புலனாய்வு மங்கை!

பெண்மை என்ற சொல்லை கேட்டவுடனும், சொல்லும் போது முதலில் நம் நினைவில் வருவது அந்த வார்த்தையில் புதைந்திருக்கும் "மரியாதை'தான்.
புலனாய்வு மங்கை!


பெண்மை என்ற சொல்லை கேட்டவுடனும், சொல்லும் போது முதலில் நம் நினைவில் வருவது அந்த வார்த்தையில் புதைந்திருக்கும் "மரியாதை'தான். அதையும் தாண்டி மன்னர் காலம் தொட்டு தற்போது வரை பெண்கள் வீரத்தில் மட்டுமில்லை விவேகத்திலும் சிறந்து விளங்கி வருவதை நாம் பாடப் புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் படித்திருக்கிறோம். ஆம். காவல்துறை பணியில் பெண்கள் பல வீர தீர செயல்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் சரகத்தில் அபிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் கு.ஜான்ஸிராணி சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசின் விருதைப் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவர் கூறுகிறார்...

""சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து பள்ளிப் படிப்பை தனியார் பள்ளியிலும் கல்லூரி படிப்பை விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் வணிகவியல்துறையிலும் பட்டப்படிப்பு பயின்றேன். என்னுடன் பிறந்த 7 பேரில் நான் கடைகுட்டி. 2007-இல் திருமணம் நடந்தது. எனது கணவரும் காவல்துறையில்தான் பணியாற்றுகிறார். எனது குடும்பமே ஒரு போலீஸ் குடும்பம்தான்.

எனது அப்பா, அக்கா என இருவரும் காவல் ஆய்வாளர் பணியில் இருந்தவர்கள். அவர்களைப் பார்த்து எனக்கும் காவல்துறையில் சேர ஆர்வம் ஏற்பட்டது. 2004 -இல் சார்பு ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்று, தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து 4 ஆண்டுகள் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தேன்.

அதன் பின்னர் 2008 -ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்து, அபிராமம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியை தொடர்ந்தேன். அதே ஆண்டு அபிராமம் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், துரிதமாக செயல்பட்டு, புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்று தந்தேன்.

கடந்த ஆக.12 -ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு சிறந்த புலணாய்வுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில் எனது பெயர் இடம் பெற்றிருப்பது நான் வேலை பார்க்கும் மாவட்டத்திற்கும், பிறந்த மாவட்டத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

மேலும், வரும் காலங்களில் எனது இரண்டு மகன்களையும் அவர்கள் விருப்பப்பட்டால் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றி மக்களுக்கு உதவி செய்ய ஊக்குவிப்பேன். காவல்துறையில் விருதுகளையோ, பலன்களையோ எதிர்பாராமல் அவரவர் கடமையை நேர்மையாகவும், கண்ணியத்துடனும் செய்தால் பொதுமக்களிடம் கிடைக்கும் நன்மதிப்பே மிக பெரிய விருதுக்கு சமமாகும்.

காவல்துறையில் கடைசி வரை நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நடு நிலைமையுடன் பணியாற்றி மன நிறைவு கொள்வதே எனது லட்சியமாகும்'' என்றார்.

கட்டுரை, படம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com