவற்றின்  அளவும் குறைந்திருக்கும்.

உடலிலுள்ள புரதத்தின் வளர்சிதை மாற்றத்தின் அளவும் அதிகமாகியிருப்பதால், அதன் இறுதிப் பொருட்களான யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றை சுத்தப்படுத்தும் வேலை சிறுநீரகத்திடம் வருவதால், அதன் செயல்பாடும் அதிகரிக்கிறது. அங்கிருக்கும் நச்சுக்களின் அளவும் கூடுகிறது. வியர்வை மற்றும் சுவாசத்தின் வழியாக உடலிலுள்ள தண்ணீர் அதிகம் வெளியேற்றப்பட்டிருப்பதாலும், காய்ச்சலின் காரணமாக உருவாகியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற வேண்டி யிருப்பதாலும்,  நீரின் தேவை அதிகரிக்கும்.  

தொடர்ச்சியான இருமல் இருந்திருப்பின், குணமாகிய பின்பும், லேசான தொண்டைப்புண், தொண்டைவலி, கரகரப்பு போன்றவை இருக்கலாம். மேலும், எடுத்துக்கொண்ட மருந்துகளாலும் நெஞ்செரிச்சல், வயிற்றெரிச்சல், வயிறு உப்புசம் போன்றவை இருப்பதற்கு வாய்ப்புண்டு. நோய் இருந்த சமயத்தில், வயிற்றுப்போக்கும், வாந்தியும் கூட இருப்பதால், செரிமான மண்டலம் தளர்வடைந்து, மிகவும் மென்மையாகவும், அதிக செயல்திறனைக் கொடுக்க இயலாத நிலையிலும் இருக்கும் என்பதால், மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு அரை திட நிலை உணவுகளைக் கொடுப்பது அவசியம். வீட்டிற்கு வந்துவிட்டவுடன், முழு திட உணவு என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. 

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் உடலில்; மேற்கூறிய உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், வீட்டிற்குத் திரும்பியதும்,  கீழ்வருமாறு உணவுமுறையை மாற்றியமைத்துக்கொண்டால், மீண்டும் ஆரோக்கியமான உடலைப் பெறலாம். 

உடலிலுள்ள நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு, காலை மற்றும் மதிய உணவிற்கு இடையிடையே, குளுக்கோஸ் (நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவும்) கஞ்சித் தண்ணீர், இளநீர், மோர், பார்லித் தண்ணீர், பால், நீர்த்த மில்க் ஷேக், காய்கள்,   கீரை,  பருப்பு, சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை ஏதேனும் ஒன்றை  வேகவைத்து, மிளகு சீரகம் சேர்த்த நீராகவே குடிக்கலாம். 

பழங்களை கடித்து, நன்றாக மென்றுத் திண்பது இருந்தாலும், நீர் கலந்த பழச்சாறாகவும் பருகலாம். ஏறக்குறைய 300 கலோரிகள் அளவு ஆற்றல் தரக்கூடிய இதுபோன்ற திரவ உணவுகள்  தேவையற்ற வாயுக்களை வெளியேற்றி, தாகத்தைத் தணித்து,  உடல் செல்களின் நீரின் அளவை சரியான அளவில் வைப்பதுடன், அவற்றின் இயக்கத்திற்குத் தேவையான மிக முக்கிய அயனிகளான சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்றவைகளையும்  பிற  தாது உப்புக்களையும் தரவல்லவை. 

இடையிடையே வெந்நீர் பருகுவதும் நல்லது. காலை உணவாக ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம், புட்டு, தோசை போன்ற அரிசி வகை உணவுகளையும், கோதுமை தோசை, உப்புமா, மசித்த காய்கள் சேர்த்த கிச்சடி போன்றவற்றையும், கேழ்வரகு, கம்பு, வரகு, குதிரைவாலி உள்ளடக்கிய சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட, அதிகம் நீர், சிறிது சீரகம் அல்லது ஓமம் சேர்த்த கஞ்சி உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். இவை உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், எளிதில் செரிமானத்தையும் கொடுப்பவை. 

மதிய உணவாக, குழைத்த பருப்பு சாதம், ரசம் சாதம், நன்றாகக் கடைந்த கீரை சாதம், மஞ்சள், சீரகம் சேர்த்த மோர் சாதம், நீர்த்த சாம்பார், தூதுவளை, கொத்துமல்லி, ஓமவல்லி, முடக்கற்றான், சித்தரத்தை,  சுக்கு,  மிளகு, திப்பிலி, இஞ்சி, பூண்டு என்று மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்து செய்த ரசம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரு வாரங்களுக்கு, தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவிலும் இவற்றையே பின்பற்றி, உறங்கச் செல்லும் முன், மஞ்சள், ஏலக்காய், சுக்கு கலந்த பால் அருந்தலாம். 

உடலை மறுசீரமைத்துக் கொடுக்கும் பிரதான வேலையை புரதம் செய்வதால், புரதச்சத்தைக் கொடுக்கும் முட்டை, மீன், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அவையும், செரிமானக் கோளாறு ஏற்படுத்தாமல்  இருக்க வேண்டும். 

அதிக மசாலா, காரம், தேங்காய் சேர்த்து குழம்பாகத் தயாரிக்காமல், சூப்பாக வைத்துக் குடிக்கலாம். முட்டையை அவித்து மிளகுத் தூள் சேர்த்து உண்பதும், இறைச்சியை வேகவைத்து,  சற்றே அரைத்து செய்யும் (ம்ண்ய்ஸ்ரீங்க் ம்ங்ஹற்) என்று கூறப்படும் மென்மையான தன்மைக்கு மாற்றி எடுத்துக் கொள்வதால், புரதமும் கிடைப்பதுடன், செரிமானமும் எளிதில் நடைபெறும். சிறு மீன்களை, மஞ்சள், மிளகு, புதினா, கொத்துமல்லி சேர்த்து எளிமையான முறையில் ரசம் மற்றும் சூப் தயாரித்துக் குடிக்கலாம். 

மாலையில், கொண்டைக் கடலை, பச்சை பருப்பு, காராமணி, தட்டைப் பயறு, பட்டாணி போன்றவற்றில்  ஏதேனும் ஒன்றை நன்றாக வேகவைத்து சுண்டலாக சேர்த்துக் கொள்ளலாம்.  இவ்வாறு எடுத்துக்கொள்ளும் புரதம், நோய்த் தொற்றினால் பாதிப்படைந்த சுவாச மண்டல உறுப்புகளை மறுசீரமைக்க உதவிபுரிவதுடன், இழந்த உடல் எடையை கூட்டுவதற்கும் வழிசெய்யும். 

வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள், நோய் எதிர்ப்பாற்றலை மட்டுமே தருபவையல்ல. நோயிலிருந்து மீண்டவர்களின் உடலுக்குத் தேவையான புத்துணர்வை அளித்து, உள்ளுறுப்புகள் மீண்டும் உறுதியுடன் செயலாற்றும் திறனையும் கொடுக்கவல்லவை. ஆகவே, இந்த சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கள், மற்றும்  கீரைகள்; அனைத்தும் தினசரி உணவில் சாலட், பழச்சாறு, ஸ்மூத்தி, சூப் என்று ஏதேனும் ஒரு வகையில் சேர வேண்டும். ஆற்றலைக் கூட்டுவதற்கு பேரீட்சை, உலர் திராட்சை போன்ற பழங்களையும், இழந்த கொழுப்புச் சத்தின் அளவை சரிசெய்வதற்கு, பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற கொட்டையுணவுகளை தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு 50 கிராம் அளவில் அப்படியே மென்று திண்ணலாம். அல்லது பொடி செய்தும்  பாலில் கலந்து பருகலாம். 

எளிதில் செரிமானம் ஆக இயலாத உணவுகளான எண்ணெயில் பொரித்தவை, பாக்கெட் உணவுகள், ரெடிமேட் பழச்சாறுகள், ஊறுகாய் வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், கீரை பொரியல், வாழைப்பூ, வாழைத்தண்டு, சப்பாத்தி, அதிக நார்ச்சத்து உள்ள முழுதானிய உணவுகள், குழம்பு வகைகள் போன்றவற்றை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கழித்தோ அல்லது திட உணவுகளால் எவ்வித செரிமானச் சிக்கலும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்போ, சேர்த்துக்கொள்ளலாம். 

மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு போன்றவைகள் இருந்து, செயற்கை சுவாசம் வரை சென்று தீவிர சிகிச்சையிலிருந்து குணமடைந்து வந்தவர்கள், உணவுடன், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

விரைவாக உடல் ஆரோக்கிய நிலைக்கு வர வேண்டும் என்று, எப்போதும் பழச்சாறுகளை அதிக அளவில் குடிப்பதும், உப்பு, சர்க்கரை, அதிகம் சேர்த்த உணவை எடுத்துக் கொண்டால் உடனடியாக சோர்வு நீங்கும் என்று நினைத்தபடியெல்லாம் சாப்பிடுவது தவறு. 

மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், அவர்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொண்டே, அவர்களின் நோய்க்கும் உடல் தன்மைக்கும் பரிந்துரைக்கப்பட்ட  உணவுகளையேத் தொடர வேண்டும். 
ஆனால், காய்ச்சலிலிருந்து மீண்டவர்களுக்கான உடல் ஆற்றல், சத்துக்கள் எவ்விதத்திலும் குறைபாடில்லாமல் கிடைக்கும் அளவிற்கு, உணவின் தன்மை, பக்குவம், சமைக்கும் முறை, சுவை போன்றவற்றை மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும். உடல்வலி, கை கால் வலி, முதுகுவலி, தலைவலி போன்றவை சில நேரங்களில் தொடரலாம். அவ்வாறிருக்கும் நிலையில், சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொண்டு, நன்றாக ஓய்வெடுக்கவும். ஏழிலிருந்து எட்டு மணி நேரங்கள் ஆழ்ந்த தூக்கம் இருந்தால், சோர்வு நீங்கி, உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.  

இராஜசேகர்
உதவி பேராசிரியர், மனையியல் துறை, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com