தங்கத்துக்கு  தயாராகும்  வீராங்கனை!

"2014 -ஆம் ஆண்டு உடுப்பியில் நடந்த தசரா விளையாட்டுப் போட்டிகளின் போது, முதன்முறையாக ஈட்டி எறிதல் ( ஜாவ்லின் த்ரோ) போட்டியில் கலந்து கொண்டு 28 மீட்டர் தொலைவு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்றேன்.
தங்கத்துக்கு  தயாராகும்  வீராங்கனை!

"2014 -ஆம் ஆண்டு உடுப்பியில் நடந்த தசரா விளையாட்டுப் போட்டிகளின் போது, முதன்முறையாக ஈட்டி எறிதல் ( ஜாவ்லின் த்ரோ) போட்டியில் கலந்து கொண்டு 28 மீட்டர் தொலைவு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்றேன். அதுவரை நான் வட்டு எறிதல், குண்டு வீசுதல் போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தேனே தவிர ஈட்டியில் எறிதலில் அதிக பயிற்சி பெற்றதில்லை. என்னுடைய பயிற்சியாளரும், உடனிருந்தவர்களும் கொடுத்த ஊக்கம் காரணமாக போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றேன். இதுவே ஈட்டி எறிதல் பயிற்சி பெற வாய்ப்பாக அமைந்தது. எனக்கு பயிற்சியளிக்க ஜெகதீஷ் என்பவர் முன்வந்தார்'' என்று கூறுகிறார் உடுப்பியில் உள்ள பார்கூர் என்ற ஊரைச் சேர்ந்த 21 வயது கரிஷ்மா சானில்.

கரிஷ்மா பள்ளியில் படிக்கும்போதே கபடி, குண்டு வீசுதல், வட்டுஎறிதல், வாலிபால் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமோடு பங்கேற்பதுண்டு. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது , 2015 -ஆம் ஆண்டிலிருந்தே ஈட்டி எறிதலில் பயிற்சிப் பெறத் தொடங்கினார். மாநில அளவில் நடந்த போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றார். அதே ஆண்டில் தேசிய அளவில் காக்கி நாடாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட போது 37 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றவர், ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா, தேசிய அளவில் நடத்திய போட்டியில் தங்கம் வென்றார்.

கடந்த ஆறாண்டுகளில் சர்வதேச அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி எனப் பல பதக்கங்களை பெற்றுள்ள கரிஷ்மா, கூறுகையில், "" என்னைப் பொருத்தவரை இந்தப் பெருமை எல்லாம் என்னுடைய பயிற்சியாளர்களுக்கே உரியது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பயிற்சியாளர் எனக்கு பயிற்சியளித்துள்ளார். 2016- ஆம் ஆண்டு நான் முதன்முறையாக சர்வதேச அளவில் துருக்கியில் நடந்த வேர்ல்ட் ஸ்கூல் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றபோது ஈட்டி எறிதலில் எனக்கு ஜெகதீஷ் என்பவர் பயிற்சியளித்தார்.

முதலாமாண்டு பியூசி படிக்கும்போது, நான்காண்டுகள் சத்ய நாராயணா நாயக் என்பவர் எனக்கு பயிற்சியளித்தபோது, தென்மண்டல தேசிய விளையாட்டு வீரர்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே பெண்கள் பிரிவில் 44.74 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து அவரது சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்தேன். நேஷனல் ஜூனியர் பெடரேஷன் அத்லடிக் சாம்பியன் ஷிப் ( யூ20) போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு, யூனிவர்சிட்டி அளவில் நடந்த பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றேன். 2019 - ஆம் ஆண்டு உடுப்பியில் நடந்த தென்மண்டல தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டபோது 47.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து பதிவு செய்தேன். எதிர்பாராதவிதமாக 2020- ஆம் ஆண்டு என்னுடைய பயிற்சியாளர் சத்யநாராயனா நாயக் இறந்தது எனக்கு பெரும் இழப்பாக இருந்தது.

அதே ஆண்டில் பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டபோது, காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற இந்திய வீரர் காசிநாத் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். தற்போது அவர் புணேவில் உள்ள இந்திய ராணுவ முகாமில் ஈட்டி எறிதல் பயிற்சியாளராக உள்ளார். அது ராணுவ முகாம் என்பதால் வெளியிலிருக்கும் ஆண், பெண் யாராக இருந்தாலும் பயிற்சி பெற அனுமதிப்பதில்லை.

அதனால் அவர் தினமும் இணையதளம் மூலம் அனுப்பும் பயிற்சி குறிப்புகளை வைத்து பயிற்சிப் பெற்று வருகிறேன். தினமும் காலையிலும் மாலையிலும் நான் ஈட்டி எறியும் தூரத்தை பதிவு செய்து அனுப்புகிறேன். அது சரியா தவறா என்பது பற்றி காசிநாத் எனக்கு ஆலோசனை கூறுவார். இதுவரை நான் கலந்து கொண்ட போட்டிகளில், இன்டர்நேஷனல் சீனியர் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 49.03 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து நான்காவது இடத்தை பிடித்தது, என்னுடைய தனிப்பட்ட சாதனையாக கருதுகிறேன்.

அடுத்து செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 60-ஆவது நேஷனல் ஒபன் அத்லடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறேன். தொடர்ந்து 2024- ஆம் ஆண்டு ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில் பங்கேற்க தீவிரமாக பயிற்சிப் பெற்று வருகிறேன். அண்மையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நிரஜ் சோப்ரா, ஈட்டி ஏறிதலில் தங்கம் வென்றதை தொடர்ந்து பல இளம் வீரர்களும், வீராங்கனைகளும் ஈட்டி ஏறிதலில் மட்டுமின்றி பிற விளையாட்டுகளிலும் பயிற்சி பெற ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் கரிஷ்மா சானில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com