சமையல் சமையல்!

குதிரைவாலி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து.
சமையல் சமையல்!


சிறுதானிய ஸ்பெஷல் சமையல்..


குதிரைவா− கிச்சடி
தேவையானவை:
குதிரைவாலி அரிசி - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
கடுகு, பெருங்காயத்தூள்,
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு
கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு
நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் மற்றும்
பச்சைப் பட்டாணி (சேர்த்து) - அரை கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவை சேர்த்துக் கிளறவும். இதனுடன் உப்பு சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குதிரைவாலி அரிசியை சேர்த்து வேகும்வரை கிளறவும். நன்கு வெந்த பின் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

சிறுதானிய சத்துமாவு

தேவையானவை:

மக்காச்சோளம் - கால் கிலோ
கோதுமை, கம்பு, வெள்ளை சோளம்,
கேழ்வரகு, கறுப்பு கொண்டைக்கடலை,
அவல், சிவப்பரிசி, தினை - தலா 100 கிராம்
முந்திரி, கறுப்பு எள், ஜவ்வரிசி - தலா 50 கிராம்
ஏலக்காய் - 5

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து எடுத்து சூடு ஆறியபின் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். தேவையானபோது இந்த மாவில் கஞ்சி செய்து, பால் சேர்த்துப் பரிமாறலாம். கஞ்சியுடன் பழ வகைகளை சேர்த்தும் தரலாம். இந்தக் கஞ்சி உடலை உறுதியாக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

வரகு புளியோதரை

தேவையானவை:

வரகரிசி - ஒரு கிண்ணம்
மல்லி (தனியா), எள் - தலா ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வேர்க்கடலை - 5 தேக்கரண்டி
கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு,
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு
பொடித்த வெல்லம் - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - கால் கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வரகரிசியை 10 நிமிடம் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி..

மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால், புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

ராகி முறுக்கு


தேவையானவை:

கேழ்வரகு மாவு - ஒரு கிண்ணம்
அரிசி மாவு - அரை கிண்ணம்
கடலை மாவு - கால் கிண்ணம்
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
எள், சீரகம் - தலா 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: அகலமான பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். 6 தேக்கரண்டி எண்ணெய்யைத் தனியே சுடவைத்து மாவுக் கலவையில் ஊற்றிக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் எண்ணெய்யைக் காயவைக்கவும். முறுக்கு குழலில் "ஸ்டார்' வடிவ துளையிட்ட அச்சை போடவும். பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாகப் பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சிறுதானிய இடியாப்பம்


தேவையானவை:

சிறுதானிய சத்துமாவு - ஒரு கிண்ணம்
(சத்துமாவு தயாரிக்கும் முறை மேலே கொடுக்கப் பட்டுள்ளது)
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
சர்க்கரை - தேவைக்கேற்ப
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை: சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு, அதனுடன் எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். மேலே தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

சிறுதானிய டோக்ளா


தேவையானவை:

கேழ்வரகு மாவு - ஒரு கிண்ணம்
ரவையாக உடைத்த கம்பு, தினை,
சோளம் (சேர்த்து) - ஒரு கிண்ணம்
தயிர் - 2 கிண்ணம்
இஞ்சித் துருவல் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கேரட் துருவல் - 4 தேக்கரண்டி
கடுகு, சீரகம், கடலைப்பருப்பு,
உளுந்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரில் கேழ்வரகு மாவு, கம்பு - தினை - சோள ரவை சேர்த்து ஊறவைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறவும். இதை சிறுதானிய மாவு - ரவை கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு, கேரட் துருவலையும் சேர்த்துக் கலந்து, குழிவான தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com