15-நிமிட நகரம்..!

"டைம் இதழ்' அறிவித்துள்ள, 2020-ஆம் ஆண்டின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார் அன்னி ஹிடல்கோ. இரண்டாவது முறையாக பாரிஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
15-நிமிட நகரம்..!

"டைம் இதழ்' அறிவித்துள்ள, 2020-ஆம் ஆண்டின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார் அன்னி ஹிடல்கோ. இரண்டாவது முறையாக பாரிஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
மேயராக 2014-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர் அப்பதவியினை வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பினைப் பெற்றார். சோசலிசக் கட்சியின் உறுப்பினராக இவர், 2001முதல் 2014 வரை துணை மேயராகப் பணியாற்றியுள்ளார். மேயராக முதல் முறை பணியாற்றிய காலத்தில் சார்லி ஹெப்டோ பத்திரிகை தலைமையகத்திலும் ஹைப்பர் ஹேச்சர் சூப்பர் மார்க்கட்டிலும் தீவிரவாதத் தாக்குதல், 131 பேர் பலியான தற்கொலைப்படைத் தாக்குதல், இயற்கைப் பேரிடர்களான பெருவெள்ளம் மற்றும் வெப்ப அலை, மஞ்சள் சட்டைப் போராட்டம், ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு, அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் வருகை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டார். இதனால் "பாரிஸ் மேயராக இருப்பது கடுங்காற்றில் கட்டுமரத்தை ஓட்டுவதற்கு ஒப்பானது' என்றார்.
இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட காலகட்டமான பிப்ரவரி 2020-இல், பாரிஸ் நகரில் “15-நிமிட நகரம்” என்ற திட்டத்தை முன்வைத்தார். கடை, பூங்கா, சிற்றுண்டி விடுதி, விளையாட்டு மைதானம், ஆரோக்கிய மையம், பள்ளி, பணியாற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சிறிது நேரத்தில் நடந்தோ, சைக்கிளில் பயணித்தோ சென்று அடையலாம். கால் மணி நேரம் என்றழைக்கப்படுகின்ற அந்த வசதியானது பாரிஸ் நகரில் உள்ளோர் வீட்டுக்கு அருகிலேயே அனைத்தையும் பெறும் வாய்ப்பினைத் தரும்.
"இதன் மூலமாக மாசு, மன அழுத்தம் குறைகிறது. இதனால் அங்கு வசிப்போரின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. மேலும், பாரிஸ் மற்ற நகரங்களைப் போலல்ல.. அது ஒரு சுதந்திரமான, சுறுசுறுப்பான எப்போதும் இயங்குகின்ற நகரம் ஆகும். கடந்த காலத்தை மறக்காமல் புதிய வரலாற்றை உருவாக்கும் தகுதி அந்நகருக்கு உண்டு, என்றார் அன்னி ஹிடல்கோ.
அன்னியின் , "15-நிமிட நகரம்' திட்டத்திற்கான பின்னணியில் முக்கியமான பங்கினை வகித்தவர், பாரிஸில் உள்ள சோர்போனைச் சேர்ந்த பேராசிரியரும் அறிவியலாளருமான கார்லஸ் மொரீனோ, 15 நிமிட நகரம் குறித்து அவர் கூறுவது என்ன?
"'வாழும் இடங்களுக்கு அருகிலேயே பணியிடங்களும், கடைகளும் அமையும் நிலையில் மக்களுக்கு போதிய நேரம் கிடைப்பதோடு, அவர்கள் நிம்மதியாக வாழவும் வழி வகை செய்யும். "பொலிவுறு நகர வாழ்வு' என்ற தன்னுடைய திட்டம் மேயரின் தேர்தல் களத்தில் ஒரு முக்கியமான கூறாக அமைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
இது தொடர்பாக மேயர் என்னை சந்திக்க அழைத்து தன் ஆர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியபோது, தேர்தல் முகாமில் இது ஒரு சிறுபங்காக இருக்கின்றபோதிலும், அதற்கான முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்.
"அக்கம்பக்கம் வெறும் கட்டடங்கள் மட்டுமே இருக்கக்கூடாது. சமூக உறவுகள் பேணப்படுவதோடு, உணர்வுகள் பரிமாறப்படுகின்ற இடமாக இருக்கவேண்டும்' என்று 1961-இல் செவ்வியல் நூலான அமெரிக்க மாநகரங்களின் "இறப்பும் வாழ்வும்' என்ற நூலின் ஆசிரியர் ஜான் ஜேக்ப் என்பவரால் இத்திட்டத்தினை வடிவமைக்க தூண்டப்பட்டேன்.
தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு, குறிப்பாக வாழ்விடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு, அதிக நேரம் செலவழிப்பதைக் காணமுடிகிறது. பாரிஸ் மட்டுமன்றி ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் பெற்றோர் தம் பிள்ளைகளை தம் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்து விடுகிறது. நகர்ப்புற இரைச்சல்கள், வாகன ஒலி, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் அன்னி இத்திட்டதை அறிமுகம் செய்துள்ளார்.
வாகன நிறுத்தத்திற்கான 60,000 இடங்களை அகற்றிவிட்டு அங்கு பசுமைசார் இடங்களையும் விளையாட்டு மைதானங்களை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். முன்னதாக அந்நகரில் உள்ள செய்ன் நகரையொட்டியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாகன இயக்கத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அன்னியின் இத்திட்டங்களைப் பார்த்துவிட்டு, ஆஸ்திரேலியா, மெல்போர்னும் "20-நிமிட நகரம்' என்ற திட்ட சோதனை முயற்சியில் களம் இறங்கியுள்ளது. இத்தாலி, வெனிஸ் அருகேயுள்ள லாசரெட்டோ பகுதியில் 15-நிமிடம் நகரம் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அன்னி ஹிடல்கோவின் சைக்கிளுக்கான, பாதசாரிகளுக்கான முக்கியத்துவம் சுற்றுச்சூழலுக்கான ஆதரவு உலகின் பிற நகரங்களிலும் பரவுவதை இதன்மூலம் அறியமுடிகிறது'' என்றார் மொரீனோ.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com