
கிருஷ்ணகிரி மாவட்டம் சு.நொரப்புக்குட்டை மலைவாழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக கடந்த 10ஆண்டுகளாக தமிழ்க் கற்பித்தலில் உலகப்புகழ் பெற்றவர். கா.ஜோதிலட்சுமி. இவர், குழந்தை நேய ஆசிரியர், தமிழ் நாட்டுப் பாடநூல் ஆசிரியர் (1, 2, 7ம் வகுப்பு) தமிழ் இணைய பல்கலைக்கழக நூல் ஆசிரியர், லண்டன் தமிழ்க் கழகக் நாட்டுப்பாட நூலுக்கு பின்னணி குரல், கென்யா தமிழ் பண்பாட்டு மன்றத்தோடு இணைந்து போட்டிகள் நடத்துபவர், உதய்ப்பூர் தேசிய அளவிலான பொம்மலாட்ட பயிற்சியாளர், புத்தாக்கப் பயிற்சியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நாமக்கல் கவியரசர் கலைத் தமிழ்ச்சங்கம் மற்றும் குறிஞ்சித் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு ஆலோசகர் என பல்வேறு விருதுகள் பெற்றவர். அவர், தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
க-கா, கி-கீ காணொலி புகழ் பெற்றது குறித்து ?
தொடக்கக் காலங்களில் கரடு, முரடான பாதைகளில் தனியாக பயணம் செய்வது பயமாகதான் இருக்கும். காரணம், மழை பெய்தால் ஒதுங்குவதற்கு கட்டடங்கள் இருக்காது. விலங்குகள் எதிரே வந்தாலும் பொறுமையாக கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். அப்படி சென்று கொண்டிருந்த காலத்தில் மலைவாழ் மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தருவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் குழந்தைக்கு வாங்குவது போன்று நொறுக்குதீணி, பென்சில், நோட்டு என்று அனைத்து பொருள்களையும் பள்ளிக் குழந்தைகளுக்கும் சேர்த்தே வாங்கி அன்பு பரிசாக அளித்தேன்.
இன்னும் சொல்லப் போனால் என்னுடைய சில ஆண்டுகள் ஊதியம் இருசக்கர வாகன பெட்ரோலுக்கும். பள்ளியின் செலவுக்கு மட்டுமே பயன்பெறும் வகையில் அமைந்திருந்தது. அதன் பிறகு நான் விடுமுறை எடுத்தாலும்; அம்மாணவர்கள் விடுமுறை எடுப்பதில்லை. ஆனாலும் இதுபோன்று வழங்கிக் கொண்டிருந்தாலும் நன்றாக இருக்காது. கற்பித்தலில் புதுமைகளை கையாள வேண்டும் என்று நினைத்த ஒரு பயிற்சியின்போது முதல் தடவையாக க-கா, கி-கீ தமிழ்க் கற்பித்தலை ஆடலுடன் அரங்கேற்றினேன். அப்போது ஒருவர் அந்த காணொலியை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர உடனே உலகம் முழுவதும் அது பரவியது. இப்போதும் பல்வேறு நாடுகளில் தமிழ் வழிக்கல்வி கற்பிக்கும் கல்வியாளர்கள்; அதை பின்பற்றுகின்றனர். அந்தப் பாடலை பின்பற்றி "அருவம்' திரைப்படத்தில் எடுத்தனர். அண்மையில் பல்வேறு தனியார் விளம்பரங்களிலும் அதை பயன்படுத்தி வருகின்றனர்.
கல்வியால் மாற்றத்தை உருவாக்குவது எப்படி?
கற்றலை இனிமையாக்கும் விதத்திலேயே கற்பித்தல் முறையை மேற்கொள்வேன். மாணவர்களின் வீட்டுச்சூழலையும் மனதையும் புரிந்து கொண்டுதான் கற்பிப்பேன். இனிமையான கற்பித்தல் மூலமாக மகிழ்வான கல்விச்சூழலை உருவாக்க இயலும் என உறுதியாக நம்புகிறேன். கல்வியால் மாற்றத்தையும் ஏற்றத்தையும் விளைவிக்க முடியும். எடுத்து காட்டு- மயங்கொலிகளை நடத்தும் பொழுது யானை, மான், முயல் போன்ற மாணவர்களை பிரித்துக்கொண்டு வல்லின-மெல்லின இடையின் எழுத்துகளை எளிதாகக் கற்பித்து விடலாம். என்னிடம் படித்த 17மாணவர்கள் முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்கு சென்று விட்டனர். இது போன்று நீட் தேர்வில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும் வெற்றியாகவும் கருதுகிறேன்.
மாணவர்களிடம் கிடைக்கும் மகிழ்ச்சி?
சில நேரங்களில பள்ளிக்கு தாமதமாகினால் உணவு எடுக்காமல் சென்று விடுவேன். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் எனது கையில் உணவு பை இருக்கிறதா? இல்லையா என்று மாணவர்கள் தினந்தோறும் கவனிப்பார்கள். என்னிடம் உணவு பை இல்லாவிட்டால், பள்ளியின் முதல் மணி அடிப்பதற்கு முன்பாக வீட்டிற்குச் சென்று தாயிடம் டீச்சர் சாப்பாடு கொண்டு வரவில்லை என்று சொல்லிவிட்டு ஒடிவருவார்கள். அவர்களும் மதிய உணவு இடைவெளியின் போது ஏதாவது சமைத்து எடுத்து வருவார்கள். அதுவும் ஒரு தனிப்பட்ட சுவையாகத் தான் இருக்கும். குழந்தைகளின் உலகம் அளப்பரியது. இங்கே மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்திற்கும் அளவேயில்லை.
பெற்ற விருதுகளும் சமூகப் பணிகளும்..
சிறந்த கல்விச்சிந்தனையாளர், கல்விச்சுடர், நல்லாசிரியர் கலைமாமணி, சிகரம் தொட்ட ஆசிரியர், தங்க மங்கை, நல்லாசிரியர் செம்மல், கல்வி ரத்னா, சிங்கப் பெண்ணே, வ.உ.சிதம்பரனார் இலக்கியப் பேரவை, ஆசிரிய அப்துல் கலாம், நல்லாசிரியர் சிகரம், ஆசிரிய மாமணி, திருநெல்வேலி லயன்ஸ் கிளப் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது, ஓசூர் ரோட்டரி கிளப் சார்பில் தேசத்தை உருவாக்குபவர் போன்ற 50- க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன்.
என் அப்பா, தாத்தா, பாட்டி, ஆச்சி ஆகிய அனைவரும் தேசப்பக்தியும் சமூக சேவையும் தொடர்புடைய நபர்கள் தான். எனது மாமானார் பல கிராமங்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீர் குழாய்கள் கொண்டு வருதல், புதிய பள்ளி கட்டடங்கள் உருவாக்குதல் போன்றவற்றை நடைமுறை படுத்தி மாநில அளவில் விருதும் பெற்றுள்ளார்.
மூதாதையர்கள் மரபு வழியாகத் தான் என்னுடைய குடும்பம்பத்தினரும் நலி
வடைந்த மக்களுக்கு தேவையான அரிசி மூட்டை, போர்வை, பாத்திரங்கள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். எய்டஸ், மாற்றுத் திறனாளிகள் போன்று பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.