பொய்யான தோற்றம்!
மனோன்மணியின் கர்ப்பப்பையின் விரிவுக்கும், சுருங்கலுக்கும் ஏற்ப அவள் உடம்பின் ஒவ்வொரு திசுக்களும், நரம்புகளும் பிரசவ வலியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன.


கதை சொல்லும் குறள் - 28
மனோன்மணியின் கர்ப்பப்பையின் விரிவுக்கும், சுருங்கலுக்கும் ஏற்ப அவள் உடம்பின் ஒவ்வொரு திசுக்களும், நரம்புகளும் பிரசவ வலியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன.
ஆனால் பாவம் கடந்த இரண்டு மணி நேரம் அவள் கத்திக் கதறியும் அவள் பிள்ளை வெளியே வராமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.
தன்னுடைய மிஞ்சியிருந்த சக்தியெல்லாவற்றையும் ஒன்றுத் திரட்டி, "அம்மா' என்று ஓங்கிக் குரல் கொடுத்து, கண்களில் கண்ணீர் வழிய, இதற்கு மேல் முடியாது என்று அவளுடைய கண்கள் நிலைக்குத்தி நின்ற அந்த தருணத்தில், "வீல் வீல்' என்று குழந்தையின் அழுகுரல் கேட்டது.
மனோன்மணியின் நிலைக்குத்தி நின்ற கண்கள் அந்தக் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அலைபாய்ந்து, வேதனையை வெளிப்படுத்திய கண்ணீர் நிலைமாறி இப்பொழுது ஆனந்தக் கண்ணீர் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அவள் தன் குழந்தையைப் பார்க்கத் துடித்தாள்.
"இந்தா மனோன்மணி, உன் குழந்தையைப் பாரு''.
நர்ஸ் ஒருத்தி, தன் முகத்தருகே நீட்டிய அந்தப் பச்சிளம் பாலகனைப் பார்த்த மனோன்மணி, அந்தச் சோர்விலும் புன்னகைத்தாள், தன் குழந்தையின் அழகில் தன்னை மறந்தாள்.
குழந்தையைப் பார்த்த அனைவரும், தவறாமல் உதிர்த்த வார்த்தை "குழந்தை ரொம்ப அழகு' என்பதாகவே இருந்தது.
செக்கச்செவேல் என்று, பறித்த ரோஜாவைப் போலப் பார்ப்பவர் மனதை மயக்கும் அழகுடன் இருந்த தங்கள் மகனுக்கு மனோன்மணியும் அவள் கணவன் சொக்கலிங்கமும் என்ன பெயர் வைப்பது என்று முடிவு செய்ய முடியாமல் தடுமாறி நீண்ட யோசனைக்குப் பிறகு அவனுக்குச் "சுந்தரம்' என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.
சுந்தரம் என்றால் அழகு, நிறம், நன்மை, சிவப்பு என்ற அர்த்தங்கள் உள்ளதாகத் தமிழ் அகராதி சொல்லியிருப்பதனால் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.
குலம் விளங்க வைத்த பிள்ளை, அதுவும் ஆண் பிள்ளை, கோடீஸ்வரன் சொக்கலிங்கத்தின் ஒரே பிள்ளை என்பதினால் சுந்தரம் ஒரு ராஜகுமாரனைப் போல வளர்க்கப்பட்டான். ஏனோ மனோன்மணிக்கு சுந்தரத்திற்குப் பிறகு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அதைப் பற்றி அந்தத் தம்பதியினர் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. சுந்தரம் ஒருவனே போதும் என்று அவனைப் பொத்திப் பொத்தி வளர்த்தனர்.
சுந்தரம் பிறந்த ராசி சொக்கலிங்கம் தொட்டது எல்லாம் சொக்கத் தங்கமாக மாறியது. தமிழ்நாட்டில், திருப்பூரில் வாழும் அவர், பெரிய அளவில் வடநாட்டிலிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்து, நூற்பு ஆலைகளுக்கு விநியோகிக்கும் தொழிலை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருந்தார்.
சுந்தரத்துக்குப் பத்து வயது ஆனபொழுது, "சுந்தரம் நூற்பு ஆலை' என்று தன் மகன் பெயரில் ஒரு ஆலையை ஆரம்பித்தார். இன்று அது ஆலமரமாக, கிளை விரித்து வளர்ந்து விட்டது. திருப்பூரில் சுந்தரம் நூற்பு ஆலை என்றால் ஐந்து வயது குழந்தைக் கூட வழிகாட்டும் என்று சொல்லுவார்கள்.
இருபத்து ஆறு வயது காளையாக, ஆண் அழகனாகச் சுந்தரம், தன்னுடைய தொழிற்சாலையில், நிர்வாக இயக்குநர் இருக்கையில் அமர்ந்திருக்கிறான். ஆடை வடிவமைப்பு, நெசவு சார்ந்த முதுகலை அறிவியல் பட்டம் பெற்று, இங்கிலாந்துக்குச் சென்று இந்தத் துறையில் மேலும் படித்து வந்திருக்கிறான்.
சுந்தரத்தின் அழகுக்கும், படிப்புக்கும், அந்தஸ்துக்கும் ஏற்ற வகையில் நல்ல வரனாக அமைய வேண்டுமே என்ற கவலை அவனுடைய பெற்றோருக்கு வந்தது. சுந்தரத்துக்குப் பெண் கொடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் கியூவில் நிற்கின்றனர் என்று கூடச் சொல்லாம்.
வாழ்க்கையில் எப்பொழுதும் தென்றல் காற்றே வீசிக் கொண்டிருக்குமா? குளியல் அறையில் கால் வழுக்கி விழுந்து மனோன்மணிக்கு இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. படுத்த படுக்கையாக மூன்று வாரங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வந்தது.
இங்கே தான் கெளரி அந்தக் குடும்பத்தாரோடு வாழ வருகிறாள். கெளரி வேறு யாரும் இல்லை; மனோன்மணியின் அண்ணன் மகள். சாதாரண கணக்கு வாத்தியாரின் மகள், ஆசிரியர் தொழிலின் மேல் அவளும் காதல் கொண்டு இப்பொழுது பி.எட்., அதாவது ஆசிரியர் பயிற்சிப் படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறாள். பரீட்சை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தவளை, மனோன்மணிக்கு உதவியாக இருப்பாள் என்று அழைத்து வந்திருந்தார்கள்.
கெளரி ஒன்றும் பேரழகி இல்லை, லட்சணமானவள், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவள். அவளுடைய அப்பா கந்தசாமி மானத்துடன் வாழ்பவர், தன் தங்கை பணக்காரி ஆயிற்றே என்று ஒருபொழுதும் அவளுடைய வாசற்படியை உதவி என்று கேட்டு மிதிக்காதவர்.
"அத்தை, நானே இந்தக் காய்கறி சூப்பைத் தயாரித்தேன்'' என்று கெளரி கொண்டு வந்து நீட்ட, நர்ஸின் உதவியோடு மெதுவாக எழுந்து அமர்ந்த மனோன்மணி, ஆவலோடு சூப்பை உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினாள்.
தன் வீட்டு சமையல்காரியின் சமையலையே சாப்பிட்டு, வெறுத்துப் போயிருந்த மனோன்மணியின் நாக்கு இந்தப் புதிய முறையில் தயாரிக்கப்பட்ட சூப் மிகவும் ருசித்தது.
கடந்த ஒரு மாதமாக விதவிதமாக இரண்டு, மூன்று பதார்த்தங்களைச் செய்து அசத்துவது, அத்தையை மெதுவாகத் தாங்கிப் பிடித்து நடக்க வைப்பது, அவள் வலியில் வேதனைப்படும் பொழுது எல்லாம் இனிமையான ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவள் மனதில் நம்பிக்கையை ஊட்டுவது, இன்முகத்துடன் வீட்டில் வளைய வந்து மேற்பார்வை இடுவது என்று குடும்பத்தலைவி படுத்துவிட்டதால் சோர்ந்து போயிருந்தக் குடும்பத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள்.
சுந்தரம் தனக்கு எட்டாதக் கனி என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். எனவே கெளரவம் கருதி அவன் முன் அதிகமாக வருவதில்லை. அவனும் அவளை இரண்டு மூன்று முறை பார்த்ததோடு சரி, ஆனால் அவள் தன் அம்மாவுக்குப் பேருதவி செய்கிறாள் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான்.
கெளரி விடைபெற்றுத் தன் வீட்டுக்குத் திரும்பும் நாளும் வந்தது.
"அத்தை நான் போயிட்டு வருகிறேன். உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வேகமாக நடக்காதீர்கள்'' என்றாள் கெளரி.
"அப்படியே செய்கிறேன் கெளரி, இந்தா இதை வாங்கிக் கொள் என்று மனோன்மணி ஒரு பெரிய வெள்ளித் தட்டை கெளரியின் முன் நீட்டினாள். அதில் ஒரு பட்டுப்புடவை பெரிய சரிகை பார்டருடன், உடல் முழுவதிலும் சரிகை நட்சத்திரங்களுடன் இருந்தது. அதோடு ஒரு நகைப்பெட்டியில் வைர பென்டன்ட்டோடு கூடிய ஆறு சவரன் மதிப்பு உள்ள தங்கச் சங்கிலி இருந்தது. மேலும் பூ, வெத்தலை, பாக்கு, பழங்கள் என்று இருந்தன.
"அத்தை இதெல்லாம் என்ன? உங்களைப் பார்த்துக் கொண்டதுக்குக் கூலியா? இதைக் கொடுத்து என்னை அவமானப்படுத்தாதீர்கள் அத்தை. என் அப்பா என்னை இங்கே அனுப்பியது, தன் தங்கைக்கு உதவி செய்ய. பாசத்துக்கு விலை பேசாதீங்க. இந்தப் பழங்களையும், பூவையும் நான் எடுத்துக்குறேன்'' என்று கூறிவிட்டு மனோன்மணி, சொக்கலிங்கம் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு விடைபெற்று விட்டாள்.
தன் மருமகளின் பெருந்தன்மையை எண்ணி எண்ணி மனோன்மணி பூரித்துப் போனாள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்று சொக்கலிங்கமும் நினைத்து மகிழ்ந்தார்.
மாதங்கள் சில ஓடி மறைந்தன. உறவினர் ஒருவர் சுந்தரத்துக்கு ஒரு நல்ல இடத்தில் அழகான, படித்த பெண் இருப்பதாகவும், அவளின் பெற்றோர் சுந்தரத்தை ஏதோ ஒரு விழாவில் பார்த்ததாகவும், பையனை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், மற்றவற்றைப் பற்றிப் பேசத் தன்னை அனுப்பியதாகவும் கூறினார்.
பெண்ணின் பெற்றோரைப் பற்றிக் கேட்டவுடன் சொக்கலிங்கம் மலைத்து போனார். இவரைப் போல நூறு மடங்கு பணம் படைத்தவர்கள். திருப்பூர், கோயம்பத்தூர், ஈரோடு, சேலம் என்று பல ஊர்களில் அவர்களுக்கு நூற்பு ஆலைகள் உள்ளன. அதுமட்டுமா, ஆடைகளை அழகுறத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறார்கள். கணபதி மில்ஸ் அண்டு எக்ஸ்போர்ட்டர்ஸ் என்றால் அந்தச் சுற்றுவட்டாரங்களில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அதன் ஏகபோக உரிமையாளரான கணபதியின் ஒரே செல்ல மற்றும் செல்வப் பெண்தான் ஷிவானி.
ஷிவானியைப் பார்த்த மாத்திரத்திலேயே சுந்தரத்திற்குப் பிடித்துப் போனது. தன்னுடைய இதயப் பீடத்தில் அவளை ஏற்றி அமர வைத்துவிட்டான்.
என்ன, பெண் பார்க்க வரும்பொழுது, குட்டைப் பாவாடையும், ஸ்லீவ்லெஸ் சட்டையும் அணிந்திருந்தது மனோன்மணியின் உள்ளத்தை உறுத்தியது. அதனால் என்ன மிகப் பெரிய இடத்துப் பெண், வெளிநாட்டில் படித்தவள், நம்ம வீட்டுக்கு வந்தால் மாறிவிடுவாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.
கல்யாணத்திற்குப் பத்து நாட்களே மிச்சம் இருந்தது. ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. சுந்தரமும், ஷிவானியும் தமது செல் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டதனால், அடிக்கடி அளவளாவிக் கொண்டனர், நேரிலும் சந்தித்துக் கொண்டனர்.
கோயம்பத்தூரில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தன் நண்பனைப் பார்ப்பதற்காக வந்த சுந்தரம் அவனோடு இரவு உணவை அருந்திவிட்டுக் கிளம்பவே நேரம் நடு இரவைத் தாண்டிவிட்டது. ஒரு மணி நேரத்தில் திருப்பூருக்குத் திரும்பிவிடலாம் என்று சுந்தரம் அவசரமாகக் கிளம்பினான். வாயிற்படியில் தன் காருக்காகக் காந்திருந்தவன் கண்களில் தென்பட்ட ஒரு பெண் ஷிவானியைப் போல இருக்கவே, சற்று உற்று நோக்கினான், அதற்குள் அவனின் உள்மனது அது ஷிவானியாக இருக்க முடியாது என்றது.
சரி, அருகில் சென்று பார்த்துவிடலாம் என்று வேகமாக நடந்து சென்றான்.
என்ன இது-? என்று சுந்தரத்தின் உள்ளம் திடுக்கிட்டது. மது போதையில், சரியாக நிற்கக் கூட முடியாதவளை அவளுடைய பாய்பிரண்ட் ஒருவன் தாங்கிப் பிடித்து இருந்தான். அவனும் குடிபோதையில் இருந்தான். ஷிவானியின் கையில் சிகரெட் வேறு புகைந்துக் கொண்டிருந்தது.
"ஏய் கன்ட்ரிஃப்ரூட், இதைப் போய் பெரிசுப்படுத்திக் கேட்கிறே. இதெல்லாம் இந்த மார்டர்ன் உலகத்தில் சகஜம் என்று உனக்குத் தெரியாதா? வெளிநாட்டில் படிச்சவன் தானே நீ. கல்யாணத்திற்கு முன்பே என்னைக் கேள்வி கேட்கிறே, ஆமாம் நான் குடிப்பேன், புகைப்பேன், எனக்கு நிறைய பாய்பிரெண்ட்ஸ் உண்டு, என் பெற்றோர் வற்புறுத்தறாங்களேன்னு உன்னைக் கல்யாணம் செய்துக்கச் சம்மதிச்சேன். இதைப்போய் நீ சீரியஸாக எடுத்துக்கிட்டே.
உங்க அம்மா நான் குட்டைப் பாவாடையில் வந்ததைப் பற்றி, என் அம்மாவிடம் கேள்வி கேட்டாங்களாமே? குடும்பமே காட்டுமிராண்டிங்க. நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடச் சொல்லப் போகிறேன்''.
"ஏன் இப்படி?'' என்று சுந்தரம் கேட்ட ஒற்றைச் சொல்லுக்கு, ருத்திர தாண்டவம் ஆடிய ஷிவானி கல்யாணத்தையும் நிறுத்தி விட்டாள். அழகான வெளி உருவத்துக்குள், அருவருப்பான குணம்.
மனோன்மணிக்கும், கணவர் சொக்கலிங்கத்திற்கும் அவமானத்தால் தலையை வெளியே காட்ட முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு மனசைத் தேற்றிக்கொண்டு, தன் அண்ணன் மகள் கெளரியைத் தன் மகனுக்குத் திருமணம் முடிக்க மனோன்மணி முடிவு செய்தாள். அவள் முடிவைச் சொக்கலிங்கமும் ஒத்துக் கொண்டார்.
அந்தோ பரிதாபம், அங்கே கெளரியின் அப்பா கந்தசாமி தன் மனைவியுடன் தன் தங்கையின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார், தன் மகளின் திருமணப் பத்திரிகையை கொடுப்பதற்காக.
கெளரியின் குடும்பப் பாங்கான அழகு, பெருந்தன்மை, உதவும் மனப்பாங்கு எல்லாம் முதலில் அவள் அத்தைக்கும், மாமனுக்கும் புரியவில்லையா? புரிந்தது, ஆனால் அந்தஸ்து என்ற பொய்யான தோற்றம் கெளரியின் உள் அழகை மறைத்துவிட்டது. இதுதான் மாயையா?
புறம் குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
( குறள் எண்: 277)
பொருள்: வெளித் தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனை போலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...