சுவை தரும் சங்க கால தமிழர் சமையல்!

ஈரோட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியரும்,  சமையல் கலை வல்லுநருமான ப்ரியா பாஸ்கர் சங்க கால இலக்கியங்களை ஆராய்ந்து  தற்கால பெண்களுக்கு ஏற்றவாறு "சங்கால கால தமிழர் சமையல்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
சுவை தரும் சங்க கால தமிழர் சமையல்!

ஈரோட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியரும், சமையல் கலை வல்லுநருமான ப்ரியா பாஸ்கர் சங்க கால இலக்கியங்களை ஆராய்ந்து தற்கால பெண்களுக்கு ஏற்றவாறு "சங்கால கால தமிழர் சமையல்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் பண்டைய தமிழர்கள் சமைத்து சுவைத்த சமையலை பற்றி விவரித்துள்ளார். தற்போது "ஆண்களுக்கான ஆரோக்கியம்' பற்றிய புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இது பற்றி அவரிடம் பேசினோம்:

சங்க கால இலக்கியங்களில் சமையலை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன காரணம்?

கல்லூரி பேராசிரியையான எனக்கு சமையல் மீது ஆர்வம் அதிகம். தற்கால பெண்களுக்கு சமையலில் ஏதாவது புது விஷயங்களை வித்தியாசமாக சொல்ல வேண்டும். அது அவர்களின் வாழ்க்கை தேவைக்கும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய போது தான் சங்க கால இலக்கியங்களை பற்றி கேள்விப்பட்டேன். உடனே கணிசமான தொகையை செலவு செய்து அனைத்து சங்க கால இலக்கிய புத்தகங்களை விலைக்கு வாங்கி படிக்க ஆரம்பித்தேன். இப்படியாக இரண்டு ஆண்டுகால முயற்சிக்கு பின் உருவானது தான் இந்த சங்ககால தமிழர் சமையல் பற்றிய புத்தகம்.

நாம் இன்று வாழும் நாகரீக வாழ்க்கை நமக்குத் தானாக அமையவில்லை. நம் பண்டைத் தமிழர்களிடமிருந்து வழிவழியாக வந்தது. பண்டைய காலத்துப் பெண்கள் தங்களை அழகுப்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தியதைச் சங்க காலப் பாடல்களில் காண முடிகிறது. அதே போல் நாம் உண்ணும் உணவு நம் பண்டையத் தமிழர்களிடம் இருந்து கற்றுகொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பண்டையத் தமிழர்கள் நல்ல முறையில் உணவை சமைத்து உண்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்களில் காண முடிகிறது.

எந்த இலக்கியங்கள் உங்களுக்கு உதவியது?

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் தமிழரின் உணவு முறைகளையும் உணவுக்குப் பயன்படுத்திய பொருள்களைப் பற்றியும் புத்தகத்தில் பாடலுடன்விரிவாக எழுதியுள்ளேன். எட்டுத்தொகையிலிருந்து 36 சைவ சமையல்குறிப்புகள், 14 அசைவ சமையல் குறிப்புகள், பத்துபாட்டிலிருந்து 33 சைவ சமையல் குறிப்புகள், 17 அசைவமும் சார்ந்த குறிப்புகள் எழுதியுள்ளேன். ஒவ்வொரு சமையல் ரெசிபியிலும் ஒவ்வொரு இலக்கியப் பாடலும் அதற்கான பொருளையும் கொடுத்திருக்கிறேன். இது நம்முடைய இலக்கியங்களின் சிறப்பை பறைசாற்றுகின்றன.

இலக்கியங்கள் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன?

செழுமையான சங்க காலத்தில்தங்கள் அருகாமையில் கிடைத்த பொருள்களை கொண்டு உணவு சமைத்து உண்டனர். பெரும்பாலும் பண்டமாற்று முறையின் மூலம் ஐவ்வகை நிலங்களில் வாழ்ந்த மக்கள்தங்களிடமிருந்த பொருள்களை வேறு நிலத்தினருக்கு விற்று அவர்களிடமிருந்து மாற பொருள்களை பெற்று வாழ்ந்துள்ளனர்.

""ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் போதையும் புனைக;
அன்னைவை பலவும் செய்க, என்னதூஉம்''

புலவர் வடமவண்ணக்கன் தாமோதரனாரால் பாடப்பெற்ற 172-ஆவது புறநானூற்றுப் பாடலில் 1- 4 வரிகளில் உள்ளது. பிட்டங்கொற்றனின் கொடையையும் இயல்பையும் மிகுத்து கூறிப்போற்றுகிறார்.

நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு காரணம் சொல்லப்பட்டுள்ளதா?

சங்க காலத்தில் கிடைத்த பொருள்கள் மிகவும் குறைவு. அவ்வாறு கிடைத்தவற்றைக் கொண்டு நம் முன்னோர்கள் உணவு தயார் செய்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். தினை, சாமை, கம்பு, கேழ்வரகு,குதிரைவாலி, சோளம், வரகை மிகுதியாக நம் முன்னோர்கள் சமையலில் சேர்த்து உண்டுள்ளனர். உண்ட உணவுக்கு ஏற்ற வேலையை ஆண்-பெண்கள் இருவரும் செய்துள்ளனர். அரிசியை விட சிறுதானியத்தை அதிகம் சமைத்துண்டனர். அனைத்து வகையான சிறுதானியங்களும் சங்ககாலத்தில் அதிகமாக விளைச்சல் செய்யப்பட்டன.

முக்கூடற்பள்ளு என்ற நூலில் 150 வகையான நெல்வகைகள் சங்க காலத்தில் இருந்துள்ளன என்று கூறப்பட்டு உள்ளது. ராசா அன்னம், செந்நெல் அரிசி, இயவை, ஐவனம், வரிசெஞ்சாலி, இறுங்கரிசி, வெண்ணெல் அரிசி, தோரை நெல், சாலி நெல், முடந்தை நெல், மூங்கிலரிசி, மலை நெல், வெதில் நெல், கருடசம்பா, கொழில் அரிசி போன்ற பல வகையான நெல் வகைகளை சமைத்துண்டுள்ளனர். எள்ளு, கொள்ளு, சுண்டல், பச்சைப் பயிறு, பாக்கு, மைசூர் பருப்பு, துவரம் பருப்பு, கோதுமை, சோளம், பேரீச்சம்பழம், மாதுளை, பார்லி, அரிசி போன்றவை ஹரப்பா நாகரீக காலத்தில் சமையல் பயன்பாட்டில் இருந்து உள்ளது. புளிப்புக்கு மாங்காய்ச்சாறு பயன்படுத்தப்பட்டது.

மேலும் நமது முன்னோர்கள் சீரகம், உளுந்து, கறிவேப்பிலை, வெல்லம், மிளகு, முருங்கை, பட்டை, பால், வரக்கொத்துமல்லி, கிராம்பு, அவரைப்பருப்பு, தேங்காய், தேன், இஞ்சி, கருப்பட்டி, புளி, ஏலக்காய், மஞ்சள், பெருங்காயம், வெந்தயம், பாதாம் பருப்பு, கடுகு இவைகளை அதிகம் பயன்படுத்தியதால் ஆரோக்கியமாக இருந்துள்ளனர்.

எந்த வகை உணவுகளை விரும்பி சாப்பிட்டனர்?

பண்டையத் தமிழர்கள் புளித்தஉணவைப் பெரிதும் விரும்பி சாப்பிட்டுள்ளனர். குறிப்பாக மாங்காய், புளித்ததயிர், மோர், புளி, நாள்பட்ட தேன் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர். அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அரிசியுடன் சேர்த்து சாதம் சமைத்தனர். சைவத்தை விட அசைவத்தை விரும்பி உண்டுள்ளனர். அசைவ உணவைப் பைந்தடி, ஊன், பைந்துணி எனப் பல பெயர்களால் குறிப்பிட்டுள்ளனர். விலங்குகளையும், பறவை வகைகளைத் தேர்ந்தெடுத்து வேட்டையாடி சமைத்துஉண்டுள்ளனர்.பருப்பு வகைகள், தேங்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டுள்ளனர். பூண்டு, தக்காளி, மிளகாய் போன்ற பொருள்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

உணவுக்குப் பின் வெற்றிலைப் பாக்கை கண்ணகி கோவலனுக்குக் கொடுத்ததாகச் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது. உணவு சாப்பிடும் முறையைத் தமிழர்களிடமிருந்து மேலை நாட்டினர் கற்றுக்கொண்டுள்ளனர். விருந்தினர்களுக்கு தங்கள் பகுதியில் கிடைத்த செங்கழுநீர்ப் பூவை வரவேற்கும் முகமாகத்தந்துள்ளனர் என்பதை புறநானூற்று 42: 15-16 வரியில் காண முடிகிறது.

கிராம்பு, ஏலக்காய், அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் நம் சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். அவர்கள் இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களையும் உண்ணத்தக்க பறவைகள், விலங்குகளைப் பக்குவமாகச் சமைத்து உண்டுள்ளனர். மேலும், காய்,கிழங்கு, கீரை, பருப்பு போன்றவற்றையும் உணவுப் பொருள்களாய் உண்டுள்ளனர்.

இன்றுள்ள பரபரப்பான உலகில் சங்க கால சமையல் எடுபடுமா?

விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக வீட்டில் இன்று பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர், இன்டக்சன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ், ஓவன், போன்றவை சங்க காலத்தில் இல்லை. பெண்கள் எந்த வித நோய்க்கும் ஆளாகாமல் இருந்தனர். வீட்டில் கோலமிடுவதில் இருந்து, துணி துவைப்பது, அம்மியில் சாந்துகளை அரைப்பது என அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். இன்று சிறுவயதிலேயே சொல்ல முடியாத நோய்களும் வருகின்றன. பருவயதுடைய பெண்களின் எடையும் அதிகமாகியுள்ளது. இதற்கு தீர்வு என்றால் நாம் பாரம்பரிய பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிப்பது தான். அது போன்று தான் சமையலும்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலத்தில் வாழ்ந்த மன்னர்கள், மக்கள் அனைவரும் சுவையான உணவைத் தயாரித்து உபசரித்து, பரிமாறியதைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. அது மட்டுமல்லாது உணவு பரிமாறும் முறையை தமிழர்கள் தான் முதலில் கண்டறிந்துள்ளனர். இனிப்பை முதலிலும், பிறகு சாதம், குழம்பு, ரசம் இறுதியாக தயிரைப் பரிமாறுவது தான் சரியான முறை என்பதை கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக உணவு பரிமாறும் முறையைப் பற்றிய செய்திகளை குறுந் தொகையில் காண முடிகிறது. அக்காலத்தில் மக்கள் போராடி வாழ்ந்தாலும் உணவு உபசரிப்பதில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்கி உள்ளனர். நாம் கரோனா போன்ற அனைத்து விதமான கொடிய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள இது போன்ற ஆரோக்கியமான சமையல் பெரிதும் உதவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com