

அரசுகள் பொதுமுடக்கத்தை தளர்த்தியுள்ள நிலையில் நோய்த் தொற்று அக்டோபர் - நவம்பரில் இன்னும் அதிகமாகும் என்ற எச்சரிக்கைகள் பீதியை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், நோய் தாக்காத வகையில் நம்மை தற்காத்துக் கொள்ள என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என ஊட்டச்சத்து ஆலோசகர், ல.பானுப்பிரியா மணிகண்டன் (ஓமலூர்) சொல்லும் ஆலோசனைகள் இதோ:
""எந்தவொரு சமூக மயமாக்கலையும் கடுமையாகக் குறைப்பதன் மூலம், மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் திடீர் மற்றும் தீவிரமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் கரோனா சூழலால் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றும் உணவின் மீதான விழிப்புணர்வு வரவேற்கத்தக்கது. பொதுவாக, புதிய உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் நிகழ்வதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும். ஆனால் இந்த சூழலில் மாற்றத்தை எளிதில் எதிர்கொள்வது கடினமே, ஆயினும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்பதால் மாற்றம் எளிதாக நிகழ்ந்துள்ளது.
அடிப்படை சுகாதார நடைமுறைகள் மட்டுமின்றி கொவைட்-19 போன்ற தொற்று நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், சிகிச்சைக்கும், ஊட்டச்சத்தான உணவு மற்றும் நெறியான வாழ்க்கை முறை மாற்றமும் அத்தியாவசியமாகிறது.
இயல்பு நிலைக்கு மாறான தடைகளான வீட்டிலிருந்தபடியே பணி செய்தல், உடற்பயிற்சிக் கூடங்கள் மூடல், மளிகைக் கடை மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு நேரக் கட்டுப்பாடு இருந்தமையால் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடும் அதிகரித்தது.
மேலும் தனிமைப்படுத்துதல் மற்றும் கொவைட் -19 பற்றி விஷயங்களை தொடர்ந்து கேட்பதும் அல்லது படிப்பதும் மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதன் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தால் அதிகப்படியான உணவை உட்கொள்ளுதல், பிடித்த உணவுக்காக ஏங்குதல் காரணமாக எளிய கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
இரண்டாவதாக, இந்த பொது முடக்கம் காரணமாக மக்களில் ஒரு சாரர் ஆரோக்கியம் மற்றும் நெறியான வாழ்க்கை முறையை தொடங்கியுள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டிருந்ததால் வீட்டில் சமைத்த உணவையே உட்கொள்கின்றனர். மேலும் பேக்கரி தின்பண்டங்கள், கார்பனேற்றப்பட்ட சர்க்கரை பானங்கள், வேகவைத்த உணவு போன்றவைகளை உட்கொள்வது குறைந்துள்ளது என்பதும் உண்மைதான். இவை மனித ஆரோக்கியத்திற்கு சாதகமானதாகும். முன்பு எப்போதாவது மட்டுமே உடற்பயிற்சி செய்தவர்கள், இப்போது அதை வீட்டில் செய்ய அதிக நேரம் கிடைத்ததும். மக்கள் மாடித் தோட்டம் அமைப்பதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை இயற்கைமுறையில் கொள்முதல் செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் அவசியமாக உள்ளன. புரோட்டீன் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நுண்ணூட்டச்சத்துகளின் மருத்துவநிலை குறைபாடுகள் கூட ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம்.
சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட அனைவரும் நம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிவுறுத்திய உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் அவசியம். உதாரணமாக, சுத்தமான, பாதுகாப்பான உணவுகளை உட்கொள்ளுதலும், அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த முழு தானியங்கள், கீரைகள், கிழங்கு, முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் பயிறு வகைகள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும்.
நல்ல தரமான புரதசத்து நிறைத்த உணவுகளாகிய பால், முட்டை, மீன் , இறைச்சி, பருப்பு வகைகள், வைட்டமின், தாது மற்றும் நார் சத்துகள் நிறைந்த காய்கறிகள், பழங்களை நமது தினசரி உணவில் சேர்த்து கொள்ளுதல் அத்தியாவசியமானதாகும்.இவைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் நுண்ணூட்டக் குறைபாட்டினால் ஏற்படும் சத்துக் குறைவு நோய்கள் மற்றும் நெடுநாள் நோய்களை தவிர்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
நுண்ணூட்டச் சத்துகளான வைட்டமின் ஏ, பி ,டி, ஈ, சி, துத்தநாகம், செலினியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ப்ரீபயாடிக் மற்றும் புரோபயாடிக்குகள் அவசிய மாகின்றன.
உதாரணமாக, மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், கேரட், பப்பாளி, இனிப்பு உருளைக்கிழங்கு, காளான்கள், சூரியகாந்தி விதை, ஆளி விதைகள், பாதாம், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பெரிய நெல்லி, அன்னாசி, பூசணி விதைகள் மற்றும் முழு தானிய பொருள்களை அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சரிவிகித உணவின் ஒரு பகுதியாக, மருத்துவ குணம் நிறைந்த பாரம்பரிய மசாலாப் பொருள்களை சரியான அளவில் தினசரி உணவில் சேர்த்துகொள்ளுதல் அவசியமாகிறது. உதாரணமாக, இஞ்சி (1- 2 சிறுதுண்டு), பூண்டு (2 கிராம்), துளசி (5 இலைகள்), கருஞ்சீரகம் (2 கிராம்), சோம்பு (0.5 கிராம்) மற்றும் மஞ்சள்தூள் (4 சிட்டிகைகள்).
மருத்துவரின் ஆலோசனையின்றி அளவுகளற்ற உணவு சப்ளிமெண்ட்ஸ் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தை தாமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிக உடல் எடையுள்ளவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த 12 வார காலத்திற்குள் குறைந்தது 5% உடல் எடையைக் குறைக்க வேண்டும்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது பிற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்களது வழக்கமான மருந்துகளுடன், போதுமான உடல் செயல்பாடுகளும், ஆரோக்கியமான உணவு முறையும், மேலும் மன அழுத்தமில்லாமல் வைத்து கொள்ள யோகா மற்றும் தியானம் முதலிய பயிற்சிகளை செய்தல் நலம் செய்யும்.
எனவே, இதுபோன்ற தடுப்பு மருந்து கண்டறியாத நோய்த்தொற்று சூழலில் ஊட்டச்சத்தான உணவு கட்டமைப்பை மேற்கொள்வதின் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தியை மேன்மை செய்து நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியமானதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.