2020 நோபல் பரிசை வசப்படுத்திய சாதனை மகளிர்!

2020 நோபல் பரிசை வசப்படுத்திய சாதனை மகளிர்!

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல்,  வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது நாம்அறிந்ததே. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில், 2020 -ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள "நார்வேஜியன் நோபல் கமிட்டி'யும், ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள "கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்'டில் உள்ள நோபல் பரிசுக் குழுவும் சமீபத்தில் அறிவித்தன. அதில், இந்த ஆண்டு இலக்கியம், வேதியியல், இயற்பியல் துறைகளைச் சேர்ந்த நான்கு பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

லூயிஸ் க்ளுக் 1943-ஆம் ஆண்டில் நியூயார்க்கில் பிறந்தவர். எழுத்துப் பணி போக யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 1968-ஆம் ஆண்டில் இவர் எழுதிய முதல் தொகுப்பான "ஃபர்ஸ்ட் பான்' நல்ல வரவேற்பைப் பெற்று அமெரிக்க இலக்கியத் துறையில் லூயிஸிற்கு முக்கிய இடத்தைப் பெற்று தந்தது.

இவர் எழுதி 1985-ஆம் ஆண்டில் வெளியான "தி டிரையம்ப் ஆப் அக்கிலீஸ்' மற்றும் "தி வைல்ட் ஐரிஸ்' (1992) தொகுப்பிற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. இதுபோக அவரது "அவெர்னோ' (2006), "ஃபெய்த்ஃபுல் அண்ட் விர்ச்சுவஸ் நைட்' (2014) ஆகிய தொகுப்புகளுக்கு நோபல் தேர்வுக் குழு
புகழாரம் சூட்டியுள்ளது.

வேதியியல் துறையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டூட்னா, ஜெர்மனியைச் சேர்ந்த இமானுவல் சார்பென்டியர் ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிபர் டூட்னா கடந்த 1964-ஆம் ஆண்டு வாஷிங்டனில் பிறந்தவர். பாஸ்டனில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தில் 1989-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தற்போது பெர்க்லேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இமானுவல் சார்பென்டர், கடந்த 1968-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஜூவி சர் ஓர்கேவில் பிறந்தார். பாரீஸில் உள்ள பாஸ்டியர் பல்கலைக்கழகத்தில் 1995-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தற்போது, பெர்லின் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங் பிரிவின் பேதோஜென்ஸ் அறிவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவ்விருவரும் இணைந்து மரபணுத் தொழில்நுட்பத்தில் "சிஏஎஸ்9' எனும் மரபணு மாற்றக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பயன்படுத்தி விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் டிஎன்ஏக்களை மாற்ற முடியும்.

லைஃப் சயின்ஸ் பிரிவில் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகப்பெரிய புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

புற்றுநோய்க்குப் புதிய மருத்துவத்தையும், மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும், நீண்டகாலமாக தீர்வு இல்லாத நோய்களையும் தீர்க்க உதவும்.
இதுகுறித்து வேதியியல் நோபல் பரிசுக் குழுவின் தலைவர் கிளாஸ் கஸ்டாப்ஸன் கூறுகையில், ""வழக்கமாக செல்களில் இருக்கும் ஜீன்களை மாற்றி அமைக்கும் ஆய்வு நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் சாத்தியமில்லாமல்கூட போகலாம். ஆனால், இமானுவல் சார்பென்டியர், ஜெனிபர் டூட்னா கண்டுபிடித்த சிஏஎஸ் 9 ஜெனிடிக் சிஸர் எனும் கருவி மூலம் சில வாரங்களில் மரபணுவில் மாற்றம் செய்ய முடியும்.
இவர்கள் கண்டுபிடித்த கருவி, அடிப்படை அறிவியலில் மட்டும் புரட்சி ஏற்படுத்தாமல், புதிய மருத்துவ சிகிச்சையிலும் மிகப்பெரிய மாற்றத்துக்கு தலைமை ஏற்றுச் செல்லும்'' என்று கூறியுள்ளார்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு முன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளாக் ஹோல் எனப்படும் பிரபஞ்சத்தின் கருந்துளைகள் குறித்து திறம்பட ஆய்வு நடத்தியதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் மண்டலத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுப்பிடித்ததற்காக ஜெர்மனியைச் சேர்ந்த ரீன்ஹார்ட் கென்செல்லுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண் விஞ்ஞானியான ஆண்ட்ரியா கெஸ்க்கு 55 வயதாகிறது. இவர் கலிபோர்னியா-லாஸ்ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் துறை பேராசிரியர் ஆவார். இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெறும் நான்காவது பெண் இவராவார்.
இவருக்கு முன்பு 1903- இல் போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி கியூரி, 1963-இல் போலந்து நாட்டைச் சேர்ந்த மரியா கோப்பர்ட் மேயர், 2018 -இல் கனடா நாட்டைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்ட் ஆகிய மூவரும் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com